லேவியராகமம் 5:1-19

5  பின்பு அவர், “‘ஒருவன் பாவம் செய்வதைப் பார்க்கிறவனோ அதைப் பற்றித் தெரிந்தவனோ, அதற்குச் சாட்சியாக+ இருக்கிறான். அதனால், அதைத் தெரிவிக்க வேண்டுமென்ற அறிவிப்பை* கேட்டும் அவன் தெரிவிக்காமல் இருந்துவிட்டால் அவன் குற்றவாளி. அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.  ஒருவன் அசுத்தமான காட்டு மிருகங்களின் பிணத்தையோ அசுத்தமான வீட்டு விலங்குகளின் பிணத்தையோ கூட்டங்கூட்டமாகப் போகிற அசுத்தமான சிறு பிராணிகளின் பிணத்தையோ தொட்டால்,+ அதைத் தெரியாத்தனமாகத் தொட்டிருந்தாலும்கூட தீட்டுப்பட்டவனாகவும், குற்றமுள்ளவனாகவும் இருப்பான்.  மனுஷனைத் தீட்டுப்படுத்துகிற எதையாவது+ அல்லது தீட்டான எந்த மனுஷனையாவது ஒருவன் தெரியாத்தனமாகத் தொட்டுவிட்டால், அது தெரியவரும்போது அவன் குற்றமுள்ளவனாக இருப்பான்.  ஒருவன் ஏதோவொன்றைச் செய்வதாக அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டால், அது நல்ல காரியமோ கெட்ட காரியமோ, அப்படி அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டதை உணரும்போது குற்றமுள்ளவனாக இருப்பான்.*+  இப்படி ஏதோவொரு விஷயத்தில் ஒருவன் குற்றவாளியானால், தான் செய்த பாவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும்.+  அதோடு, குற்ற நிவாரண பலியை யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.+ அதாவது, பெண் செம்மறியாட்டுக் குட்டியையோ பெண் வெள்ளாட்டுக் குட்டியையோ பாவப் பரிகார பலியாகக் கொண்டுவர வேண்டும். அப்போது, குருவானவர் அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.  ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்கு வசதியில்லை என்றால், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ+ குற்ற நிவாரண பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் கொண்டுவர வேண்டும்.+  அவன் அவற்றைக் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். குருவானவர் ஒரு பறவையை முதலில் எடுத்து, கழுத்தைத் துண்டாக்காமல் அதைக் கிள்ளி, பாவப் பரிகார பலியாகச் செலுத்த வேண்டும்.  பாவத்துக்காகச் செலுத்தப்பட்ட அந்தப் பலியிலிருந்து கொஞ்சம் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் பக்கவாட்டில் தெளிக்க வேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ அது பாவப் பரிகார பலி. 10  குருவானவர் மற்றொரு பறவையை எடுத்து வழக்கமான முறைப்படி+ தகன பலியாகச் செலுத்த வேண்டும். அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ 11  இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர அவனுக்கு வசதியில்லை என்றால், ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு*+ நைசான மாவைப் பாவப் பரிகாரத்துக்கான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அதன்மேல் எண்ணெய் ஊற்றவோ சாம்பிராணியை வைக்கவோ கூடாது. அது பாவப் பரிகாரத்துக்கான காணிக்கை. 12  அதை அவன் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும். குருவானவர் அதிலிருந்து ஒரு கைப்பிடி மாவை எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாகப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அதாவது, யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகள்மேல் எரிக்க வேண்டும். அது பாவப் பரிகார பலி. 13  இப்படிப்பட்ட பாவங்களில் எதை அவன் செய்திருந்தாலும், அதற்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ மீதமுள்ள மாவு, உணவுக் காணிக்கையைப்+ போலவே குருவானவருக்குச் சொந்தமாகும்’”+ என்றார். 14  பின்பு யெகோவா மோசேயிடம் இப்படிச் சொன்னார்: 15  “யெகோவாவின் பரிசுத்த காரியங்களுக்கு* விரோதமாக ஒருவன் தெரியாத்தனமாகப் பாவம் செய்தால்,+ எந்தக் குறையுமில்லாத செம்மறியாட்டுக் கடாவைக் குற்ற நிவாரண பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+ அந்தச் செம்மறியாட்டுக் கடாவின் மதிப்பு எவ்வளவு என்பதைப் பரிசுத்த* வெள்ளி சேக்கலின்* கணக்குப்படி குருவானவர் தீர்மானிக்க வேண்டும்.+ 16  பரிசுத்த இடத்துக்கு விரோதமாகத் தான் செய்த பாவத்துக்கு அவன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்து குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ குருவானவர் குற்ற நிவாரண பலியாகிய செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தி அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.+ அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ 17  செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றை ஒருவன் தெரியாத்தனமாகச் செய்தாலும்கூட, குற்றமுள்ளவனாக இருப்பான். அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.+ 18  நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி, எந்தக் குறையும் இல்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவை அவன் கொண்டுவர வேண்டும். குற்ற நிவாரண பலியாக அதை குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ அவன் தெரியாத்தனமாகச் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும். 19  அது குற்ற நிவாரண பலி. அவன் யெகோவாவுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கிறான்.”

அடிக்குறிப்புகள்

பாவம் செய்தவருக்கோ அதைப் பற்றிச் சாட்சி சொல்லாதவருக்கோ சாபம் வரும் என்பது இந்த அறிவிப்பில் அநேகமாக உட்பட்டிருக்கலாம்.
அவன் தன்னுடைய வாக்கை நிறைவேற்றாததைப் பற்றி இங்கே சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட அல்லது அர்ப்பணிக்கப்பட்ட எல்லாவற்றையும் இவை குறிக்கின்றன.
வே.வா., “பரிசுத்த இடத்து.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா