யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 11:1-19

11  பின்பு, கோல்* போன்ற ஒரு நாணற்தண்டு+ என்னிடம் கொடுக்கப்பட்டது; அப்போது ஒரு குரல், “நீ எழுந்து, கடவுளுடைய பரிசுத்த இடத்தையும்* பலிபீடத்தையும் அளந்துபார், அங்கே வழிபடுகிறவர்களைக் கணக்கிடு.  ஆனால், பரிசுத்த இடத்துக்கு வெளியே இருக்கிற பிரகாரத்தை அளக்காமல் விட்டுவிடு. ஏனென்றால், அது மற்ற தேசத்து மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; பரிசுத்த நகரத்தை+ அவர்கள் 42 மாதங்களுக்கு மிதிப்பார்கள்.+  என்னுடைய இரண்டு சாட்சிகளை அனுப்புவேன்; அவர்கள் துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு 1,260 நாட்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்” என்று என்னிடம் சொன்னது.  பூமியின் எஜமானுக்கு முன்னால் நிற்கிற+ இரண்டு ஒலிவ மரங்களும்+ இரண்டு குத்துவிளக்குகளும்+ அந்த இரண்டு சாட்சிகளை அடையாளப்படுத்துகின்றன.  எதிரிகள் யாராவது அவர்களுக்குத் தீங்கு செய்ய நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து நெருப்பு வந்து அந்த எதிரிகளை எரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு செய்ய நினைக்கிற எவனும் இப்படித்தான் கொல்லப்பட வேண்டும்.  அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்கிற நாட்களில் மழை பெய்யாதபடி+ வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.+ அதோடு, தண்ணீரை இரத்தமாக்கவும்,+ விரும்பும்போதெல்லாம் பூமியை எல்லா விதமான தண்டனைகளால் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.  அவர்கள் சாட்சி கொடுத்து முடித்ததும், அதலபாதாளத்திலிருந்து மேலே வருகிற மூர்க்க மிருகம் அவர்களோடு போர் செய்து, அவர்களை ஜெயித்து, கொன்றுபோடும்.+  அவர்களுடைய பிணங்கள் மகா நகரத்தின் முக்கியத் தெருவில் கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும், எகிப்து என்றும் அடையாளப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. அங்கேதான் அவர்களுடைய எஜமான் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார்.  அவர்களுடைய பிணங்கள் அங்கே கிடப்பதைப் பல இனங்களையும் கோத்திரங்களையும் மொழிகளையும் தேசங்களையும் சேர்ந்தவர்கள் மூன்றரை நாட்களுக்குப்+ பார்ப்பார்கள். ஆனால், அவற்றைக் கல்லறையில் வைப்பதற்கு விடமாட்டார்கள். 10  அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியில் குடியிருப்பவர்களை வேதனைப்படுத்தியதால், அந்த இரண்டு பேரும் செத்துப்போனதை நினைத்து அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களைக் கொடுத்துக்கொள்வார்கள். 11  மூன்றரை நாட்களுக்குப் பின்பு, கடவுள் அவர்களுக்கு உயிர்சக்தி கொடுத்தார்.+ அப்போது, அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைப் பார்த்த எல்லாரும் மிகவும் பயந்துபோனார்கள். 12  பின்பு, வானத்திலிருந்து உரத்த குரல் ஒன்று, “இங்கே ஏறி வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்வதைக் கேட்டார்கள். அதன்படியே, அவர்கள் மேகத்தில் ஏறி வானத்துக்குப் போனார்கள். அவர்களுடைய எதிரிகள் அவர்களைப் பார்த்தார்கள். 13  அப்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரத்தில் பத்திலொரு பகுதி அழிந்தது. அந்த நிலநடுக்கத்தால் 7,000 பேர் கொல்லப்பட்டார்கள். மற்றவர்கள் பயந்துபோய், பரலோகத்தின் கடவுளை மகிமைப்படுத்தினார்கள். 14  இரண்டாவது கேடு+ போய்விட்டது. இதோ! மூன்றாவது கேடு சீக்கிரமாக வரப்போகிறது. 15  ஏழாவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார்.+ அப்போது, பரலோகத்தில் உரத்த குரல்கள் முழங்கி, “உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும்+ அவருடைய கிறிஸ்துவுக்கும்+ சொந்தமான அரசாங்கமானது. அவர் என்றென்றும் ராஜாவாக ஆட்சி செய்வார்”+ என்றன. 16  கடவுளுக்கு முன்னால் தங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும்+ சாஷ்டாங்கமாக விழுந்து கடவுளை வணங்கி, 17  “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+ 18  ஆனால், தேசங்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. அப்போது உங்களுடைய கடும் கோபத்தைக் காட்டினீர்கள். இறந்தவர்களை நியாயந்தீர்ப்பதற்கும், உங்களுடைய அடிமைகளாகிய தீர்க்கதரிசிகள்,+ பரிசுத்தவான்கள், உங்களுடைய பெயருக்குப் பயந்து நடக்கிற சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய எல்லாருக்கும் பலன் கொடுப்பதற்கும்+ குறித்த காலம் வந்துவிட்டது. பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்குவதற்கான* காலமும் வந்துவிட்டது”+ என்று சொன்னார்கள். 19  அப்போது, பரலோகத்தில் கடவுளுடைய பரிசுத்த இடம்* திறக்கப்பட்டது. அவருடைய ஒப்பந்தப் பெட்டி அவருடைய பரிசுத்த இடத்தில்+ காணப்பட்டது. அதோடு, மின்னல்களும் குரல்களும் இடிமுழக்கங்களும் நிலநடுக்கமும் வந்தன, மிகப் பெரிய ஆலங்கட்டிகளும் விழுந்தன.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அளவுகோல்.”
அதாவது, “ஆலயத்தின் பரிசுத்த அறையையும் மகா பரிசுத்த அறையையும் கொண்ட மையப் பகுதியையும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “அழிக்கிறவர்களை அழிப்பதற்கான.”
அதாவது, “ஆலயத்தின் மகா பரிசுத்த அறை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா