யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 20:1-15
20 பின்பு, ஒரு தேவதூதர் அதலபாதாளத்தின் சாவியையும்+ மிகப் பெரிய சங்கிலியையும் தன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்.
2 அவர் பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பை,+ அதாவது பிசாசாகிய+ சாத்தானை,+ பிடித்து 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போட்டார்.
3 அந்த 1,000 வருஷங்கள் முடியும்வரை தேசங்களை அவன் ஏமாற்றாதபடி அவனை அதலபாதாளத்துக்குள்+ தள்ளியடைத்து, அதற்கு முத்திரை போட்டார். இதற்குப் பின்பு, அவன் கொஞ்சக் காலத்துக்கு விடுதலை செய்யப்பட வேண்டும்.+
4 பின்பு, சிம்மாசனங்களைப் பார்த்தேன். அதன்மேல் உட்கார்ந்திருந்தவர்களுக்கு நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டது. இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் கொல்லப்பட்டவர்களை* பார்த்தேன். அவர்கள் மூர்க்க மிருகத்தையோ அதன் உருவத்தையோ வணங்காதவர்கள், தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதன் அடையாளக் குறியைப் பெறாதவர்கள்.+ அவர்கள் உயிரோடு எழுந்து கிறிஸ்துவுடன் 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்தார்கள்.+
5 (மரணமடைந்த மற்றவர்கள்+ அந்த 1,000 வருஷங்கள் முடியும்வரை உயிரோடு எழுந்திருக்கவில்லை.) இதுதான் முதலாம் உயிர்த்தெழுதல்.+
6 முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்,+ பரிசுத்தமானவர்கள்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்துக்கு+ அதிகாரம் இல்லை;+ இவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாக இருந்து,+ அவரோடு 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+
7 அந்த 1,000 வருஷங்கள் முடிந்த உடனேயே சாத்தான் தன்னுடைய சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான்.
8 பூமியின் நான்கு திசைகளிலும் இருக்கிற தேசங்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றுவதற்காகவும், அவர்களைப் போருக்குக் கூட்டிச்சேர்ப்பதற்காகவும் புறப்பட்டுப் போவான். அவர்கள் கடற்கரை மணலைப் போல் எண்ண முடியாத அளவுக்கு இருப்பார்கள்.
9 அவர்கள் பூமி முழுவதும் போய், பரிசுத்தவான்களுடைய முகாமையும் பிரியமான நகரத்தையும் வளைத்துக்கொள்வார்கள். ஆனால், பரலோகத்திலிருந்து நெருப்பு வந்து அவர்களைச் சுட்டெரித்துவிடும்.+
10 அதோடு, அவர்களை ஏமாற்றிக்கொண்டிருந்த பிசாசு, நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரியில் தள்ளப்படுவான். அங்கேதான் மூர்க்க மிருகமும்+ போலித் தீர்க்கதரிசியும் தள்ளப்பட்டிருந்தார்கள்.+ அவர்கள் இரவும் பகலும் என்றென்றுமாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள்.*
11 பின்பு, பெரிய வெள்ளைச் சிம்மாசனத்தையும் அதில் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்.+ அவருக்கு முன்னால் பூமியும் வானமும் மறைந்துபோயின,+ இடம் தெரியாமல் காணாமல்போயின.
12 இறந்துபோன பெரியவர்களும் சிறியவர்களும் சிம்மாசனத்துக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தேன். அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் சுருள்+ என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது. அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடியே, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+
13 கடல் தன்னிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தது; அதேபோல், மரணமும் கல்லறையும்* தங்களிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+
14 மரணமும் கல்லறையும்* நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டன.+ இந்த நெருப்பு ஏரி+ இரண்டாம் மரணத்தைக்+ குறிக்கிறது.
15 வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள்+ எல்லாரும் நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ நே,மொ., “கோடாலியால் கொல்லப்பட்டவர்களை.”
^ வே.வா., “அடைக்கப்பட்டிருப்பார்கள்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.