யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 9:1-21

9  ஐந்தாவது தேவதூதர் தன் எக்காளத்தை ஊதினார்.+ அப்போது, பரலோகத்திலிருந்து பூமியின் மீது விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அதலபாதாளத்தின் சாவி+ அவருக்குக் கொடுக்கப்பட்டது.  அவர் அதலபாதாளத்தைத் திறந்தார்; அப்போது, பெரிய உலையிலிருந்து வருகிற புகையைப் போல் அதிலிருந்து புகை வந்தது; அந்தப் புகையால் சூரியனும் காற்றுமண்டலமும் இருண்டுபோயின.+  அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் கிளம்பி பூமிக்கு வந்தன.+ பூமியிலுள்ள தேள்களுக்கு இருக்கிற அதே அதிகாரம் அவற்றுக்கும் கொடுக்கப்பட்டது.  பூமியிலுள்ள எந்தச் செடிகொடிக்கோ தாவரத்துக்கோ மரத்துக்கோ தீங்கு செய்யாமல், நெற்றிகளில் கடவுளுடைய முத்திரை+ இல்லாத ஆட்களுக்கு மட்டும்தான் தீங்கு செய்ய வேண்டுமென்று அவற்றுக்குச் சொல்லப்பட்டது.  ஆனால், அவர்களைக் கொல்வதற்கான அதிகாரம் அவற்றுக்குக் கொடுக்கப்படவில்லை. ஐந்து மாதம்வரை வேதனைப்படுத்துவதற்குத்தான் அதிகாரம் கொடுக்கப்பட்டது. அந்த வேதனை, தேள் கொட்டும்போது ஏற்படும் வேதனையைப் போன்றது.+  அந்த நாட்களில் மனிதர்கள் சாவைத் தேடிப் போவார்கள், ஆனால், ஒருபோதும் அதைக் கண்டடைய மாட்டார்கள். சாக விரும்புவார்கள், ஆனால் சாவு அவர்களைவிட்டு ஓடிக்கொண்டே இருக்கும்.  அந்த வெட்டுக்கிளிகளின் தோற்றம் போருக்குத் தயார் செய்யப்பட்ட குதிரைகளைப் போல் இருந்தது.+ அவற்றின் தலைகளில் தங்கக் கிரீடத்தைப் போன்ற கிரீடங்கள் இருந்தன. அவற்றின் முகங்கள் மனித முகங்களைப் போல் இருந்தன.  ஆனால், அவற்றின் முடி பெண்களின் கூந்தலைப் போல் இருந்தது. அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களைப் போல் இருந்தன.+  அவற்றின் மார்பில் இரும்புக் கவசத்தைப் போன்ற கவசங்கள் இருந்தன. அவற்றின் சிறகுகள் எழுப்பிய சத்தம், குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்கள் வேகமாகப் போகிற சத்தத்தைப் போல் இருந்தது.+ 10  அதோடு, தேள்களைப் போல் அவற்றின் வால்களில் கொடுக்குகள் இருந்தன; ஐந்து மாதம் மனிதர்களுக்குத் தீங்கு உண்டாக்கும் அதிகாரம் அவற்றின் வால்களுக்கு இருந்தது.+ 11  அதலபாதாளத்தின் தேவதூதர்தான்+ அவற்றுக்கு ராஜா. எபிரெய மொழியில் அவருடைய பெயர் அபெத்தோன்,* கிரேக்க மொழியில் அவருடைய பெயர் அப்பொல்லியோன்.* 12  முதலாவது கேடு போய்விட்டது. இதோ! இவற்றுக்குப் பின்பு, இன்னும் இரண்டு கேடுகள்+ வரப்போகின்றன. 13  ஆறாவது தேவதூதர்+ தன்னுடைய எக்காளத்தை ஊதினார்.+ அப்போது, கடவுளுக்கு முன்பாக இருந்த தங்கப் பீடத்தின்+ முனைகளிலிருந்து* வந்த ஒரு குரலைக் கேட்டேன். 14  அது, எக்காளத்தை வைத்திருந்த ஆறாவது தேவதூதரிடம், “பெரிய ஆறான யூப்ரடிசில்+ கட்டப்பட்டிருக்கிற நான்கு தேவதூதர்களை அவிழ்த்துவிடு” என்று சொன்னது. 15  அப்போது, மனிதர்களில் மூன்றிலொரு பகுதியினரைக் கொல்வதற்கான நேரம், நாள், மாதம், வருஷத்துக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த அந்த நான்கு தேவதூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். 16  குதிரைப் படைகளின் எண்ணிக்கை சொல்லப்படுவதைக் கேட்டேன்; அது இருபது கோடி. 17  குதிரைகளையும் அவற்றின் மீது ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் பார்த்தேன்; அவர்கள் நெருப்பு போன்ற சிவந்த நிறமும், கருநீல நிறமும், கந்தகம் போன்ற மஞ்சள் நிறமும் உடைய மார்புக் கவசங்களைப் போட்டிருந்தார்கள். குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போல்+ இருந்தன; அவற்றின் வாய்களிலிருந்து நெருப்பும் புகையும் கந்தகமும் வந்தன. 18  அவற்றின் வாய்களிலிருந்து வந்த நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய இந்த மூன்று தண்டனைகளால் மனிதர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்பட்டார்கள். 19  அந்தக் குதிரைகளின் அதிகாரம் அவற்றின் வாய்களிலும் வால்களிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புகளைப் போல் இருந்தன, தலைகளோடு இருந்தன; அந்த வால்களால் அவை தீங்கு செய்தன. 20  இந்தத் தண்டனைகளால் கொல்லப்படாத மற்ற மனிதர்கள் தங்களுடைய கைவேலைப்பாடுகளை வணங்குவதைவிட்டு மனம் திருந்தவில்லை; பேய்களையும், தங்கம், வெள்ளி, செம்பு, கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளையும், அதாவது பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும்,+ வணங்குவதை விட்டுவிடவில்லை. 21  அதோடு கொலை, ஆவியுலகத் தொடர்பு, பாலியல் முறைகேடு,* திருட்டு ஆகியவற்றைவிட்டு அவர்கள் மனம் திருந்தவில்லை.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “அழிக்கிறவர்.”
அர்த்தம், “அழிவு.”
நே.மொ., “கொம்புகளிலிருந்து.” அதாவது, “கொம்பு போன்ற நான்கு முனைகளிலிருந்து.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா