கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 15:1-58
15 சகோதரர்களே, நான் சொன்ன நல்ல செய்தியை+ உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; அதை நீங்கள் ஏற்றுக்கொண்டதோடு அதன்படி நடந்தும் வருகிறீர்கள்.
2 அந்த நல்ல செய்தியை உறுதியாகப் பிடித்துக்கொண்டால், அதன் மூலம் மீட்புப் பெறுவீர்கள்; இல்லையென்றால், நீங்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆனதே வீணாக இருக்கும்.
3 நான் பெற்றுக்கொண்டதும் உங்களிடம் ஒப்படைத்ததுமாகிய மிக முக்கியமான செய்தி இதுதான்: வேதவசனங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.+
4 பின்பு அடக்கம் செய்யப்பட்டார்;+ ஆம், வேதவசனங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி,+ மூன்றாம் நாளில்+ உயிரோடு எழுப்பப்பட்டார்.+
5 பின்பு கேபாவுக்கும்,*+ அதன் பின்பு பன்னிரண்டு பேருக்கும்+ தோன்றினார்.
6 பின்பு, ஒரே நேரத்தில் 500-க்கும் அதிகமான சகோதரர்களுக்குத் தோன்றினார்;+ அவர்களில் பெரும்பாலோர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள், சிலரோ இறந்துவிட்டார்கள்.*
7 பின்பு யாக்கோபுக்கும்,+ அதன் பின்பு எல்லா அப்போஸ்தலர்களுக்கும் தோன்றினார்;+
8 கடைசியாக, குறைமாதத்தில் பிறந்தவனைப் போலிருக்கிற எனக்கும் தோன்றினார்.+
9 அப்போஸ்தலர்கள் எல்லாரிலும் நான் அற்பமானவன்; கடவுளுடைய சபையைக் கொடுமைப்படுத்தியதால்+ அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குக்கூட தகுதியில்லாதவன்.
10 ஆனாலும், கடவுளுடைய அளவற்ற கருணையால் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன்; அவர் எனக்குக் காட்டிய அளவற்ற கருணை வீண்போகவில்லை; அவர்கள் எல்லாரையும்விட நான் அதிகமாகவே உழைத்தேன்; இருந்தாலும், நானாக உழைக்கவில்லை, என்னிடம் இருக்கிற கடவுளுடைய அளவற்ற கருணையே என்னை அப்படி உழைக்க வைத்தது.
11 நானும் சரி, அவர்களும் சரி, இதைத்தான் பிரசங்கிக்கிறோம், இதைத்தான் நீங்களும் நம்பினீர்கள்.
12 கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று பிரசங்கிக்கப்பட்டு வரும்போது,+ இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
13 இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், கிறிஸ்துவும் உயிரோடு எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.
14 கிறிஸ்து உயிரோடு எழுப்பப்படவில்லை என்றால், நாம் பிரசங்கிப்பது நிச்சயமாகவே வீணாக இருக்கும், நம்முடைய விசுவாசமும் வீணாக இருக்கும்.
15 அதுமட்டுமல்ல, கடவுளுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்கிறவர்களாகவும் ஆகிவிடுவோம்.+ ஆம், இறந்தவர்கள் உண்மையில் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், இறந்துபோன கிறிஸ்துவைக் கடவுள் உயிரோடு எழுப்பியதாக நாம் சாட்சி சொல்லும்போது+ அவருக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்கிறவர்களாக ஆகிவிடுவோம்.
16 இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், கிறிஸ்துவும் உயிரோடு எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.
17 கிறிஸ்து உயிரோடு எழுப்பப்படவில்லை என்றால், உங்கள் விசுவாசம் வீணாக இருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில்தான் இருப்பீர்கள்.+
18 சொல்லப்போனால், கிறிஸ்துவின் சீஷர்களாயிருந்து இறந்தவர்களும் அழிந்துபோனவர்களாகத்தான் இருப்பார்கள்.+
19 இன்றுள்ள வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துமேல் நாம் நம்பிக்கை வைத்தால், மற்ற எல்லாரையும்விட நாம்தான் மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்போம்.
20 ஆனாலும், இறந்தவர்களில் முதல் நபராக* கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்.+
21 ஒரே மனிதனால் மரணம் வந்தது,+ அதேபோல் ஒரே மனிதனால் உயிர்த்தெழுதலும் வருகிறது.+
22 ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல்,+ கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.+
23 ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் உயிரோடு எழுப்பப்படுவார்கள்; முதல் நபராக* உயிரோடு எழுப்பப்பட்டவர் கிறிஸ்து;+ பின்பு, கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது உயிரோடு எழுப்பப்படுவார்கள்.+
24 அதன் பின்பு, முடிவில், அவர் எல்லா அரசாங்கத்தையும் எல்லா அதிகாரத்தையும் எல்லா வல்லமையையும் ஒழித்துவிட்டு,+ அவருடைய கடவுளாகவும் தகப்பனாகவும் இருப்பவரிடமே ஆட்சியை* ஒப்படைப்பார்.
25 ஆனால், எல்லா எதிரிகளையும் அவருடைய காலடியில் கடவுள் வீழ்த்தும்வரை அவர் ராஜாவாக ஆட்சி செய்ய வேண்டும்.+
26 ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம்.+
27 கடவுள் “எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தினார்.”+ ஆனால், ‘எல்லாமே அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது’ என்று சொல்லும்போது,+ எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தியவர் அவருக்குக் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாக இருக்கிறது.+
28 எல்லாமே மகனுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட பின்பு, எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்திய கடவுளுக்கு மகனும் கீழ்ப்பட்டிருப்பார்.+ அப்போது, கடவுள்தான் எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.+
29 இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், இறந்தவர்களாய் இருப்பதற்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு என்ன பிரயோஜனம்?+ இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படவே மாட்டார்கள் என்றால், அப்படி இறந்தவர்களாய் இருப்பதற்காக அவர்கள் ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
30 அதோடு, நாம் ஏன் எந்நேரமும் ஆபத்தில் இருக்கிறோம்?+
31 தினமும் நான் சாவை எதிர்ப்படுகிறேன்; சகோதரர்களே, நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் சீஷனாகிய நான் உங்களை நினைத்து சந்தோஷப்படுவது உண்மையாக இருப்பதுபோல் இதுவும் உண்மைதான்.
32 நான் எபேசுவில் கொடிய மிருகங்களோடு போராடினேனே,+ மற்றவர்களைப் போலவே* நானும் போராடியிருந்தால், எனக்கு என்ன நன்மை? இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், “சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்”+ என்று இருக்கலாமே!
33 ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை* கெடுத்துவிடும்.+
34 அதனால், மனத்தெளிவு அடையுங்கள்; நீதியின்படி நடங்கள்; பாவம் செய்துகொண்டே இருக்காதீர்கள். உங்களில் சிலருக்குக் கடவுளைப் பற்றிய அறிவே இல்லை; உங்களை வெட்கப்படுத்துவதற்காக இதைச் சொல்கிறேன்.
35 ஆனாலும், “இறந்தவர்கள் எப்படி உயிரோடு எழுப்பப்படுவார்கள்? எப்படிப்பட்ட உடலோடு வருவார்கள்?”+ என்று ஒருவன் கேட்கலாம்.
36 புத்தியில்லாதவனே! நீ விதைக்கிற விதை செத்தால் தவிர உயிர் பெறாது.
37 நீ விதைக்கிறபோது, முளைத்த பயிரை விதைக்காமல், வெறும் விதையைத்தான் விதைக்கிறாய்; அது கோதுமை விதையாகவோ வேறொரு விதையாகவோ இருக்கலாம்.
38 ஆனால், கடவுள் தனக்குப் பிரியமானபடி அதற்கு ஓர் உடலைக் கொடுக்கிறார்; ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உடலைக் கொடுக்கிறார்.
39 எல்லா உடலும் ஒரே விதமான உடல் கிடையாது; மனிதர்களுடைய உடல் வேறு, மிருகங்களுடைய உடல் வேறு, பறவைகளுடைய உடல் வேறு, மீன்களுடைய உடல் வேறு.
40 பரலோகத்துக்குரிய உடல்களும் இருக்கின்றன,+ பூமிக்குரிய உடல்களும் இருக்கின்றன;+ பரலோகத்துக்குரிய உடல்களின் மகிமை ஒரு விதம், பூமிக்குரிய உடல்களின் மகிமை ஒரு விதம்;
41 சூரியனின் மகிமை ஒரு விதம், சந்திரனின் மகிமை ஒரு விதம்,+ நட்சத்திரங்களின் மகிமை ஒரு விதம்; சொல்லப்போனால், மகிமையில் நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் வேறுபடுகிறது.
42 இறந்தவர்களுடைய உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்; அழிவுள்ளதாக விதைக்கப்படுவது அழிவில்லாததாக உயிர்த்தெழுப்பப்படும்.+
43 மதிப்பில்லாததாக விதைக்கப்படுவது மகிமையுள்ளதாக உயிர்த்தெழுப்பப்படும்;+ பலவீனமுள்ளதாக விதைக்கப்படுவது பலமுள்ளதாக உயிர்த்தெழுப்பப்படும்.+
44 பூமிக்குரிய உடலாக விதைக்கப்படுவது பரலோகத்துக்குரிய உடலாக எழுப்பப்படும்; பூமிக்குரிய உடல் இருக்கிறதென்றால் பரலோகத்துக்குரிய உடலும் இருக்கிறது.
45 பூமிக்குரிய உடலைப் பெற்ற “முதல் ஆதாம் உயிருள்ளவன் ஆனான்” என்று எழுதப்பட்டிருக்கிறது;+ பரலோகத்துக்குரிய உடலைப் பெற்ற கடைசி ஆதாம் உயிர் கொடுக்கிறவர் ஆனார்.+
46 இருந்தாலும், பரலோகத்துக்குரிய உடல் முந்தினதல்ல, பூமிக்குரிய உடல்தான் முந்தினது; பரலோகத்துக்குரிய உடல் பிந்தினது.
47 முதல் மனிதன் பூமியிலிருந்து வந்தவன், மண்ணால் உண்டானவன்;+ இரண்டாம் மனிதரோ பரலோகத்திலிருந்து வந்தவர்.+
48 மண்ணால் உண்டான மனிதனைப் போலவே மண்ணால் உண்டான மற்றவர்களும் இருப்பார்கள்; பரலோகத்துக்குரியவரைப் போலவே பரலோகத்துக்குரிய மற்றவர்களும் இருப்பார்கள்.+
49 நாம் மண்ணால் உண்டானவனுடைய சாயலில் இருப்பதுபோல்,+ பரலோகத்துக்குரியவருடைய சாயலிலும் இருப்போம்.+
50 ஆனாலும் சகோதரர்களே, நான் சொல்வது இதுதான்: மனித உடலோடு* கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போக முடியாது; அழிவுள்ளது அழியாமையைப் பெற முடியாது.
51 இதோ! உங்களுக்குப் பரிசுத்த ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன்: நாம் எல்லாரும் மரணத்தில் தூங்கப்போவதில்லை.
52 ஆனால் கடைசி எக்காளம் முழங்கும்போது, ஒரே நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில், நாம் எல்லாரும் மாற்றம் அடைவோம்.+ எக்காளம் முழங்கும்;+ அப்போது, இறந்தவர்கள் அழிவில்லாதவர்களாக உயிரோடு எழுப்பப்படுவார்கள்; நாமும் மாற்றம் அடைவோம்.
53 ஏனென்றால், அழிவுக்குரியது அழியாமையுள்ளதாக மாற வேண்டும்;+ சாவுக்குரியது சாவாமையுள்ளதாக மாற வேண்டும்.+
54 அழிவுக்குரியது அழியாமையுள்ளதாகவும், சாவுக்குரியது சாவாமையுள்ளதாகவும் மாறும்போது, எழுதப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் நிறைவேறும்: “மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டது.”+
55 “மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?”+
56 மரணத்தை உண்டாக்குகிற கொடுக்கு பாவம்,+ பாவத்துக்குப் பலம் தருவது திருச்சட்டம்.+
57 ஆனால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு வெற்றி தருகிற கடவுளுக்கு நன்றி!+
58 அதனால், என் அன்பான சகோதரர்களே, நம் எஜமானுக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாதென்று அறிந்து,+ உறுதியானவர்களாகவும்+ அசைக்க முடியாதவர்களாகவும் எந்நேரமும் நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாகவும் இருங்கள்.+
அடிக்குறிப்புகள்
^ பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.
^ நே.மொ., “தூங்கிவிட்டார்கள்.”
^ நே.மொ., “முதல் விளைச்சலாக.”
^ நே.மொ., “முதல் விளைச்சலாக.”
^ நே.மொ., “அரசாங்கத்தை.”
^ அல்லது, “மனித கண்ணோட்டத்தில்.”
^ வே.வா., “ஒழுக்கநெறிகளை.”
^ நே.மொ., “சதையும் இரத்தமும்.”