1 சாமுவேல் 10:1-27
10 பின்பு சாமுவேல், குடுவையைத் திறந்து சவுலின் தலையில் எண்ணெய் ஊற்றினார்.+ அதன்பின், அவருக்கு முத்தம் கொடுத்துவிட்டு, “யெகோவா உன்னைத் தன்னுடைய சொத்தாகிய ஜனங்களுக்குத்+ தலைவனாக அபிஷேகம் செய்திருக்கிறார்.+
2 இன்றைக்கு நீ இங்கிருந்து போகும் வழியில், பென்யமீன் பிரதேசத்தில் இருக்கிற செல்சாவில், ராகேலின் கல்லறைக்குப்+ பக்கத்திலே இரண்டு பேரைப் பார்ப்பாய். அவர்கள் உன்னிடம், ‘நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற கழுதைகள் கிடைத்துவிட்டன. இப்போது உன் அப்பாவுக்கு உங்களைப் பற்றித்தான் கவலை.+ “என் மகனைக் காணோமே, என்ன செய்வேன்?” என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்’ என்று சொல்வார்கள்.
3 நீ அங்கிருந்து புறப்பட்டு தாபோரில் இருக்கிற பெரிய மரத்துக்குப் பக்கத்தில் போ. உண்மைக் கடவுளை வணங்க பெத்தேலுக்குப்+ போய்க்கொண்டிருக்கிற மூன்று பேரை அங்கே பார்ப்பாய். ஒருவர் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும் இன்னொருவர் மூன்று ரொட்டிகளையும் மற்றொருவர் ஒரு பெரிய ஜாடி நிறைய திராட்சமதுவையும் வைத்திருப்பார்.
4 அவர்கள் உன்னை நலம் விசாரித்துவிட்டு, உனக்கு இரண்டு ரொட்டிகள் கொடுப்பார்கள். நீ அவற்றை வாங்கிக்கொள்.
5 பின்பு, உண்மைக் கடவுளின் மலையில் பெலிஸ்தியர்களின் காவல்படை இருக்கிற இடத்துக்குப் போ. அங்கிருக்கிற நகரத்துக்குள் நீ போகும்போது, ஆராதனை மேட்டிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தைப் பார்ப்பாய். அவர்கள் தீர்க்கதரிசனம்* சொல்லிக்கொண்டு போகும்போது, அவர்களுக்கு முன்னால் ஜனங்கள் நரம்பிசைக் கருவியையும் கஞ்சிராவையும் புல்லாங்குழலையும் யாழையும் வாசித்துக்கொண்டு போவார்கள்.
6 அப்போது நீ யெகோவாவின் சக்தியைப் பெற்று,+ அவர்களோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்வாய். ஒரு புது ஆளாக மாறிவிடுவாய்.+
7 இந்த எல்லா அடையாளங்களும் நிறைவேறிய பின்பு முடிந்தளவுக்கு உன் பொறுப்பை நன்றாக நிறைவேற்று. ஏனென்றால், உண்மைக் கடவுள் உன்னோடு இருக்கிறார்.
8 எனக்கு முன்னதாகவே நீ கில்காலுக்குப்+ போ. தகன பலிகளும் சமாதான பலிகளும் செலுத்துவதற்காக ஏழு நாட்கள் கழித்து நான் அங்கே வருவேன். அதுவரை நீ எனக்காகக் காத்திரு. நீ செய்ய வேண்டியதை நான் வந்து சொல்வேன்” என்றார்.
9 சாமுவேலிடமிருந்து சவுல் புறப்பட்ட உடனேயே, கடவுள் அவருடைய சுபாவத்தை* மாற்றத் தொடங்கினார். சாமுவேல் சொன்ன எல்லா சம்பவங்களும் அன்றைக்கே நடந்தன.
10 சவுலும் அவருடைய வேலைக்காரனும் அந்த மலைக்குப் போனபோது, தீர்க்கதரிசிகள் அவரைச் சந்தித்தார்கள். உடனே, அவருக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது.+ அவர்களுடன் சேர்ந்து அவர் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார்.+
11 அவரைப் பற்றி ஏற்கெனவே தெரிந்தவர்கள், தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து அவர் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தார்கள். அப்போது, “கீசின் மகன் சவுலுக்கு என்ன ஆனது? சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள்.
12 அங்கிருந்த ஓர் ஆள், “இவர்களுடைய அப்பா யார்?” என்று கேட்டார். இப்படித்தான், “சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்ற வழக்குச்சொல் வந்தது.+
13 சவுல் தீர்க்கதரிசனம் சொல்லி முடித்துவிட்டு ஆராதனை மேட்டுக்குப் போனார்.
14 பிற்பாடு, சவுலுடைய அப்பாவின் சகோதரன் அவரையும் வேலைக்காரனையும் பார்த்து, “எங்கே போனீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சவுல், “கழுதைகளைத் தேடிப்போனோம்.+ ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் சாமுவேலிடம் போனோம்” என்று சொன்னார்.
15 அதற்கு அவர், “சாமுவேல் உங்களிடம் என்ன சொன்னார்? தயவுசெய்து சொல்லுங்கள்” என்றார்.
16 சவுல் அவரிடம், “கழுதைகள் கிடைத்துவிட்டதாகச் சொன்னார்” என்றார். ஆனால், தான் ராஜாவாகப்போவதைப் பற்றி சாமுவேல் சொன்ன விஷயத்தைச் சொல்லவில்லை.
17 பின்பு, மக்கள் எல்லாரையும் மிஸ்பாவில் யெகோவாவுக்கு முன்பாக சாமுவேல் வரவழைத்தார்.+
18 அவர்களிடம், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நான்தான் உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ எகிப்தின் பிடியிலிருந்தும் உங்களை அடக்கி ஒடுக்கிய எல்லா ராஜ்யங்களின் பிடியிலிருந்தும் நான்தான் உங்களைக் காப்பாற்றினேன்.
19 ஆனால், எல்லா கஷ்டங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் உங்களைக் காப்பாற்றிய உங்கள் கடவுளாகிய என்னை ஒதுக்கித்தள்ளிவிட்டு,+ “எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும்” என்று கேட்டீர்கள். அதனால், இப்போது அவரவர் கோத்திரத்தின்படியும் குடும்பத்தின்படியும்* யெகோவாவுக்கு முன்னால் வந்து நில்லுங்கள்’” என்று சொன்னார்.
20 அதனால், மக்கள் எல்லாரையும் கோத்திரம் கோத்திரமாக முன்னால் வரும்படி+ சாமுவேல் சொன்னார். அப்போது, பென்யமீன் கோத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.+
21 பின்பு, பென்யமீன் கோத்திரத்தாரைக் குடும்பம் குடும்பமாக முன்னால் வரச் சொன்னார். அப்போது, மாத்திரியரின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடைசியில், கீசின் மகனாகிய சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.+ ஆனால் அவரைத் தேடியபோது, எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை.
22 அதனால், “அவர் இன்னும் இங்கு வரவில்லையா?” என்று யெகோவாவிடம் கேட்டார்கள்.+ அதற்கு யெகோவா, “அதோ, மூட்டைமுடிச்சுகளின் நடுவில் ஒளிந்துகொண்டிருக்கிறான்” என்று சொன்னார்.
23 உடனே, அவர்கள் ஓடிப்போய் அவரைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர் ஜனங்களின் நடுவில் நின்றபோது, எல்லாரையும்விட ரொம்ப உயரமாக இருந்தார். மற்றவர்கள் அவருடைய தோளுக்குக் கீழ்தான் இருந்தார்கள்.+
24 அப்போது சாமுவேல் ஜனங்களிடம், “இதோ, பாருங்கள்! யெகோவா தேர்ந்தெடுத்த ராஜா!+ இவரைப் போல வேறு யாருமே இல்லை” என்று சொன்னார். அப்போது ஜனங்கள் எல்லாரும், “ராஜா நீடூழி வாழ்க!” என்று கோஷம் போட்டார்கள்.
25 பின்பு, ராஜாவுக்கு ஜனங்கள் செய்ய வேண்டிய கடமைகளை+ சாமுவேல் சொன்னார். அவற்றை ஒரு புத்தகத்தில் எழுதி யெகோவாவின் முன்னிலையில் வைத்தார். அதன்பின், ஜனங்கள் எல்லாரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
26 சவுலும் கிபியாவிலிருந்த தன் வீட்டுக்குத் திரும்பிப்போனார். படைவீரர்களும் அவருடன் போனார்கள். ஏனென்றால், அவர்களுடைய இதயத்தை யெகோவா தூண்டியிருந்தார்.
27 ஆனால் உதவாக்கரை ஆட்கள் சிலர், “இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறான்?”+ என்று சொல்லி அவரை அலட்சியப்படுத்தினார்கள், அவருக்கு எந்த அன்பளிப்பும் கொண்டுவரவில்லை.+ ஆனாலும், சவுல் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.*
அடிக்குறிப்புகள்
^ இதற்கான எபிரெய வார்த்தை, உணர்ச்சி பொங்க கடவுளைப் புகழ்ந்து பேசுவதைக் குறிப்பதாகத் தெரிகிறது.
^ நே.மொ., “இதயத்தை.”
^ நே.மொ., “ஆயிரம் ஆயிரம் பேராகவும்.”
^ நே.மொ., “ஊமைபோல் இருந்தார்.”