1 சாமுவேல் 11:1-15

11  பின்பு, அம்மோன்+ தேசத்தின் ராஜாவாகிய நாகாஸ், கீலேயாத்திலுள்ள யாபேஸ்+ ஊருக்கு எதிராக வந்து முகாம்போட்டான். உடனே, யாபேஸ் ஊர்க்காரர்கள் அவனிடம், “எங்களோடு ஒப்பந்தம் செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு அடிமைகளாக இருப்போம்” என்று சொன்னார்கள்.  அதற்கு நாகாஸ், “உங்களோடு ஒப்பந்தம் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை! முதலில் உங்கள் எல்லாருடைய வலது கண்ணையும் நான் தோண்டியெடுத்து, இஸ்ரவேலர்கள் எல்லாரையும் அவமானப்படுத்துவேன். சம்மதமா?” என்று கேட்டான்.  அதற்கு யாபேஸ் ஊரின் பெரியோர்கள்,* “எங்களுக்கு ஏழு நாட்கள் அவகாசம் கொடுங்கள். இஸ்ரவேல் தேசமெங்கும் தூதுவர்களை அனுப்பி உதவி கேட்கிறோம். எங்களைக் காப்பாற்ற யாரும் வராவிட்டால், அப்போது உங்களிடம் சரணடைகிறோம்” என்று சொன்னார்கள்.  அவர்கள் அனுப்பிய தூதுவர்கள் சவுலின் ஊராகிய கிபியாவுக்கு+ வந்து ஜனங்களிடம் இதைச் சொன்னபோது, எல்லாரும் சத்தமாக அழுதார்கள்.  அந்தச் சமயத்தில், சவுல் தன்னுடைய வயலிலிருந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார். “என்ன நடந்தது? ஏன் எல்லாரும் அழுகிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், யாபேஸ் ஊர்க்காரர்கள் சொன்ன செய்தியைச் சொன்னார்கள்.  அப்போது சவுலுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது.+ அவர் பயங்கர கோபத்தோடு,  ஒரு ஜோடி காளைகளைப் பிடித்து துண்டு துண்டாக வெட்டி, தூதுவர்களின் மூலம் இஸ்ரவேலர்களுடைய எல்லா பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார். அந்தத் தூதுவர்கள் போய், “சவுலோடும் சாமுவேலோடும் வராதவர்களுடைய மாடுகளுக்கு இந்தக் கதிதான் வரும்!” என்று அறிவிப்பு செய்தார்கள். அப்போது, ஜனங்கள் எல்லாரும் பயபக்தியோடு ஒன்றுகூடி வரும்படி யெகோவா செய்தார்.  பேசேக்கு என்ற இடத்தில் சவுல் அவர்களைக் கணக்கெடுத்தபோது, இஸ்ரவேலர்களில் 3,00,000 பேரும், யூதா கோத்திரத்து ஆண்களில் 30,000 பேரும் இருந்தார்கள்.  பின்பு, சவுலும் அவருடைய வீரர்களும் அந்தத் தூதுவர்களிடம், “கீலேயாத்திலுள்ள யாபேஸ் ஊர்க்காரர்களிடம் போய், ‘நாளைக்கு உச்சி வெயில் வருவதற்குள் உங்களைக் காப்பாற்றிவிடுவோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள். அந்தத் தூதுவர்கள் யாபேஸ் ஊர்க்காரர்களிடம் போய் அதைச் சொன்னபோது, அவர்களுக்கு ரொம்பவே சந்தோஷமாகிவிட்டது. 10  அதனால் நாகாசிடம், “நாளைக்கு உங்களிடம் சரணடைவோம். அதன்பின் உங்கள் இஷ்டப்படி எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்”+ என்று சொன்னார்கள். 11  அடுத்த நாள், சவுல் தன்னுடைய படையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். அவர்கள் மூன்றாம் ஜாமத்தில்* எதிரியின் முகாமுக்குள் வந்து, நடுப்பகல்வரை அம்மோனியர்களை+ வெட்டிச் சாய்த்தார்கள். உயிர்தப்பியவர்கள் ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினார்கள். 12  அப்போது ஜனங்கள் சாமுவேலிடம், “‘இந்த சவுலா நமக்கு ராஜா’+ என்று சொன்னவர்கள் எங்கே? அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் அவர்களைக் கொல்ல வேண்டும்” என்றார்கள். 13  ஆனால் சவுல், “இன்றைக்கு யாரையும் கொல்லக் கூடாது.+ ஏனென்றால், இன்று யெகோவா இஸ்ரவேலர்களைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று சொன்னார். 14  பிற்பாடு சாமுவேல் ஜனங்களிடம், “வாருங்கள், நாம் கில்காலுக்குப்+ போய், சவுல்தான் ராஜா என்பதை மறுபடியும் அறிவிப்போம்”+ என்று சொன்னார். 15  அதனால், ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், யெகோவாவின் முன்னால் சவுலை ராஜாவாக்கினார்கள். பின்பு, யெகோவாவின் முன்னால் சமாதான பலிகளைச்+ செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் அந்த நாளைச் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்கள்.”
அதாவது, “அதிகாலை சுமார் 2 மணிமுதல் 6 மணிவரை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா