1 சாமுவேல் 14:1-52
14 ஒருநாள், சவுலின் மகன் யோனத்தான்+ தன்னுடைய ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “வா, அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தியர்களின் புறக்காவல் படைக்குப் போகலாம்” என்றார். ஆனால், அதைத் தன் அப்பாவிடம் சொல்லவில்லை.
2 அப்போது, கிபியாவின்+ எல்லையில் இருந்த மிக்ரோனில், ஒரு மாதுளை மரத்தின் கீழே சவுல் தங்கியிருந்தார். அவரோடு சுமார் 600 வீரர்கள் இருந்தார்கள்.+
3 (அகியா என்பவர் ஏபோத்தைப்+ போட்டிருந்தார். இவர் சீலோவில்+ யெகோவாவுக்குக் குருத்துவச் சேவை செய்த ஏலியின்+ பேரனும் பினெகாசின்+ மகனும் இக்கபோத்தின்+ சகோதரருமான அகிதூப்புக்குப்+ பிறந்தவர்.) யோனத்தான் புறப்பட்டுப்போன விஷயம் யாருக்கும் தெரியவில்லை.
4 மலைப்பாதைகள் வழியாக பெலிஸ்தியர்களின் புறக்காவல் படைக்குப் போக யோனத்தான் முயற்சி செய்தார். அந்த மலைப்பாதைகளின் ஒரு பக்கத்தில் ஒரு செங்குத்தான* கற்பாறையும், இன்னொரு பக்கத்தில் இன்னொரு செங்குத்தான கற்பாறையும் இருந்தது. ஒரு கற்பாறையின் பெயர் போசேஸ், இன்னொரு கற்பாறையின் பெயர் சேனே.
5 ஒரு கற்பாறை வடக்கே மிக்மாசைப் பார்த்தபடி தூண்போல் நின்றது. மற்றொரு கற்பாறை தெற்கே கெபாவைப்+ பார்த்தபடி நின்றது.
6 யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “வா, அந்தப் பக்கம் போய், விருத்தசேதனம் செய்யாதவர்களின்+ புறக்காவல் படையைத் தாக்கலாம். ஒருவேளை, யெகோவா நமக்கு உதவி செய்வார். யெகோவா நினைத்தால், அவருடைய ஜனங்களைக் கொஞ்சம் பேரை வைத்தும் காப்பாற்ற முடியும் நிறைய பேரை வைத்தும் காப்பாற்ற முடியும்.+ அவரை யாராலும் தடுக்க முடியாது” என்று சொன்னார்.
7 அதற்கு அவன், “உங்கள் மனதில்* தோன்றுகிறபடியே செய்யலாம், உங்கள் இஷ்டப்படியே போகலாம். உங்கள் மனதில்* தோன்றுகிறபடி நீங்கள் எங்கே போனாலும் நான் உங்கள் பின்னால் வருவேன்” என்று சொன்னான்.
8 அதற்கு யோனத்தான், “நாம் அந்தப் பக்கம் போய், அவர்கள் கண்ணில் படுகிற மாதிரி நிற்கலாம்.
9 அவர்கள் நம்மிடம், ‘அங்கேயே நில்லுங்கள், நாங்கள் வருகிறோம்’ என்று சொன்னால் அவர்களிடம் ஏறிப்போகாமல் அங்கேயே நிற்கலாம்.
10 ஆனால் அவர்கள், ‘சண்டைக்கு வாருங்கள்!’ என்று சொன்னால், நாம் ஏறிப்போகலாம். அவர்களை யெகோவா நம் கையில் கொடுப்பார் என்பதற்கு இதுதான் அடையாளம்”+ என்றார்.
11 அதன்பின், அவர்கள் இரண்டு பேரும் பெலிஸ்தியர்களுடைய புறக்காவல் படையினரின் கண்ணில் படும்படி நின்றார்கள். அப்போது அந்தப் புறக்காவல் படையினர், “பாருங்கள்! பொந்துகளில் ஒளிந்துகொண்டிருந்த எபிரெயர்கள்+ வெளியே வருகிறார்கள்” என்று சொன்னார்கள்.
12 அவர்கள் யோனத்தானையும் அவருடைய ஆயுதங்களைச் சுமப்பவனையும் பார்த்து, “மேலே ஏறி வாருங்கள், உங்களுக்குச் சரியான பாடம் புகட்டுகிறோம்!”+ என்றார்கள். உடனே, யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “என் பின்னால் வா, யெகோவா அவர்களை இஸ்ரவேலர்களின் கையில் கொடுப்பார்”+ என்று சொன்னார்.
13 யோனத்தான் தன்னுடைய கை கால்களால் ஊர்ந்து மேலே ஏறினார். அவருடைய ஆயுதங்களைச் சுமப்பவனும் அவர் பின்னால் ஏறினான். பின்பு, பெலிஸ்தியர்களை யோனத்தான் வெட்டிக்கொண்டே போனார். அவருடைய ஆயுதங்களைச் சுமப்பவன் அவருக்குப் பின்னால் பெலிஸ்தியர்களை கொன்றுபோட்டுக்கொண்டே வந்தான்.
14 யோனத்தானும் அவனும் நடத்திய இந்த முதல் தாக்குதலில், சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில்* கிட்டத்தட்ட 20 பேர் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.
15 அப்போது, முகாமில் இருந்த வீரர்களும் புறக்காவல் படையில் இருந்த வீரர்களும் கதிகலங்கிப்போனார்கள். சூறையாடப் போன பிரிவினர்களும்கூட+ பயந்து நடுங்கினார்கள். பூமி அதிர ஆரம்பித்தது. கடவுள் அவர்கள் எல்லாரையும் குலைநடுங்க வைத்தார்.
16 எங்கு பார்த்தாலும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருப்பதை+ பென்யமீனியர்களின் பகுதியான கிபியாவிலிருந்த+ சவுலின் காவல்காரர்கள் கவனித்தார்கள்.
17 அப்போது, சவுல் தன்னோடிருந்த வீரர்களிடம், “யாரெல்லாம் நம்மோடு இல்லை என்பதைத் தயவுசெய்து கணக்கெடுங்கள்” என்றார். அவர்கள் கணக்கெடுத்தபோது, யோனத்தானும் அவருடைய ஆயுதங்களைச் சுமப்பவனும் இல்லை என்பது தெரியவந்தது.
18 உடனே சவுல் அகியாவிடம்,+ “உண்மைக் கடவுளின் பெட்டியை இங்கே கொண்டுவாருங்கள்!” என்றார். (அந்தச் சமயத்தில் உண்மைக் கடவுளின் பெட்டி இஸ்ரவேலர்களிடம் இருந்தது.)
19 குருவாகிய அகியாவோடு சவுல் பேசிக்கொண்டிருந்தபோது, பெலிஸ்தியர்களின் முகாமில் கூச்சலும் குழப்பமும் அதிகமாகிக்கொண்டே போனது. அதனால் சவுல் அகியாவிடம், “நீங்கள் செய்துகொண்டிருப்பதை நிறுத்திவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு,
20 தன்னோடு இருந்த வீரர்களுடன் சேர்ந்து போர் செய்யப் போனார். அங்கே பெலிஸ்தியர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்திருப்பதையும், ஒரே கலவரமாக இருப்பதையும் அவர்கள் பார்த்தார்கள்.
21 முன்பு பெலிஸ்தியர்களோடு சேர்ந்துகொண்டு அவர்களுடைய முகாமில் திரிந்துகொண்டிருந்த எபிரெயர்கள் சிலர், சவுலோடும் யோனத்தானோடும் இருந்த இஸ்ரவேல் படையோடு சேர்ந்துகொண்டார்கள்.
22 பெலிஸ்தியர்கள் தப்பித்து ஓடுவதை எப்பிராயீம் மலைப்பகுதியில் ஒளிந்திருந்த இஸ்ரவேலர்கள்+ எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்களும் சேர்ந்து எதிரிகளைத் துரத்திக்கொண்டு போனார்கள்.
23 பெத்-ஆவேன்வரை+ போர் நடந்தது. யெகோவா அன்றைக்கு இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்.+
24 இஸ்ரவேல் வீரர்கள் அன்றைக்கு மிகவும் களைத்துப்போனார்கள். ஏனென்றால் சவுல் அவர்களிடம், “நான் என்னுடைய எதிரிகளைப் பழிவாங்கித் தீரும்வரை பொறுத்திருக்காமல் சாயங்காலத்துக்கு முன்பே உணவு சாப்பிடுகிற எவனும் சபிக்கப்பட்டவன்!” என்று ஆணையிட்டுச் சொல்லியிருந்தார். அதனால், வீரர்களில் யாரும் எதுவும் சாப்பிடவில்லை.+
25 வீரர்கள் எல்லாரும் காட்டுக்கு வந்தார்கள். அங்கே தேன்கூட்டிலிருந்து தேன் ஒழுகி, தரையில் சிந்திக் கிடந்ததைப் பார்த்தார்கள்.
26 ஆனால், ஒழுகிக்கொண்டிருந்த அந்தத் தேனை யாருமே எடுத்துச் சாப்பிடவில்லை. ஏனென்றால், அவர்கள் சவுலின் கட்டளையை நினைத்துப் பயந்தார்கள்.
27 ஆனால், சவுலின் மகன் யோனத்தானுக்கு அந்தக் கட்டளையைப் பற்றித் தெரியவில்லை.+ அதனால், தான் வைத்திருந்த கோலின் முனையைத் தேன்கூட்டில் குத்தி, தேனை எடுத்துச் சாப்பிட்டார். அப்போது, அவருக்குத் தெம்பு கிடைத்தது.*
28 அப்போது வீரர்களில் ஒருவன், “‘இன்றைக்குச் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன்!’+ என்று உங்களுடைய அப்பா ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் வீரர்கள் இவ்வளவு களைப்பாக இருக்கிறார்கள்” என்று சொன்னான்.
29 அதற்கு யோனத்தான், “என்னுடைய அப்பாவால் ஜனங்களுக்கு எவ்வளவு கஷ்டம்! கொஞ்சம் தேன் சாப்பிட்டதற்கே நான் எவ்வளவு தெம்பாக இருக்கிறேன்* என்று பாருங்கள்.
30 அப்படியிருக்கும்போது, எதிரிகளிடம் கைப்பற்றிய ஆடுமாடுகளை வீரர்கள் வயிறார சாப்பிட்டிருந்தால்+ இன்னும் எத்தனை பெலிஸ்தியர்களை வெட்டிக் குவித்திருக்கலாம்!” என்று சொன்னார்.
31 அன்று அவர்கள் மிக்மாஷ்முதல் ஆயலோன்வரை+ பெலிஸ்தியர்களை வெட்டிச் சாய்த்திருந்ததால், வீரர்கள் ரொம்பவும் களைத்துப்போயிருந்தார்கள்.
32 பசிவெறியில், தாங்கள் கைப்பற்றிய ஆடுமாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்துத் தரையில் வெட்டிக் கொன்று, இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிட்டார்கள்.+
33 “வீரர்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள்”+ என்று சவுலிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர், “நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள். உடனடியாக ஒரு பெரிய கல்லை உருட்டிக்கொண்டு வாருங்கள்” என்றார்.
34 பின்பு அவர், “நீங்கள் எல்லாரிடமும் போய், ‘ஒவ்வொருவரும் தன்னுடைய மாட்டையும் ஆட்டையும் இங்கே கொண்டுவந்து கொன்று சாப்பிட வேண்டும். இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்யக் கூடாது’+ என்று சொல்லுங்கள்” என்றார். அதனால், அன்றைக்கு ராத்திரி ஒவ்வொருவரும் தங்களுடைய மாட்டை அங்கே கொண்டுவந்து வெட்டிக் கொன்றார்கள்.
35 அப்போது, சவுல் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டினார்.+ யெகோவாவுக்கு அவர் கட்டிய முதல் பலிபீடம் அதுதான்.
36 பிற்பாடு சவுல், “இன்றைக்கு ராத்திரி பெலிஸ்தியர்களைத் துரத்திக்கொண்டு போய், அவர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் விடியும்வரை கைப்பற்றலாம். ஒருவனைக்கூட விட்டுவைக்கக் கூடாது” என்று சொன்னார். அதற்கு வீரர்கள், “உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதையே செய்யுங்கள்” என்றார்கள். ஆனால் குருவானவர், “இங்கே உண்மைக் கடவுளிடம் நாம் கேட்டுப் பார்க்கலாம்”+ என்று சொன்னார்.
37 அப்போது சவுல் கடவுளிடம், “பெலிஸ்தியர்களை நான் துரத்திக்கொண்டு போகலாமா?+ அவர்களை இஸ்ரவேலர்களின் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார். ஆனால், அன்றைக்குக் கடவுள் அவருக்குப் பதில் தரவில்லை.
38 அதனால் சவுல், “தலைவர்கள் எல்லாரும் இங்கே வாருங்கள். இன்றைக்கு யார் என்ன பாவம் செய்தார்கள் என்று கண்டுபிடியுங்கள்.
39 இஸ்ரவேலர்களைக் காப்பாற்றிய உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* பாவம் செய்தது என் மகன் யோனத்தானாகவே இருந்தாலும் அவன் சாக வேண்டும்” என்றார். ஆனால், யாருமே அவருக்குப் பதில் சொல்லவில்லை.
40 அப்போது அவர் இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் எல்லாரும் ஒரு பக்கம் நில்லுங்கள், நானும் என் மகன் யோனத்தானும் இன்னொரு பக்கம் நிற்கிறோம்” என்றார். அதற்கு அந்த வீரர்கள், “உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்” என்றார்கள்.
41 பின்பு சவுல் யெகோவாவிடம், “இஸ்ரவேலின் கடவுளே, தும்மீம்+ மூலம் எனக்குப் பதில் சொல்லுங்கள்!” என்றார். அப்போது, யோனத்தானின் பெயரிலும் சவுலின் பெயரிலும் குலுக்கல் விழுந்தது, வீரர்கள் தப்பினார்கள்.
42 உடனே சவுல், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையில் குலுக்கல்+ போட்டுப் பாருங்கள்” என்று சொன்னார். அப்போது, யோனத்தானின் பெயரில் குலுக்கல் விழுந்தது.
43 சவுல் யோனத்தானிடம், “நீ என்ன செய்தாய், சொல்” என்று கேட்டார். அதற்கு யோனத்தான், “என் கோலை நீட்டிக் கொஞ்சம் தேனை மட்டும் எடுத்துச் சாப்பிட்டேன்.+ அதற்காக இப்போது நான் சாகத் தயார்!” என்று சொன்னார்.
44 அதற்கு சவுல், “நான் உனக்கு மரண தண்டனை கொடுக்காவிட்டால் கடவுள் எனக்குக் கடுமையான தண்டனை கொடுக்கட்டும்”+ என்றார்.
45 அப்போது வீரர்கள், “இஸ்ரவேலர்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித் தந்த யோனத்தான்+ சாக வேண்டுமா? கூடவே கூடாது! இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை,* யோனத்தானின் தலையிலிருந்து ஒரு முடிகூட கீழே விழக் கூடாது. இன்றைக்கு அவர் கடவுளுடைய துணையோடுதான் போர் செய்தார்”+ என்றார்கள். இப்படி, அந்த வீரர்கள் யோனத்தானின் உயிரைக் காப்பாற்றினார்கள்.
46 பெலிஸ்தியர்களைத் துரத்திக்கொண்டு போவதை சவுல் விட்டுவிட்டார், பெலிஸ்தியர்களும் தங்களுடைய தேசத்துக்குத் திரும்பிப் போனார்கள்.
47 சவுல் இஸ்ரவேல் தேசம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சுற்றிலும் இருந்த எதிரிகளான மோவாபியர்களோடும்,+ அம்மோனியர்களோடும்,+ ஏதோமியர்களோடும்,+ சோபாவின்+ ராஜாக்களோடும், பெலிஸ்தியர்களோடும்+ போர் செய்தார். படையெடுத்துப் போன எல்லா இடங்களிலும் அவர்களைத் தோற்கடித்தார்.
48 அவர் வீரத்தோடு போர் செய்து அமலேக்கியர்களை+ ஜெயித்தார். சூறையாடுகிறவர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்.
49 சவுலுக்கு யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்ற மகன்கள் இருந்தார்கள்.+ அவருக்கு இரண்டு மகள்களும் இருந்தார்கள். மூத்தவள் பெயர் மேரப்,+ சின்னவள் பெயர் மீகாள்.+
50 அவருடைய மனைவியின் பெயர் அகினோவாம். இவள் அகிமாசின் மகள். சவுலின் படைத் தலைவருடைய பெயர் அப்னேர்.+ இவர் சவுலின் சொந்தக்காரரான நேரின் மகன்.
51 சவுலின் அப்பா பெயர் கீஸ்.+ அப்னேரின் அப்பா நேர்,+ நேரின் அப்பா அபியேல்.
52 சவுலின் காலம் முழுவதும் இஸ்ரவேலர்களும் பெலிஸ்தியர்களும் பயங்கரமாகச் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள்.+ தைரியமும் துணிச்சலும் உள்ள யாரைப் பார்த்தாலும், சவுல் உடனடியாக அவனைத் தன்னுடைய படையில் சேர்த்துக்கொள்வார்.+
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “பல்போன்ற வடிவத்திலிருந்த.”
^ நே.மொ., “இதயத்தில்.”
^ நே.மொ., “இதயத்தில்.”
^ அதாவது, “ஒரு நாளில் மாடுகள் ஏர் உழும் தூரத்தில் பாதித் தூரத்துக்கு.”
^ நே.மொ., “அவருடைய கண்கள் பிரகாசித்தன.”
^ நே.மொ., “என் கண்கள் எவ்வளவு பிரகாசிக்கின்றன.”
^ வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
^ வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”