1 சாமுவேல் 19:1-24

19  பிற்பாடு, தாவீதைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று+ சவுல் தன்னுடைய மகன் யோனத்தானிடமும் எல்லா ஊழியர்களிடமும் சொன்னார்.  சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மேல் ரொம்பப் பிரியம் வைத்திருந்ததால்+ அவரிடம், “என்னுடைய அப்பா உன்னைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அதனால், காலையில் நீ ஜாக்கிரதையோடு இருந்து, யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் போய் ஒளிந்துகொள்.  நானும் என் அப்பாவும் அந்தப் பக்கமாக வருவோம். நான் அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அவரிடம் உன்னைப் பற்றிப் பேசுவேன். அவர் ஏதாவது சொன்னால் கண்டிப்பாக உன்னிடம் சொல்வேன்”+ என்றார்.  யோனத்தான் தன்னுடைய அப்பா சவுலிடம் தாவீதைப் பற்றி நல்ல விதமாகப் பேசி,+ “ராஜாவாக இருக்கிற நீங்கள் உங்களுடைய ஊழியனாகிய தாவீதுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது. ஏனென்றால், அவன் உங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. சொல்லப்போனால், உங்களுக்கு நல்லதுதான் செய்திருக்கிறான்.  தன் உயிரையே பணயம் வைத்து அந்தப் பெலிஸ்தியனைக் கொன்றுபோட்டிருக்கிறான்.+ அதனால், இஸ்ரவேலுக்கு யெகோவா மாபெரும் வெற்றி தந்தார். அதை உங்கள் கண்ணாலேயே பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டீர்கள். இப்போது மட்டும் ஏன் காரணமே இல்லாமல் தாவீதைக் கொன்று,+ ஒரு அப்பாவியின் சாவுக்குக் காரணமாக வேண்டும்?” என்றார்.  சவுல் யோனத்தானின் பேச்சைக் கேட்டு, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் அவனைக் கொல்ல மாட்டேன்” என்று சொன்னார்.  பின்பு, யோனத்தான் தாவீதைக் கூப்பிட்டு எல்லா விஷயங்களையும் சொன்னார். அதன்பின், தாவீதை சவுலிடம் கூட்டிக்கொண்டு வந்தார், தாவீதும் முன்பு போலவே சவுலுக்குச் சேவை செய்தார்.+  பெலிஸ்தியர்களோடு மறுபடியும் போர் மூண்டது. உடனே, தாவீது போய் அவர்களோடு போர் செய்து ஏராளமான வீரர்களைக் கொன்று குவித்தார். மற்ற வீரர்கள் அவர் முன்னால் நிற்க முடியாமல் தலைதெறிக்க ஓடினார்கள்.  ஒருசமயம், சவுல் தன்னுடைய கையில் ஈட்டியுடன் அரண்மனையில் உட்கார்ந்திருந்தார், தாவீது அவர் முன்னால் யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.+ அப்போது, சவுலின் மனம்* அவரை ஆட்டிப்படைக்கும்படி யெகோவா விட்டுவிட்டார்.+ 10  சவுல் தாவீதைச் சுவரோடு சுவராகக் குத்திக் கொல்வதற்காக ஈட்டியை எறிந்தார். ஆனால், தாவீது நழுவிக்கொண்டதால் அந்த ஈட்டி சுவரில் பாய்ந்தது. அந்த ராத்திரியே தாவீது அங்கிருந்து தப்பித்து ஓடினார். 11  பின்பு, தாவீதின் வீட்டை நோட்டமிட்டு காலையில் அவரைத் தீர்த்துக்கட்டுவதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பினார்.+ ஆனால், தாவீதின் மனைவி மீகாள் அவரிடம், “இன்றைக்கு ராத்திரி நீங்கள் தப்பித்துப் போகாவிட்டால், நாளைக்கு உங்களைக் கொன்றுவிடுவார்கள்” என்று எச்சரித்துவிட்டு, 12  உடனே அவரை ஜன்னல் வழியாக இறக்கிவிட்டாள். அவரும் அங்கிருந்து தப்பித்து ஓடினார். 13  பின்பு, மீகாள் தன்னிடமிருந்த குலதெய்வச் சிலையைப் படுக்கைமேல் கிடத்தி, வெள்ளாட்டு மயிராலான வலைப்பின்னல் துணியைத் தலைமாட்டில் வைத்து, ஓர் அங்கியால் மூடினாள். 14  தாவீதைப் பிடித்துக்கொண்டு வர சவுல் தன் ஆட்களை அனுப்பினார். மீகாள் அவர்களிடம், “அவருக்கு உடம்பு சரியில்லை” என்று சொன்னாள். 15  மறுபடியும் சவுல் தன் ஆட்களை தாவீதின் வீட்டுக்கு அனுப்பி, “அவனை அப்படியே கட்டிலோடு தூக்கிக்கொண்டு வாருங்கள், அவனைத் தீர்த்துக்கட்ட வேண்டும்”+ என்றார். 16  அந்த ஆட்கள் போய்ப் பார்த்தபோது, படுக்கைமேல் குலதெய்வச் சிலையும் தலைமாட்டில் வெள்ளாட்டு மயிராலான வலைப்பின்னல் துணியும்தான் இருந்தன. 17  பின்பு சவுல் மீகாளிடம், “ஏன் என்னிடம் இப்படி நாடகமாடினாய்? என் எதிரியை+ ஏன் தப்பிக்க வைத்தாய்?” என்று கேட்டார். அதற்கு மீகாள், “அவரைத் தப்பிக்க விடவில்லை என்றால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்” என்று சொன்னாள். 18  தப்பியோடிய தாவீது ராமாவில்+ இருந்த சாமுவேலிடம் வந்தார். சவுல் தனக்குச் செய்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார். அதன்பின் அவரும் சாமுவேலும் நாயோத்தில்+ தங்கியிருந்தார்கள். 19  பிற்பாடு, “ராமாவிலுள்ள நாயோத்தில் தாவீது தங்கியிருக்கிறான்” என்று சவுலிடம் சொல்லப்பட்டது. 20  உடனே, தாவீதைப் பிடித்துக்கொண்டு வர சவுல் தன் ஆட்களை அனுப்பினார். வயதான தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதையும், சாமுவேல் அங்கே நின்று தலைமை தாங்குவதையும் அவர்கள் பார்த்தார்கள். அப்போது, கடவுளுடைய சக்தி அந்த ஆட்களுக்குக் கிடைத்தது, அவர்களும் தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். 21  இந்த விஷயம் சவுலிடம் சொல்லப்பட்டபோது, அவர் உடனே வேறு சில ஆட்களை அனுப்பினார். அவர்களும் தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். சவுல் மறுபடியும் ஆட்களை அனுப்பினார், மூன்றாவது தடவை போனவர்களும் தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். 22  கடைசியில், அவரே ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார். சேக்குவில் இருந்த பெரிய தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் வந்தபோது, “சாமுவேலும் தாவீதும் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டார். “ராமாவிலுள்ள நாயோத்தில் இருக்கிறார்கள்”+ என்று அவரிடம் சொல்லப்பட்டது. 23  ராமாவிலுள்ள நாயோத்துக்கு சவுல் போய்க்கொண்டிருந்தபோது அவருக்கும் கடவுளுடைய சக்தி கிடைத்தது. ராமாவிலுள்ள நாயோத்துக்குப் போய்ச் சேரும்வரை அவரும் ஒரு தீர்க்கதரிசியைப் போல் நடந்துகொண்டார். 24  அவரும் தன் உடைகளைக் கழற்றிவிட்டு, சாமுவேலின் முன்னால் ஒரு தீர்க்கதரிசியைப் போல் நடந்துகொண்டார். பகல் முழுவதும் ராத்திரி முழுவதும் வெற்று உடம்போடு* அங்கே படுத்துக் கிடந்தார். அதனால்தான், “சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்ற வழக்குச் சொல் வந்தது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “கெட்ட சிந்தை.”
வே.வா., “வெறும் உள்ளாடைகளோடு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா