1 சாமுவேல் 20:1-42
20 பின்பு, ராமாவிலுள்ள நாயோத்தைவிட்டு தாவீது ஓடிப்போனார். அவர் யோனத்தானிடம் வந்து, “நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?+ என்மேல் என்ன குற்றம் இருக்கிறது? உங்களுடைய அப்பாவுக்கு என்ன பாவம் செய்தேன்? அவர் ஏன் என்னைக் கொல்லத் துடிக்கிறார்?” என்று கேட்டார்.
2 அதற்கு யோனத்தான், “அப்படியெல்லாம் நடக்காது!+ உன் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ, என்னிடம் சொல்லாமல் என் அப்பா எதையும் செய்ய மாட்டார். இதை மட்டும் ஏன் மறைக்கப்போகிறார்? நீ நினைக்கிற மாதிரியெல்லாம் அவர் செய்ய மாட்டார்” என்று சொன்னார்.
3 ஆனால் தாவீது, “நாம் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்+ என்பது உங்களுடைய அப்பாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால், ‘யோனத்தானுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம், தெரிந்தால் அவன் வருத்தப்படுவான்’ என்று நினைத்திருப்பார். உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்கள் உயிர்மேல் ஆணையாகவும் சொல்கிறேன்,* எனக்குச் சாவு நெருங்கிவிட்டது!”+ என்று சொன்னார்.
4 அப்போது யோனத்தான் தாவீதிடம், “நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல், உனக்காக எதையும் செய்வேன்” என்றார்.
5 அதற்கு தாவீது, “நாளைக்கு மாதப் பிறப்பு.*+ நான் ராஜாவோடு விருந்து சாப்பிட வேண்டிய நாள். ஆனால், விருந்துக்கு வராமல் அதற்கு அடுத்த நாள் சாயங்காலம்வரை ஊருக்கு வெளியே ஒளிந்துகொள்ள எனக்கு அனுமதி கொடுங்கள்.
6 நான் ஏன் வரவில்லை என்று உங்களுடைய அப்பா கேட்டால், ‘தாவீதின் குடும்பத்தார் எல்லாரும் அவர்களுடைய ஊராகிய பெத்லகேமில்+ வருஷா வருஷம் பலி செலுத்துவார்கள். அதனால், அங்கு அவசரமாகப் போய்விட்டு வருவதாக என்னிடம் கெஞ்சிக் கேட்டான்’+ என்று சொல்லுங்கள்.
7 அதற்கு உங்கள் அப்பா, ‘சரி, போய்விட்டு வரட்டும்’ என்று சொன்னால், உங்கள் ஊழியன்மேல் அவருக்கு எந்த வெறுப்பும் இல்லை என்று அர்த்தம். ஆனால், அதைக் கேட்டவுடன் அவர் கோபப்பட்டால், என்னைத் தீர்த்துக்கட்ட குறியாக இருக்கிறார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
8 உங்கள் ஊழியன்மேல் எப்போதும் அன்பு* காட்டுங்கள்.+ யெகோவாவின் முன்னால் நீங்கள் என்னோடு ஒப்பந்தம் செய்திருக்கிறீர்கள்.+ என்மேல் ஏதாவது குற்றம் இருந்தால்,+ நீங்களே என்னைக் கொன்றுபோடுங்கள், உங்கள் அப்பாவின் கையில் கொடுத்துவிடாதீர்கள்” என்றார்.
9 அதற்கு யோனத்தான், “அப்படியெல்லாம் நான் மனதில்கூட நினைக்கவில்லை! என் அப்பா உன்னைத் தீர்த்துக்கட்ட குறியாக இருக்கிறார் என்று தெரியவந்தால், உன்னிடம் சொல்லாமல் மறைப்பேனா?”+ என்றார்.
10 அப்போது தாவீது, “உங்களுடைய அப்பா உங்களிடம் கோபமாகப் பேசினாரா இல்லையா என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்டார்.
11 அதற்கு யோனத்தான், “வா, இப்போது நாம் ஊருக்கு வெளியே போகலாம்” என்றார். பின்பு, அவர்கள் இரண்டு பேரும் ஊருக்கு வெளியே போனார்கள்.
12 யோனத்தான் தாவீதிடம், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவைச் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், என்னுடைய அப்பா என்ன நினைக்கிறார் என்று நாளைக்கு இந்நேரமோ அதற்கு அடுத்த நாளோ கண்டுபிடித்துவிடுவேன். அவருக்கு உன்மேல் எந்தக் கோபமும் இல்லையென்று தெரிந்தால், அதை உனக்குத் தெரியப்படுத்துவேன்.
13 ஒருவேளை, அவர் உன்னைத் தீர்த்துக்கட்ட நினைத்திருந்தால், நான் உனக்கு அதைத் தெரியப்படுத்தி உன்னைத் தப்பித்துப்போக வைப்பேன். அப்படிச் செய்யாவிட்டால், யெகோவா எனக்குக் கடுமையான தண்டனை கொடுக்கட்டும். யெகோவா என் அப்பாவோடு இருந்தது போல+ உன்னோடும் இருக்கட்டும்.+
14 நான் உயிரோடு இருந்தாலும் சரி, செத்தாலும் சரி, யெகோவாவைப் போல நீயும் என்னிடம் எப்போதும் அன்பு* காட்டுவாய்தானே?+
15 உன் எதிரிகளையெல்லாம் யெகோவா இந்தப் பூமியிலிருந்து ஒழித்துக்கட்டினால்கூட, நீ என் குடும்பத்துக்கு அன்பு* காட்டுவதை ஒருநாளும் விட்டுவிடக் கூடாது”+ என்று சொன்னார்.
16 பின்பு, யோனத்தான் தாவீதின் வம்சத்தோடு ஒப்பந்தம் செய்து, “இந்த ஒப்பந்தத்தை மீறுகிறவனை யெகோவா பழிவாங்குவார், உன் எதிரிகளைத் தண்டிப்பார்” என்று சொன்னார்.
17 தாவீது யோனத்தானை நேசித்ததால், யோனத்தான் மறுபடியும் அவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். அவர் தாவீதை உயிருக்கு உயிராக நேசித்தார்.+
18 பின்பு யோனத்தான் அவரிடம், “நாளைக்கு மாதப் பிறப்பு.+ விருந்து நடக்கும்போது நீ உட்காருகிற இடம் காலியாக இருக்கும், அதனால் உன்னைத் தேடுவார்கள்.
19 அதற்கு அடுத்த நாள் கண்டிப்பாக விசாரிப்பார்கள். நீ முன்பு ஒளிந்திருந்த இதே இடத்துக்கு வந்து இந்தப் பாறைக்குப் பக்கத்தில் ஒளிந்துகொள்.
20 அப்போது, குறிபார்த்து அம்பு எறிவது போல, பாறையின் ஒரு பக்கமாக மூன்று அம்புகளை நான் எறிவேன்.
21 என் வேலைக்காரனிடம், ‘போ, அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டு வா’ என்று சொல்லி அனுப்புவேன். பின்பு அவனிடம், ‘அம்புகள் உனக்குப் பக்கத்திலேயே இருக்கிறது, எடுத்துக்கொண்டு வா’ என்று சொன்னால், உனக்கு எந்த ஆபத்தும் இல்லை, நீ நிம்மதியாக இருக்கலாம் என்று அர்த்தம். உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீ திரும்பி வரலாம்.
22 ஆனால் என் வேலைக்காரனிடம், ‘பார், அம்புகள் தூரமாகக் கிடக்கின்றன’ என்று சொன்னால், நீ போய்விடு. யெகோவா உன்னைப் போகச் சொல்கிறார் என்று அர்த்தம்.
23 நீயும் நானும் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு+ யெகோவாவே என்றென்றும் சாட்சி”+ என்றார்.
24 அதன்படியே, தாவீது ஊருக்கு வெளியில் ஒளிந்துகொண்டார். மாதப் பிறப்பு நாளில், விருந்து சாப்பிட ராஜா தன்னுடைய இடத்தில் வந்து உட்கார்ந்தார்.+
25 வழக்கம் போலவே, சுவர் ஓரமாக இருந்த இடத்தில் அவர் உட்கார்ந்தார். அவருக்கு எதிரில் யோனத்தான் உட்கார்ந்தார். ராஜாவுக்குப் பக்கத்தில் அப்னேர்+ உட்கார்ந்தார். ஆனால், தாவீது உட்காரும் இடம் காலியாக இருந்தது.
26 சவுல் அன்றைக்கு எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால், ‘அவனுக்கு ஏதோ நடந்திருக்கும், அவன் தீட்டுப்பட்டிருப்பான்.+ கண்டிப்பாக அப்படித்தான் ஏதாவது ஆகியிருக்கும்’ என்று நினைத்துக்கொண்டார்.
27 மாதப் பிறப்புக்கு அடுத்த நாளும், அதாவது இரண்டாம் நாளும், தாவீது உட்காரும் இடம் காலியாகவே இருந்தது. அப்போது சவுல் தன்னுடைய மகன் யோனத்தானிடம், “ஈசாயின் மகன்+ ஏன் நேற்றைக்கும் இன்றைக்கும் விருந்துக்கு வரவில்லை?” என்று கேட்டார்.
28 அப்போது யோனத்தான் சவுலிடம், “பெத்லகேமுக்குப் போக அனுமதி தரச் சொல்லி அவன் கெஞ்சிக் கேட்டான்.+
29 அவன் என்னிடம், ‘தயவுசெய்து எனக்கு அனுமதி கொடுங்கள், ஊரில் நாங்கள் குடும்பமாகப் பலி செலுத்த வேண்டும். அதற்காக என்னுடைய அண்ணன் என்னை உடனே வரச் சொன்னார். நீங்கள் பெரியமனதுபண்ணி, என் அண்ணன்களைப் போய்ப் பார்க்க அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டான். அதனால்தான் ராஜாவுடைய விருந்துக்கு அவன் வரவில்லை” என்று சொன்னார்.
30 அப்போது, சவுல் யோனத்தான்மேல் பயங்கரமாகக் கோபப்பட்டு, “அடங்காதவனே, நீ அந்த ஈசாயின் மகனுக்கு வக்காலத்து வாங்குவது எனக்குத் தெரியாதென்று நினைக்கிறாயா? உனக்கும் மானக்கேடு, உன்னைப் பெற்றவளுக்கும் மானக்கேடு!
31 ஈசாயின் மகன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நீ ராஜாவாக முடியாது, உன்னுடைய ஆட்சியும் நிலைக்காது.+ உடனே ஆள் அனுப்பி அவனைப் பிடித்துக்கொண்டு வா, அவன் சாக வேண்டும்”+ என்று சொன்னார்.
32 ஆனால், யோனத்தான் தன்னுடைய அப்பாவிடம், “அவன் எதற்காகச் சாக வேண்டும்?+ அப்படி என்ன தப்பு செய்துவிட்டான்?” என்று கேட்டார்.
33 உடனே, சவுல் அவர்மேல் ஈட்டியை எறிந்தார்.+ அப்போது, தாவீதைத் தீர்த்துக்கட்ட சவுல் குறியாக இருந்ததை யோனத்தான் புரிந்துகொண்டார்.+
34 உடனே, அவர் பயங்கர கோபத்தோடு எழுந்து போனார். அன்றைக்கு, அதாவது மாதப் பிறப்புக்கு அடுத்த நாள், யோனத்தான் ஒன்றுமே சாப்பிடவில்லை. தாவீதைத் தன்னுடைய அப்பா அவமானப்படுத்தியதை நினைத்து அவர் மனம் நொந்துபோயிருந்தார்.+
35 காலையில் யோனத்தான் ஒரு வேலைக்காரப் பையனைக் கூட்டிக்கொண்டு தாவீதைப் பார்க்க ஊருக்கு வெளியே போனார்.+
36 அந்தப் பையனிடம், “நீ ஓடிப்போய், நான் எறிகிற அம்பை எடுத்துக்கொண்டு வா” என்றார். உடனே, அந்தப் பையன் ஓடினான். யோனத்தான் தூரத்தில் அம்பை எறிந்தார்.
37 அவர் அம்பு எறிந்த இடத்துக்கு அந்தப் பையன் போனபோது, “அம்பு உனக்குத் தூரமாகக் கிடக்கிறது, பார்!” என்று சத்தமாகச் சொன்னார்.
38 அதோடு, “சீக்கிரம்! வேகமாகப் போ! நிற்காதே!” என்று சத்தமாகச் சொன்னார். அதன்படியே, அந்தப் பையன் போய் அம்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய எஜமானிடம் வந்தான்.
39 அந்த வேலைக்காரப் பையனுக்கு ஒன்றுமே புரியவில்லை. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டும்தான் அதன் அர்த்தம் தெரிந்திருந்தது.
40 யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களை அந்தப் பையனிடம் கொடுத்து, “இவற்றை எடுத்துக்கொண்டு ஊருக்குப் போ” என்று சொன்னார்.
41 வேலைக்காரப் பையன் போனவுடன், தெற்குப் பக்கமாக இருந்த இடத்திலிருந்து தாவீது எழுந்து வந்தார். பின்பு மண்டிபோட்டு, மூன்று தடவை தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். அதன்பின் அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துவிட்டு, அழுதார்கள். தாவீதுதான் ரொம்பவே அழுதார்.
42 யோனத்தான் தாவீதிடம், “‘நம் இரண்டு பேருக்கு இடையிலும், நம் இரண்டு பேருடைய சந்ததிக்கு இடையிலும் யெகோவா என்றென்றும் சாட்சியாக இருப்பார்’+ என்று நாம் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்திருக்கிறோம்.+ அதனால், நீ நிம்மதியாகப் போ” என்று சொன்னார்.
அப்போது, தாவீது அங்கிருந்து புறப்பட்டுப் போனார், யோனத்தானும் ஊருக்குத் திரும்பினார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
^ வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
^ வே.வா., “முதலாம் பிறை.”
^ வே.வா., “மாறாத அன்பு.”
^ வே.வா., “மாறாத அன்பு.”
^ வே.வா., “மாறாத அன்பு.”
^ வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”