1 சாமுவேல் 21:1-15

21  அதன்பின் தாவீது, நோபு நகரத்தில் இருக்கிற குருவாகிய அகிமெலேக்கிடம் போனார்.+ அவரைப் பார்த்ததும் அகிமெலேக்கு பதற்றத்தோடு அவரிடம் வந்து, “தனியாக வந்திருக்கிறீர்களே, வேறு யாரும் உங்களோடு வரவில்லையா?”+ என்று கேட்டார்.  அதற்கு தாவீது, “ராஜா எனக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஆனால், அதைப் பற்றியோ அது சம்பந்தமாக அவர் சொன்ன விஷயங்களைப் பற்றியோ யாரிடமும் சொல்லக் கூடாது என்று கட்டளை கொடுத்திருக்கிறார். ஒரு இடத்தில் வந்து என்னைச் சந்திக்கும்படி என் ஆட்களிடம் சொல்லியிருக்கிறேன்.  இப்போது உங்களிடம் ஐந்து ரொட்டிகள் இருந்தால் கொடுங்கள் அல்லது என்ன இருக்கிறதோ அதைக் கொடுங்கள்” என்று கேட்டார்.  அதற்கு அவர், “என்னிடம் பரிசுத்த ரொட்டிதான் இருக்கிறது,+ வேறெந்த ரொட்டியும் இல்லை. உங்கள் ஆட்கள் தங்களுடைய மனைவியோடு உறவுகொள்ளாமல் இருந்திருந்தால் அதைத் தருகிறேன்”+ என்றார்.  அப்போது தாவீது, “போருக்குப் போகும் சமயங்களில் எங்கள் மனைவியோடு உறவுகொள்ளவே மாட்டோம்.+ சாதாரண வேலைக்குப் போகும்போதே என் ஆட்கள் சுத்தமாயிருப்பார்கள் என்றால், இன்றைக்கு இன்னும் எவ்வளவு சுத்தமாயிருப்பார்கள்!” என்றார்.  அதனால், குருவானவர் பரிசுத்த ரொட்டிகளை அவருக்குக் கொடுத்தார்.+ பரிசுத்தமான அந்தப் படையல் ரொட்டிகளைத் தவிர வேறெந்த ரொட்டியும் அவரிடம் இல்லை. வழக்கம் போலவே அவர் யெகோவாவின் சன்னிதியில் புதிய ரொட்டிகளை வைத்தபோது அந்தப் பழைய ரொட்டிகளை எடுத்து வைத்திருந்தார்.  அன்றைக்கு சவுலின் ஊழியர்களில் ஒருவன் ஏதோவொரு கட்டாயத்தினால் அங்கே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்தான். அவன் பெயர் தோவேக்.+ அவன் ஓர் ஏதோமியன்,+ சவுலின் மேய்ப்பர்களுக்குத் தலைவன்.  பின்பு தாவீது அகிமெலேக்கிடம், “உங்களிடம் ஈட்டியோ வாளோ இருக்குமா? ராஜா அவசரமாகப் போகச் சொன்னதால் என்னுடைய வாளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு வரவில்லை” என்று சொன்னார்.  அதற்கு அவர், “ஏலா பள்ளத்தாக்கில் நீங்கள் கொன்றுபோட்ட+ அந்தப் பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள்+ இங்கே இருக்கிறது. அதை ஒரு துணியில் சுற்றி ஏபோத்துக்குப்+ பின்னால் வைத்திருக்கிறேன். வேண்டுமானால் அதை எடுத்துக்கொள்ளுங்கள், அது ஒன்றுதான் இங்கே இருக்கிறது” என்றார். அதற்கு தாவீது, “அதைவிட நல்ல வாள் கிடையாது. அதையே எனக்குக் கொடுங்கள்” என்றார். 10  அதன்பின், அவர் மறுபடியும் சவுலிடமிருந்து தப்பித்து ஓடி,+ கடைசியில் காத் ராஜாவாகிய ஆகீசிடம் போய்ச் சேர்ந்தார்.+ 11  ஆகீசின் ஊழியர்கள் அவனிடம், “இவன் தாவீதுதானே, இஸ்ரவேலின் ராஜாதானே?‘சவுல் கொன்றது ஆயிரம்,தாவீது கொன்றது பல்லாயிரம்’ என்று இவனைப் பற்றித்தானே பெண்கள் புகழ்ந்து பாடினார்கள்?”+ என்று சொன்னார்கள். 12  அவர்கள் சொன்னதை தாவீது யோசிக்க யோசிக்க, காத் ராஜாவாகிய ஆகீஸ் தன்னை என்ன செய்வானோ என்று ரொம்பவே பயந்துபோனார்.+ 13  அதனால், புத்தி பேதலித்தவன் போல அவர்கள் முன்னால் நடித்தார்.+ ஒரு பைத்தியக்காரன் போலக் கதவுகளில் கீறிக்கொண்டும் எச்சிலைத் தாடியில் ஒழுகவிட்டுக்கொண்டும் இருந்தார். 14  அதைப் பார்த்த ஆகீஸ் தன்னுடைய ஊழியர்களிடம், “இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் கொண்டுவந்தீர்கள்? 15  இங்கே இருக்கும் பைத்தியக்காரர்கள் போதாதென்று இவன் வேறா? இந்தக் கிறுக்கனை எதற்காக என் வீட்டுக்குள் கொண்டுவந்தீர்கள்?” என்று கேட்டான்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா