1 சாமுவேல் 3:1-21

3  இதற்கிடையில், சிறுவன் சாமுவேல் ஏலியின் தலைமையில் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தான்.+ அந்தக் காலத்தில் யெகோவாவிடமிருந்து செய்தி வருவது அபூர்வமாக இருந்தது, தரிசனங்களும்+ அவ்வளவாகக் கிடைக்கவில்லை.  ஒருநாள், ஏலி வழக்கமாகத் தூங்கும் இடத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அவருடைய கண்பார்வை மங்கியிருந்ததால் அவரால் பார்க்க முடியவில்லை.+  கடவுளுடைய விளக்கு+ இன்னும் எரிந்துகொண்டிருந்தது. சாமுவேல் யெகோவாவின் பெட்டி வைக்கப்பட்டிருந்த ஆலயத்தில்* படுத்திருந்தான்.+  அப்போது, யெகோவா சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ, வந்துவிட்டேன்” என்று சொன்னான்.  அவன் ஏலியிடம் ஓடிவந்து, “என்னைக் கூப்பிட்டீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் உன்னைக் கூப்பிடவில்லையே. நீ போய்ப் படுத்துக்கொள்” என்று சொன்னார். அவன் போய்ப் படுத்துக்கொண்டான்.  யெகோவா மறுபடியும், “சாமுவேல்!” என்று கூப்பிட்டார். உடனே, சாமுவேல் எழுந்து ஏலியிடம் போய், “என்னைக் கூப்பிட்டீர்களா?” என்று கேட்டான். ஆனால் ஏலி, “நான் உன்னைக் கூப்பிடவில்லை, மகனே. நீ போய்ப் படுத்துக்கொள்” என்று சொன்னார்.  அப்போது, யெகோவாவைப் பற்றி சாமுவேலுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை, யெகோவாவிடமிருந்து அவனுக்கு எந்தச் செய்தியும் அதுவரை கிடைக்கவில்லை.+  யெகோவா மூன்றாவது தடவை, “சாமுவேல்!” என்று கூப்பிட்டார். உடனே, அவன் எழுந்து ஏலியிடம் போய், “என்னைக் கூப்பிட்டீர்களா?” என்று கேட்டான். அந்தச் சிறுவனைக் கூப்பிட்டது யெகோவாதான் என்பதை அப்போது ஏலி புரிந்துகொண்டார்.  அதனால் அவர் சாமுவேலிடம், “நீ போய்ப் படுத்துக்கொள். அவர் மறுபடியும் கூப்பிட்டால், ‘சொல்லுங்கள் யெகோவாவே, அடியேன் கேட்கிறேன்’ என்று சொல்” என்றார். அதனால், சாமுவேல் போய் அவனுடைய இடத்தில் படுத்துக்கொண்டான். 10  யெகோவா அங்கே வந்து நின்று, “சாமுவேல், சாமுவேல்!” என்று மறுபடியும் கூப்பிட்டார். உடனே சாமுவேல், “சொல்லுங்கள், அடியேன் கேட்கிறேன்” என்றான். 11  அப்போது யெகோவா சாமுவேலிடம், “நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன். அதைக் கேட்கிற எவனும் அதிர்ச்சி அடைவான்.*+ 12  ஏலியின் குடும்பத்தாரைப் பற்றி நான் சொன்ன எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அந்த நாளில் நிறைவேற்றுவேன்.+ 13  அவனுடைய குடும்பத்தாரை என்றென்றும் தண்டிப்பேன் என்று நீ அவனிடம் சொல். அவனுடைய மகன்கள் என்னை அவமதிக்கிறார்கள்,+ அவர்கள் செய்கிற அக்கிரமங்களைப் பற்றித் தெரிந்திருந்தும்+ அவர்களை அவன் கண்டிக்கவில்லை.+ 14  அதனால்தான், ஏலியின் குடும்பத்தாருடைய அக்கிரமத்துக்கு எந்தப் பலிகளையும் காணிக்கைகளையும் கொடுத்து பரிகாரம் செய்ய முடியாதென்று+ அவர்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறேன்” என்றார். 15  காலைவரை சாமுவேல் தூங்கிக்கொண்டிருந்தான். பின்பு, எழுந்து யெகோவாவின் ஆலயக் கதவுகளைத் திறந்தான். அந்தத் தரிசனத்தைப் பற்றி ஏலியிடம் சொல்வதற்குப் பயந்தான். 16  ஆனால் ஏலி, “சாமுவேலே, என் மகனே!” என்று கூப்பிட்டார். அதற்கு அவன், “கூப்பிட்டீர்களா?” என்று கேட்டான். 17  அப்போது அவர், “கடவுள் உன்னிடம் என்ன சொன்னார்? தயவுசெய்து சொல், என்னிடம் எதையும் மறைக்காதே. ஒரு வார்த்தையை நீ மறைத்தால்கூட, கடவுள் உன்னைக் கடுமையாகத் தண்டிப்பார்” என்று சொன்னார். 18  அதனால், கடவுள் சொன்ன எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் சாமுவேல் சொன்னான். அப்போது ஏலி அவனிடம், “இது யெகோவாவின் சித்தம். அவருக்குச் சரியென்று படுவதை அவர் செய்யட்டும்” என்று சொன்னார். 19  சாமுவேல் பெரியவனாக வளர்ந்துவந்தான், யெகோவா அவனுக்குத் துணையாக இருந்தார்.+ அவன் மூலம் சொன்ன எல்லாவற்றையும் அவர் நிறைவேற்றினார். 20  அதனால், சாமுவேல் யெகோவாவின் தீர்க்கதரிசி என்பதை தாண்முதல் பெயெர்-செபாவரை உள்ள இஸ்ரவேலர்கள் எல்லாரும் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள். 21  யெகோவா சீலோவில் தொடர்ந்து தரிசனம் தந்தார். அங்கே யெகோவா சாமுவேலுக்குத் தன்னை வெளிப்படுத்தினார், அதாவது தன்னுடைய செய்திகளின் மூலம் யெகோவா தன்னைப் பற்றித் தெரியப்படுத்தினார்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “வழிபாட்டுக் கூடாரத்தில்.”
நே.மொ., “அதைக் கேட்கிற எவனுடைய காதும் கூசும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா