1 சாமுவேல் 31:1-13

31  பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள்.+ அப்போது, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள். பலர் கில்போவா மலையில்+ வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.  சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள். பின்பு, அவருடைய மகன்களான+ யோனத்தானையும்+ அபினதாபையும் மல்கிசூவாவையும் கொன்றுபோட்டார்கள்.  சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள். கடைசியில், வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் படுகாயம் அடைந்தார்.+  அதனால், சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு. இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள்+ வந்து என்னைக் குத்திக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்” என்றார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+  சவுல் இறந்துவிட்டதைப்+ பார்த்தபோது அவனும் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டான்.  இப்படி, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் அவருடைய ஆயுதங்களைச் சுமந்தவனும் அவருடைய எல்லா ஆட்களும் ஒரே நாளில் செத்துப்போனார்கள்.+  இஸ்ரவேல் வீரர்கள் ஓடிவிட்டார்கள் என்பதையும், சவுலும் அவருடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்பதையும் பள்ளத்தாக்கு மற்றும் யோர்தான் பகுதிகளில் வாழ்ந்துவந்த இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டபோது தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள்.+ பெலிஸ்தியர்கள் வந்து அங்கே குடியேறினார்கள்.  கொல்லப்பட்டவர்களின் பொருள்களை எடுத்துக்கொள்ள அடுத்த நாள் பெலிஸ்தியர்கள் வந்தபோது, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் கில்போவா மலையில் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+  அப்போது, சவுலின் தலையை வெட்டி, அவருடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டார்கள். பின்பு, தங்கள் கோயில்களிலும்+ ஜனங்கள் மத்தியிலும் இந்தச் செய்தியை அறிவிப்பதற்காக பெலிஸ்தியர்களின் தேசமெங்கும் தூதுவர்களை அனுப்பினார்கள்.+ 10  அதன்பின், அவருடைய ஆயுதங்களை அஸ்தரோத் கோயிலில் வைத்தார்கள். பிற்பாடு, அவருடைய உடலை பெத்-சானின்+ மதிலில் தொங்கவிட்டார்கள். 11  பெலிஸ்தியர்கள் சவுலுக்கு இப்படிச் செய்ததை யாபேஸ்-கீலேயாத்தைச்+ சேர்ந்த ஜனங்கள் கேள்விப்பட்டார்கள். 12  உடனே, அங்கிருந்த வீரர்கள் எல்லாரும் புறப்பட்டு, ராத்திரி முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவருடைய மகன்களின் உடலையும் பெத்-சானின் மதிலிலிருந்து இறக்கினார்கள். பின்பு, அவற்றை யாபேசுக்கு எடுத்துவந்து தகனம் செய்தார்கள். 13  அதன்பின், அவர்களுடைய எலும்புகளை+ எடுத்து யாபேசிலிருந்த சவுக்கு மரத்தடியில் புதைத்துவிட்டு,+ ஏழு நாட்களுக்கு விரதமிருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கேவலமாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா