1 சாமுவேல் 9:1-27

9  அந்தக் காலத்தில், கீஸ் என்பவர் வாழ்ந்துவந்தார். இவர் பென்யமீன் கோத்திரத்தைச்+ சேர்ந்தவர்.+ அபியேல், சேரோர், பெகோராத், அபையா ஆகியவர்களின் வம்சத்தில் வந்தவர், பெரிய பணக்காரர்.  இவருக்கு சவுல்+ என்ற மகன் இருந்தார். அவர் அழகான ஓர் இளைஞர். அவரைவிட அழகானவர் இஸ்ரவேலில் யாருமே இல்லை. அவர் ரொம்ப உயரமாக இருந்தார். மற்ற எல்லாரும் அவருடைய தோளுக்குக் கீழ்தான் இருந்தார்கள்.  ஒருசமயம், சவுலின் அப்பாவுடைய கழுதைகள் தொலைந்துபோயின. அதனால் அவர் சவுலிடம், “தயவுசெய்து ஒரு வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு போய் நம்முடைய கழுதைகளைத் தேடிக் கண்டுபிடி” என்று சொன்னார்.  சவுலும் அந்த வேலைக்காரனும், எப்பிராயீம் மலைப்பகுதியையும் சலீஷா பிரதேசத்தையும் கடந்துபோனார்கள், ஆனால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு, சாலீம் பிரதேசம் வழியாகத் தேடிப்போனார்கள், அவை அங்கேயும் இல்லை. அதன்பின், பென்யமீனியர்களுடைய பிரதேசம் முழுவதும் தேடினார்கள், அங்கும் அவை இல்லை.  பிறகு, சூப் என்ற பிரதேசத்துக்கு அவர்கள் போனபோது சவுல் தன் வேலைக்காரனிடம், “வா, நாம் திரும்பிப் போய்விடலாம். இல்லாவிட்டால், கழுதைகளை நினைத்துக் கவலைப்படுவதற்குப் பதிலாக அப்பா நம்மை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்”+ என்று சொன்னார்.  அதற்கு அந்த வேலைக்காரன், “அதோ, அந்த நகரத்தில் கடவுளுடைய ஊழியர் ஒருவர் இருக்கிறார். ஜனங்கள் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பு மரியாதை இருக்கிறது. அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடக்கும்.+ இப்போது அவரிடம் போகலாம். நாம் எங்கே போய்த் தேட வேண்டுமென்று ஒருவேளை அவர் சொல்வார்” என்றான்.  அதற்கு சவுல், “சரி போகலாம், ஆனால் அவருக்கு என்ன கொண்டுபோவது? உண்மைக் கடவுளுடைய ஊழியருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க ஒன்றும் இல்லையே. பையில் ரொட்டிகூட இல்லையே. நீ ஏதாவது வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார்.  அதற்கு அவன், “என்னிடம் கால் சேக்கல்* வெள்ளி இருக்கிறது. உண்மைக் கடவுளுடைய ஊழியருக்கு இதைக் கொடுக்கலாம். கழுதைகளை எங்கே போய்த் தேடலாமென்று அவர் நமக்குச் சொல்வார்” என்றான்.  (முன்பெல்லாம் இஸ்ரவேலில், ஒருவன் கடவுளிடம் விசாரிப்பதற்காகப் போகும்போது, “வா, நாம் இறைவாக்கு சொல்பவரிடம்+ போகலாம்” என்றுதான் சொல்வான். ஏனென்றால், அந்தக் காலத்தில் தீர்க்கதரிசிகளை இறைவாக்கு சொல்கிறவர்கள் என்றுதான் கூப்பிட்டார்கள்.) 10  அப்போது சவுல் தன்னுடைய வேலைக்காரனிடம், “சரி, நீ சொன்னபடியே செய்வோம், வா போகலாம்” என்றார். பின்பு, உண்மைக் கடவுளுடைய ஊழியர் இருந்த நகரத்துக்கு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். 11  அவர்கள் அந்த நகரத்துக்கு ஏறிப் போய்க்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுக்க வந்த இளம் பெண்களைப் பார்த்தார்கள். அவர்களிடம், “இந்த இடத்தில் இறைவாக்கு சொல்பவர்+ இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். 12  அதற்கு அவர்கள், “ஆமாம். அதோ, அங்கேதான் இருக்கிறார். சீக்கிரம் போங்கள். இன்றைக்கு ஆராதனை மேட்டில்+ பலி செலுத்துகிறார்கள்.+ அதனால், இந்த நகரத்துக்கு அவர் வந்திருக்கிறார். 13  நகரத்துக்குள் நீங்கள் சீக்கிரமாகப் போனால், ஆராதனை மேட்டுக்கு அவர் சாப்பிடப் போவதற்கு முன்பே பார்த்துவிடலாம். அவர் வரும்வரை ஜனங்கள் சாப்பிட மாட்டார்கள். ஏனென்றால், அந்தப் பலியை ஆசீர்வதிக்கச் சொல்லி அவர்தான் ஜெபம் செய்வார். அதற்குப் பின்புதான் அழைக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டும். நீங்கள் உடனே போனால் அவரைப் பார்க்கலாம்” என்று சொன்னார்கள். 14  அதனால், அவர்கள் அந்த நகரத்துக்குப் போனார்கள். உள்ளே பாதி தூரம் போனபோது, அவர்களை ஆராதனை மேட்டுக்குக் கூட்டிக்கொண்டு போவதற்காக சாமுவேல் அவர்களிடம் வந்துகொண்டிருந்தார். 15  சவுல் வருவதற்கு ஒருநாள் முன்புதான் யெகோவா சாமுவேலிடம், 16  “பென்யமீன் பிரதேசத்தைச்+ சேர்ந்த ஒருவனை நாளைக்கு இதே நேரத்தில் உன்னிடம் அனுப்புவேன். என்னுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு நீ அவனைத் தலைவனாக அபிஷேகம் செய்ய வேண்டும்.+ பெலிஸ்தியர்களிடமிருந்து அவன் என் ஜனங்களைக் காப்பாற்றுவான். என் ஜனங்கள் படுகிற கஷ்டங்களைப் பார்த்தேன், அவர்களுடைய கதறல் சத்தம் என் சன்னிதியை எட்டியது”+ என்று சொல்லியிருந்தார். 17  இப்போது, சாமுவேல் சவுலைப் பார்த்தார். யெகோவா அவரிடம், “இதோ, இவனைப் பற்றித்தான் நான் உன்னிடம் சொன்னேன், இவன்தான் என் ஜனங்களை ஆட்சி செய்வான்”+ என்றார். 18  பின்பு சவுல், நுழைவாசல் பக்கமாக வந்த சாமுவேலிடம் போய், “இறைவாக்கு சொல்பவரின் வீடு எங்கே இருக்கிறது? தயவுசெய்து சொல்லுங்கள்” என்று கேட்டார். 19  அதற்கு சாமுவேல், “இறைவாக்கு சொல்பவன் நான்தான். நீ எனக்கு முன்னால் ஆராதனை மேட்டுக்குப் போ. இன்றைக்கு நீ என்னோடு சாப்பிட வேண்டும்.+ நீ தெரிந்துகொள்ள விரும்புகிற எல்லா விஷயங்களையும் காலையில் உனக்குச் சொல்லி, உன்னை வழியனுப்பி வைப்பேன். 20  மூன்று நாட்களுக்கு முன்பு தொலைந்துபோன கழுதைகளைப்+ பற்றிக் கவலைப்பட வேண்டாம், அவை கிடைத்துவிட்டன. இஸ்ரவேலில் இருக்கிற அருமையானதெல்லாம் உனக்கும் உன் அப்பாவின் குடும்பத்துக்கும்தானே சொந்தம்?”+ என்றார். 21  அதற்கு சவுல், “இஸ்ரவேல் கோத்திரங்களிலேயே என்னுடைய பென்யமீன் கோத்திரம்தானே ரொம்பவும் சின்னது?+ பென்யமீன் குடும்பங்களிலேயே என்னுடைய குடும்பம்தானே ரொம்பவும் சாதாரணமானது? அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். 22  அப்போது, சாமுவேல் சவுலையும் அவருடைய வேலைக்காரனையும் சாப்பாட்டு அறைக்குக் கூட்டிக்கொண்டு வந்து, விருந்தாளிகளின் நடுவில் முக்கியமான ஓர் இடத்தில் உட்கார வைத்தார். அங்கே கிட்டத்தட்ட 30 ஆண்கள் இருந்தார்கள். 23  சாமுவேல் அங்கிருந்த சமையல்காரனிடம், “தனியாக எடுத்து வைக்கச் சொல்லி உன்னிடம் கொடுத்திருந்தேனே, அதை எடுத்துக்கொண்டு வா” என்றார். 24  உடனே அந்தச் சமையல்காரன், தொடைக் கறியை எடுத்துவந்து சவுலுக்கு முன்னால் வைத்தான். அப்போது சாமுவேல், “உனக்காக எடுத்து வைக்கப்பட்ட இறைச்சியைச் சாப்பிடு. விருந்தாளிகள் வருவார்கள் என்று நான் அவர்களிடம் சொல்லியிருந்தேன். அதனால் இதை உனக்காகவே எடுத்து வைத்திருக்கிறார்கள்” என்றார். அதனால், சவுல் அன்றைக்கு சாமுவேலோடு சாப்பிட்டார். 25  பின்பு, அவர்கள் ஆராதனை மேட்டிலிருந்து இறங்கி+ நகரத்துக்கு வந்தார்கள். சாமுவேல் சவுலுடன் மொட்டைமாடியில் பேசிக்கொண்டிருந்தார். 26  அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்தார்கள். அப்போது சாமுவேல் மொட்டைமாடியில் சவுலைக் கூப்பிட்டு, “புறப்படு, நான் உன்னை வழியனுப்பி வைக்கிறேன்” என்றார். சவுலும் புறப்பட்டார். அவரும் சாமுவேலும் வெளியே வந்தார்கள். 27  அவர்கள் நகரத்தின் எல்லையை நோக்கி இறங்கி வந்தபோது, “உன் வேலைக்காரனை+ முன்னால் போகச் சொல்” என்று சவுலிடம் சாமுவேல் சொன்னார். அதனால் அந்த வேலைக்காரன், முன்னால் நடந்துபோனான். பின்பு சாமுவேல் சவுலிடம், “கொஞ்சம் நில். கடவுளுடைய செய்தியை உனக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.

அடிக்குறிப்புகள்

ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா