தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம் 6:1-21

6  அடிமைகளாக* இருக்கிற எல்லாரும் தங்களுடைய எஜமான்களை மிகவும் மதிப்புக்குரியவர்களாகக் கருத வேண்டும்;+ அப்போதுதான், கடவுளுடைய பெயருக்கும் போதனைக்கும் எந்தப் பழிச்சொல்லும் வராது.+  அதோடு, கிறிஸ்தவ எஜமான்களைச் சகோதரர்கள்தானே என்று நினைத்து அவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, தங்களுடைய நல்ல வேலையால் பயன் பெறுகிற தங்கள் எஜமான்கள் விசுவாசிகளாகவும்* அன்புக்குரியவர்களாகவும் இருப்பதை மனதில் வைத்து இன்னும் ஆர்வத்தோடு அவர்களுக்காக உழைக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நீ அவர்களுக்குத் தொடர்ந்து கற்றுக்கொடு, தொடர்ந்து அறிவுரை சொல்.  ஒருவன் பொய்க் கோட்பாட்டைக் கற்றுக்கொடுக்கிறவனாக, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த பயனுள்ள* அறிவுரைகளையோ+ கடவுள்பக்திக்குரிய விஷயங்களையோ+ ஏற்றுக்கொள்ளாதவனாக இருந்தால்,  அவன் தலைக்கனம் பிடித்தவன், எதையும் புரிந்துகொள்ளாதவன்,+ விவாதங்களிலும் வார்த்தைகளைப் பற்றிய வாக்குவாதங்களிலும் மூழ்கிப்போயிருப்பவன்.*+ இவற்றிலிருந்தே பொறாமையும், சண்டை சச்சரவும், அவதூறான பேச்சும்,* பொல்லாத சந்தேகங்களும் வருகின்றன.  அதோடு, புத்திகெட்டவர்களாகவும்+ சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறவர்கள் மத்தியில் சிறுசிறு விஷயங்களைப் பற்றிய வாக்குவாதங்கள் எப்போதும் ஏற்படுகின்றன; கடவுள்பக்தியின் மூலம் ஆதாயம் பெறலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.+  கடவுள்பக்தி மிகுந்த ஆதாயம் தரும்+ என்பது உண்மைதான்; ஆனால் கடவுள்பக்தியோடுகூட, போதுமென்ற மனம்* உள்ளவர்களுக்குத்தான் அது மிகுந்த ஆதாயம் தரும்.  ஏனென்றால், இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டுபோகவும் முடியாது.+  அதனால், நமக்கு உணவும் உடையும்* இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.+  ஆனால், பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்;+ அதோடு, தீமையான, முட்டாள்தனமான பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களை நாசத்திலும் அழிவிலும்தான் அமிழ்த்துகின்றன.+ 10  பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, விசுவாசத்தைவிட்டு விலகி, பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.+ 11  ஆனால், கடவுளுடைய ஊழியனாகிய நீ இவற்றைவிட்டு விலகி ஓடு. நீதி, கடவுள்பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம்+ ஆகியவற்றையே நாடு. 12  விசுவாசத்துக்காகச் சிறந்த போராட்டத்தைப் போராடு; முடிவில்லாத வாழ்வை உறுதியாகப் பிடித்துக்கொள்; அந்த வாழ்வுக்காகத்தான் நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்; அதைப் பற்றித்தான் நீ நிறைய பேருக்கு முன்னால் அருமையாகச் சாட்சி கொடுத்திருக்கிறாய். 13  எல்லாவற்றையும் பாதுகாத்து வருகிற கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவுக்கு முன்னால் அருமையாகச் சாட்சி கொடுத்த கிறிஸ்து இயேசுவின்+ முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளை கொடுக்கிறேன்: 14  நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும்வரை,+ எந்த விதமான களங்கத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காத விதத்தில் நான் கொடுத்த கட்டளையைக் கடைப்பிடி. 15  குறித்த காலத்தில் அவர் தன்னை வெளிப்படுத்துவார். அவர்தான் சந்தோஷமானவர், ஒரே மாமன்னர், ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்.+ 16  அவர் ஒருவர்தான் சாவாமை உள்ளவர்,+ அணுக முடியாத ஒளியில் குடிகொண்டிருப்பவர்;+ எந்த மனிதனும் அவரைப் பார்த்ததில்லை, பார்க்கவும் முடியாது.+ அவருக்கே மாண்பும் முடிவில்லாத வல்லமையும் சொந்தம்! ஆமென்.* 17  இந்த உலகத்தில்* செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாதென்று அவர்களுக்கு அறிவுரை சொல்; நிலையில்லாத செல்வங்கள்மீது+ நம்பிக்கை வைக்காமல், நம்முடைய சந்தோஷத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்குகிற கடவுள்+ மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.* 18  அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல். 19  இந்த விதத்தில் எதிர்காலத்துக்காக நல்ல அஸ்திவாரத்தைப் போட்டு, அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்+ என்று அறிவுரை சொல்; இப்படிச் செய்யும்போது, உண்மையான வாழ்வை அவர்களால் உறுதியாகப் பிடித்துக்கொள்ள முடியும்.+ 20  தீமோத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நீ பாதுகாத்துக்கொள்;+ பரிசுத்தமான விஷயங்களுக்கு விரோதமான வீண் பேச்சுகளுக்கும், “அறிவு” என்று தவறாக அழைக்கப்படுகிற முரண்பட்ட கருத்துகளுக்கும் விலகியிரு.+ 21  ஏனென்றால், அப்படிப்பட்ட அறிவு தங்களுக்கு இருப்பதாகக் காட்டிக்கொண்டு சிலர் விசுவாசத்தைவிட்டே விலகிப்போயிருக்கிறார்கள். கடவுளுடைய அளவற்ற கருணை உன்மீது இருக்கட்டும்!

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ்.”
வே.வா., “இயேசுவின் சீஷர்களாகவும்.”
வே.வா., “ஆரோக்கியமான.”
வே.வா., “இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதும்.”
வே.வா., “வெறித்தனமாக ஈடுபடுகிறவன்.”
நே.மொ., “மன திருப்தி.”
அல்லது, “இருப்பிடமும்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
வே.வா., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “கட்டளையிடு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா