1 நாளாகமம் 12:1-40

12  கீசின் மகனான சவுலுக்குப் பயந்து+ சிக்லாகுவில்+ தாவீது ஒளிந்துகொண்டிருந்தபோது அவருடன் சேர்ந்துகொண்ட ஆட்களைப் பற்றிய தகவல். போரில் அவருக்கு உதவி செய்த மாவீரர்களுடன் இந்த ஆட்கள் சேர்ந்துகொண்டார்கள்.+  இவர்கள் வில்வீரர்கள்; வலது கையாலும் இடது கையாலும்+ திறமையாகக் கவண்கல் எறிகிறவர்கள்,+ அம்பு எறிகிறவர்கள். இவர்கள் பென்யமீன்+ கோத்திரத்தைச் சேர்ந்த சவுலின் சகோதரர்கள்.*  இவர்களுடைய பெயர்கள்: தலைவர் அகியேசேர் மற்றும் யோவாஸ்; இவர்கள் இரண்டு பேரும் கிபியா+ ஊரைச் சேர்ந்த செமாவின் மகன்கள். அஸ்மாவேத்தின்+ மகன்களான எசியேல், பேலேட், பெராக்கா, ஆனதோத்தியனான யெகூ.  மாவீரர்கள் 30 பேரில் ஒருவரும்+ அவர்களுக்குத் தலைவருமான இஸ்மாயா; இவர் கிபியோன்+ ஊரைச் சேர்ந்தவர். எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேராவியனான யோசபத்,  எலுசாய், யெரிமோத், பிகலியா, செமரியா, ஆரீப்பியனான செப்பத்தியா,  கோராகியர்களான+ எல்க்கானா, இஷியா, அசரெயேல், யொவேசேர், யாஷோபியாம்;  கேதோரைச் சேர்ந்த எரோகாமின் மகன்களாகிய யொவேலா, செபதியா.  வனாந்தரத்திலுள்ள ஒரு குகையில் தாவீது இருந்தபோது+ காத் கோத்திரத்தார் சிலர் அவருடன் சேர்ந்துகொண்டார்கள்; அவர்கள் போர்ப் பயிற்சி பெற்ற மாவீரர்கள்; பெரிய கேடயத்தையும் ஈட்டியையும் வைத்துக்கொண்டு தயாராக இருந்தார்கள். அவர்களுடைய முகம் சிங்க முகம்போல் இருந்தது; மலைகளில் திரியும் மான்கள்போல் படுவேகமாக ஓடினார்கள்.  வீரதீர செயல்களைச் செய்வதில் ஏத்சேர் முதலிடத்தில் இருந்தார்; ஒபதியா இரண்டாம் இடத்திலும், எலியாப் மூன்றாம் இடத்திலும், 10  மிஸ்மன்னா நான்காம் இடத்திலும், எரேமியா ஐந்தாம் இடத்திலும், 11  அத்தாய் ஆறாம் இடத்திலும், ஏலியேல் ஏழாம் இடத்திலும், 12  யோகனான் எட்டாம் இடத்திலும், எல்சபாத் ஒன்பதாம் இடத்திலும், 13  எரேமியா பத்தாம் இடத்திலும், மக்பன்னாய் பதினோராம் இடத்திலும் இருந்தார்கள். 14  காத் கோத்திரத்தைச்+ சேர்ந்த இவர்கள், தாவீதின் படைத் தலைவர்களாக இருந்தார்கள். கடைசி இடத்தில் இருந்தவர் 100 பேருக்குச் சமம். முதலிடத்தில் இருந்தவர் 1,000 பேருக்குச் சமம்.+ 15  முதல் மாதத்தில் யோர்தானில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது இவர்கள்தான் அதைக் கடந்து போனார்கள்; தாழ்வான பிரதேசங்களில் குடியிருந்த எல்லாரையும் கிழக்கேயும் மேற்கேயும் துரத்தியடித்தார்கள். 16  பென்யமீன், யூதா கோத்திரங்களைச் சேர்ந்த சிலரும்கூட தாவீதைப் பார்க்க அந்தக் குகைக்கு வந்தார்கள்.+ 17  தாவீது வெளியே வந்து அவர்களிடம், “எனக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு நீங்கள் வந்திருந்தால், நாம் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், எந்தத் தப்பும் செய்யாத என்னைக் காட்டிக்கொடுக்க வந்திருந்தால், நம் முன்னோர்களின் கடவுளே அதைப் பார்த்து தீர்ப்பு சொல்லட்டும்”+ என்றார். 18  அப்போது, 30 பேருக்குத் தலைவரான அமாசாய்க்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது;+ அவர், “தாவீதே, நாங்கள் உங்களுடைய ஆட்கள்; ஈசாயின் மகனே, நாங்கள் உங்களுடைய பக்கம் இருக்கிறோம்.+ சமாதானம்! உங்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும், உங்களுக்குத் துணையாக இருப்பவர்களுக்கும் சமாதானம் கிடைக்கட்டும்!கடவுள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்”+ என்று சொன்னார். அதனால், தாவீது அவர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு படைத் தலைவர்களாக நியமித்தார். 19  மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த சிலரும் தாவீதுடன் சேர்ந்துகொண்டார்கள்; அந்தச் சமயத்தில், சவுலுக்கு எதிராகப் போர் செய்யப்போன பெலிஸ்தியர்களுடன் தாவீதும் போனார். ஆனால், பெலிஸ்திய தலைவர்கள்+ கூடிப்பேசினார்கள்; “அவன் தன்னுடைய எஜமானாகிய சவுலுடன் சேர்ந்துகொண்டு நம் தலைக்கே குறி வைத்துவிடுவான்” என்று சொல்லி தாவீதை அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். அதனால், அவர் பெலிஸ்தியர்களுக்கு உதவி செய்யவில்லை.+ 20  தாவீது சிக்லாகுவுக்குப்+ போனபோது, அவரோடு சேர்ந்துகொண்ட மனாசே கோத்திரத்தார் இவர்களே: அத்ணா, யோசபத், யெதியாயேல், மிகாவேல், யோசபத், எலிகூ, சில்த்தாய்; இவர்கள் மனாசே கோத்திரத்திலுள்ள ஒவ்வொரு ஆயிரம் வீரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.+ 21  கொள்ளைக்கூட்டத்தாரைப் பிடிக்க தாவீதுக்கு உதவி செய்தார்கள்; ஏனென்றால், இவர்கள் எல்லாரும் பலசாலிகளாகவும் தைரியசாலிகளாகவும் இருந்தார்கள்;+ இவர்கள் அவருடைய படைத் தலைவர்களாக ஆனார்கள். 22  தினமும் வீரர்கள் வந்து தாவீதோடு சேர்ந்துகொண்டே இருந்தார்கள்;+ அதனால், அவருடைய படை கடவுளுடைய படையைப் போல மிகப் பெரியதாக ஆனது.+ 23  யெகோவாவின் உத்தரவுப்படி சவுலின் அரச பதவியை தாவீதுக்குக் கொடுக்க+ எப்ரோனுக்குச் சிலர் வந்தார்கள்.+ ஆயுதமேந்திய அந்த வீரர்களின் எண்ணிக்கை இதுவே: 24  யூதா கோத்திரத்தில் ஆயுதமேந்திய வீரர்கள் 6,800 பேர்; அவர்கள் பெரிய கேடயமும் ஈட்டியும் பிடித்திருந்தார்கள். 25  சிமியோன் கோத்திரத்தில், பலசாலிகளாகவும் தைரியசாலிகளாகவும் இருந்தவர்கள் 7,100 பேர். 26  லேவியரில், 4,600 பேர் வந்தார்கள். 27  ஆரோனின் வம்சத்தாருக்குத்+ தலைவராக இருந்த யோய்தாவுடன்+ 3,700 பேர் வந்தார்கள்; 28  பலசாலியாகவும் தைரியசாலியாகவும் இருந்த இளம் வீரர் சாதோக்கும்+ அவருடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் 22 பேரும் வந்தார்கள். 29  பென்யமீன் கோத்திரத்தார், அதாவது சவுலின் சகோதரர்கள்,*+ 3,000 பேர் வந்தார்கள்; பென்யமீன் கோத்திரத்தில் பெரும்பாலோர் முன்பு சவுலின் குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தார்கள். 30  எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பலசாலிகளாகவும் தைரியசாலிகளாகவும் இருந்த 20,800 பேர் வந்தார்கள்; இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தில் பிரபலமாக இருந்தார்கள். 31  மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பெயர் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18,000 பேர் தாவீதை ராஜாவாக்க வந்தார்கள். 32  இசக்கார் கோத்திரத்திலிருந்து 200 தலைவர்கள் வந்தார்கள். தாங்கள் வாழ்கிற காலத்தைப் பற்றியும், இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். இந்தத் தலைவர்களுடைய சகோதரர்கள்* எல்லாரும் இவர்களுடைய அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள். 33  செபுலோன் கோத்திரத்திலிருந்து 50,000 பயிற்சி பெற்ற வீரர்கள் வந்தார்கள். இவர்கள் போருக்கு அணிவகுத்துப் போகத் தயாராயிருந்தார்கள். இவர்களிடம் எல்லா விதமான போர் ஆயுதங்களும் இருந்தன. தாவீதுக்கு உண்மையாக* இருக்க வேண்டும் என்ற உறுதியோடு இவர்கள் எல்லாரும் அவருடன் சேர்ந்துகொண்டார்கள்.* 34  நப்தலி கோத்திரத்திலிருந்து 1,000 தலைவர்கள் வந்தார்கள்; பெரிய கேடயத்தோடும் ஈட்டியோடும் 37,000 வீரர்கள் அவர்களுடன் வந்தார்கள். 35  தாண் கோத்திரத்திலிருந்து, போருக்கு அணிவகுத்துப் போகத் தயாராக இருந்த 28,600 பேர் வந்தார்கள். 36  ஆசேர் கோத்திரத்திலிருந்து, போருக்கு அணிவகுத்துப் போகத் தயாராக இருந்த 40,000 வீரர்கள் வந்தார்கள். 37  யோர்தானுக்கு அக்கரையிலிருந்து+ 1,20,000 வீரர்கள் வந்தார்கள்; இவர்கள் ரூபன் கோத்திரத்தையும் காத் கோத்திரத்தையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லா விதமான போர் ஆயுதங்களையும் வைத்திருந்தார்கள். 38  இவர்கள் எல்லாரும் போர்வீரர்கள், போருக்கு அணிவகுத்துப் போகத் தயாராக இருந்தார்கள்; இஸ்ரவேல் முழுவதுக்கும் தாவீதை ராஜாவாக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இவர்களைப் போல், இஸ்ரவேலில் இருந்த மற்ற எல்லாரும்கூட தாவீதை ராஜாவாக்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்தோடு* இருந்தார்கள்.+ 39  அவர்கள் தாவீதோடு மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட்டார்கள், குடித்தார்கள்; எல்லா ஏற்பாடுகளையும் அவர்களுடைய சகோதரர்கள் செய்திருந்தார்கள். 40  அதோடு, யூதா கோத்திரத்தாருக்குப் பக்கத்தில் குடியிருந்தவர்களும், இசக்கார், செபுலோன், நப்தலி கோத்திரத்தாரைப் போல் தூரத்தில் குடியிருந்தவர்களும் கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள்,* மாடுகள் ஆகியவற்றின்மீது உணவு வகைகளை ஏற்றிக் கொண்டுவந்தார்கள்; மாவில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், அத்திப்பழ அடைகள், உலர்ந்த திராட்சை அடைகள், திராட்சமது, எண்ணெய், ஆடுமாடுகள் ஆகியவற்றை ஏராளமாய்க் கொண்டுவந்தார்கள்; ஏனென்றால், இஸ்ரவேலர்கள் எல்லாரும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.”
அதாவது, “ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.”
அதாவது, “ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “தாவீதோடு சேர்ந்துகொண்ட யாருமே இரண்டு இதயத்தோடு இல்லை.”
நே.மொ., “இதயத்தோடு.”
பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்கு.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா