1 நாளாகமம் 13:1-14

13  ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்களோடும் நூறு வீரர்களுக்குத் தலைவர்களோடும் மற்ற எல்லா தலைவர்களோடும்+ தாவீது கலந்துபேசினார்.  பின்பு தாவீது இஸ்ரவேல் சபையார் எல்லாரிடமும், “உங்களுக்கு நல்லதாகப் பட்டால், நம் கடவுளாகிய யெகோவா விரும்பினால், இஸ்ரவேல் தேசம் முழுவதும் குடியிருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களையும் வரச் சொல்லி செய்தி அனுப்புவோம்; தங்களுடைய நகரங்களில்* குடியிருக்கிற குருமார்களையும் லேவியர்களையும்கூட வரவழைப்போம்.+  பின்பு, எல்லாரும் சேர்ந்துபோய் நம் கடவுளுடைய பெட்டியைக் கொண்டுவருவோம்”+ என்று சொன்னார். ஏனென்றால், சவுலின் காலத்தில் அவர்கள் அந்தப் பெட்டியைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தார்கள்.+  தாவீது சொன்னது எல்லா மக்களுக்கும் சரியாகப் பட்டதால், சபையார் எல்லாரும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள்.  அதனால், உண்மைக் கடவுளுடைய பெட்டியை கீரியாத்-யெயாரீமிலிருந்து+ கொண்டுவருவதற்காக இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது ஒன்றுகூட்டினார்; சீகோர்முதல்* லெபோ-காமாத்வரை*+ குடியிருந்த மக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டினார்.  அந்தச் சமயத்தில் உண்மைக் கடவுளுடைய பெட்டி யூதாவுக்குச் சொந்தமான பாலாவில் இருந்தது,+ அதாவது கீரியாத்-யெயாரீமில் இருந்தது; கேருபீன்களுக்கு மேலே* அமர்ந்திருக்கும் யெகோவாவுடைய+ பெயரைச் சொல்லி, மக்கள் எல்லாரும் அந்தப் பெட்டிக்கு முன்னால் வேண்டிக்கொள்வார்கள். அந்தப் பெட்டியைக் கொண்டுவர தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் புறப்பட்டுப் போனார்கள்.  உண்மைக் கடவுளுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புதிய மாட்டுவண்டியில் ஏற்றினார்கள்.+ ஊசாவும் அகியோவும் அந்த மாட்டுவண்டிக்கு முன்னால் நடந்துபோனார்கள்.+  தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் உண்மைக் கடவுளுக்கு முன்னால் உற்சாகம் பொங்கக் கொண்டாடினார்கள்; பாடல்களைப் பாடிக்கொண்டும், யாழ்கள், மற்ற நரம்பிசைக் கருவிகள், கஞ்சிராக்கள்+ ஆகியவற்றை இசைத்துக்கொண்டும், ஜால்ராக்களைத்+ தட்டிக்கொண்டும், எக்காளங்களை+ ஊதிக்கொண்டும் நடந்துபோனார்கள்.  அவர்கள் கீதோனின் களத்துமேட்டுக்கு வந்தபோது, மாடுகள் தடுமாறியதால் கடவுளுடைய பெட்டி கீழே விழப்போனது. உடனே ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்தான். 10  அதனால், ஊசாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்ததால், அவனைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அவன் அந்த இடத்திலேயே கடவுளுக்கு முன்னால் விழுந்து செத்தான்.+ 11  யெகோவா கடும் கோபத்தோடு ஊசாவைக் கொன்றுபோட்டதால் தாவீது கோபம்* அடைந்தார். அதனால், அந்த இடம் இன்றுவரை பேரேஸ்-ஊசா* என்று அழைக்கப்படுகிறது. 12  அன்றைக்கு தாவீது உண்மைக் கடவுளுக்குப் பயந்து, “உண்மைக் கடவுளுடைய பெட்டியை எப்படி என்னுடைய இடத்துக்குக் கொண்டுபோவேன்?”+ என்றார். 13  கடவுளுடைய பெட்டியை ‘தாவீதின் நகரத்திலிருந்த’ தன்னுடைய இடத்துக்கு அவர் கொண்டுபோகவில்லை. அதற்குப் பதிலாக, காத்* நகரத்தைச் சேர்ந்த ஓபேத்-ஏதோம் வீட்டுக்கு அதை அனுப்பிவைத்தார். 14  உண்மைக் கடவுளுடைய பெட்டி ஓபேத்-ஏதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தது; அப்போது, அவருடைய வீட்டிலிருந்த எல்லாரையும் அவருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்து வந்தார்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மேய்ச்சல் நிலங்களுடன் சேர்ந்த நகரங்களில்.”
வே.வா., “எகிப்து ஆறுமுதல்.”
வே.வா., “காமாத்தின் நுழைவாசல்வரை.”
அல்லது, “நடுவில்.”
வே.வா., “மனவேதனை.”
அர்த்தம், “ஊசாமீது மூண்ட கடும் கோபம்.”
‘காத்’ என்பது காத்-ரிம்மோன் நகரத்தைக் குறிக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா