1 நாளாகமம் 16:1-43

16  உண்மைக் கடவுளின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, உண்மைக் கடவுளுக்கு முன்னால் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார்கள்.+  தாவீது தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ கொடுத்த பின்பு, யெகோவாவுடைய பெயரில் மக்களை ஆசீர்வதித்தார்.  அதோடு, அங்கே வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும், ஆண்கள் பெண்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வட்ட ரொட்டியையும் பேரீச்ச அடையையும் உலர்ந்த திராட்சை அடையையும் கொடுத்தார்.  பின்பு, யெகோவாவின் பெட்டிக்கு+ முன்னால் சேவை செய்வதற்கும் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும்* போற்றிப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் சில லேவியர்களை நியமித்தார்.  அவர்களுடைய தலைவர் ஆசாப்.+ அவருக்கு அடுத்த இடத்தில் சகரியா இருந்தார். எயியேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்-ஏதோம், எயியேல்+ ஆகியோர் யாழ்களையும் மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்தார்கள்.+ ஆசாப் ஜால்ராக்களைத் தட்டி ஓசையெழுப்பினார்.+  குருமார்களான பெனாயாவும் யகாசியேலும் உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் எக்காளங்களை ஊதினார்கள்.  அன்று யெகோவாவுக்கு முதன்முதலில் தாவீது நன்றிப் பாடலை எழுதினார், அந்தப் பாடலைப் பாடச் சொல்லி ஆசாப்பிடமும்+ அவருடைய சகோதரர்களிடமும் சொன்னார். அந்தப் பாடல் இதுதான்:   “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+   அவருக்காகப் பாடல் பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்,+அவருடைய அதிசயமான செயல்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசியுங்கள்.*+ 10  அவருடைய பரிசுத்த பெயரைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள்.+ யெகோவாவை நாடுகிறவர்களின் இதயம் சந்தோஷத்தில் துள்ளட்டும்.+ 11  யெகோவாவைத் தேடுங்கள்,+ அவரிடம் பலம் கேட்டு வேண்டுங்கள். எப்போதும் அவருடைய முகத்தையே நாடுங்கள்.+ 12  அவருடைய ஊழியரான இஸ்ரவேலின் சந்ததியே,+ யாக்கோபின் வம்சமே, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே!+ 13  அவர் செய்த அதிசயமான செயல்களையும்+ அற்புதங்களையும்அவர் கொடுத்த நீதித்தீர்ப்புகளையும் நினைத்துப் பாருங்கள். 14  அவர்தான் நம் கடவுளாகிய யெகோவா.+ அவருடைய நீதித்தீர்ப்புகள் பூமி முழுவதும் கொடுக்கப்படுகின்றன.+ 15  அவர் செய்த ஒப்பந்தத்தை எப்போதும் நினைத்துப் பாருங்கள்;ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்குத் தந்த வாக்குறுதியை நினைத்துப் பாருங்கள்.+ 16  ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தையும்,+ஈசாக்குக்குக் கொடுத்த உறுதிமொழியையும்+ நினைத்துப் பாருங்கள், 17  அதை யாக்கோபுக்கு ஓர் ஆணையாகவும்,+இஸ்ரவேலுக்கு ஒரு நிரந்தர ஒப்பந்தமாகவும் கொடுத்து உறுதிப்படுத்தினார். 18  அப்போது, ‘கானான் தேசத்தை+ உனக்குச் சொத்தாகத் தருவேன்’+ என்று சொன்னார். 19  அந்தச் சமயத்தில் அவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்,கொஞ்சத்திலும் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள், அந்தத் தேசத்தில் அன்னியர்களாக இருந்தார்கள்.+ 20  தேசம் தேசமாக அவர்கள் அலைந்து திரிந்தார்கள்,ராஜ்யம் ராஜ்யமாகச் சுற்றித் திரிந்தார்கள்.+ 21  அவர்களை அடக்கி ஒடுக்க எந்த மனிதனையும் கடவுள் அனுமதிக்கவில்லை,+ஆனால், அவர்களுக்காக ராஜாக்களையே கண்டித்து,+ 22  ‘நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல்* கை வைக்காதீர்கள்,என் தீர்க்கதரிசிகளுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதீர்கள்’+ என்று சொன்னார். 23  பூமியெங்கும் உள்ளவர்களே, யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்! அவர் தரும் மீட்பைப் பற்றித் தினம் தினம் அறிவியுங்கள்!+ 24  அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்,அவருடைய அற்புதமான செயல்களைப் பற்றி எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 25  யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர். மற்ற எல்லா தெய்வங்களையும்விட அதிக பயபக்திக்குரியவர்.+ 26  மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்,+ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+ 27  மகத்துவமும் மேன்மையும் அவருடைய சன்னிதியில் இருக்கின்றன.+பலமும் சந்தோஷமும் அவருடைய வீட்டில் இருக்கின்றன.+ 28  ஜனங்களின் வம்சங்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்,யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+ 29  யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்;+காணிக்கையோடு அவர் முன்னால் வாருங்கள்.+ பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.*+ 30  பூமியெங்கும் உள்ளவர்களே! அவர் முன்னால் நடுநடுங்குங்கள்! பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது.+ 31  வானம் சந்தோஷப்படட்டும், பூமி பூரித்துப்போகட்டும்;+‘யெகோவா ராஜாவாகிவிட்டார்!’ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள்.+ 32  கடலும் அதில் நிறைந்திருப்பவையும் முழக்கம் செய்யட்டும்;வயல்களும் அவற்றிலுள்ள அனைத்தும் ஆனந்தப்படட்டும். 33  அவற்றோடு சேர்ந்து காட்டு மரங்களும் கடவுளுக்குமுன் சந்தோஷக் குரல் எழுப்பட்டும்.ஏனென்றால், யெகோவா பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார். 34  யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்;+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+ 35  ‘எங்களை மீட்கிற கடவுளே, எங்களைக் காப்பாற்றுங்கள்,+மற்ற தேசங்களிலிருந்து எங்களைக் கூட்டிச்சேர்த்து எங்களைக் காப்பாற்றுங்கள்.அப்போது, உங்களுடைய பரிசுத்தமான பெயருக்கு நன்றி சொல்வோம்,+சந்தோஷம் பொங்க உங்களைப் புகழ்வோம்.+ 36  இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு என்றென்றும் புகழ் சேரட்டும்.’”இந்தப் பாடலைக் கேட்ட மக்கள் எல்லாரும், “ஆமென்!”*என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள். 37  பின்பு, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் சேவை செய்ய ஆசாப்பையும்+ அவருடைய சகோதரர்களையும் தாவீது நியமித்தார்.+ அங்கே வழக்கமாகச் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் தினமும் செய்வதற்காக+ அவர்களை நியமித்தார். 38  அதோடு, ஓபேத்-ஏதோமையும் அவருடைய சகோதரர்கள் 68 பேரையும் நியமித்தார். எதித்தூனின் மகன் ஓபேத்-ஏதோமையும் ஓசாவையும் வாயிற்காவலர்களாக நியமித்தார்; 39  யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனிலுள்ள+ ஆராதனை மேட்டில் இருந்தது. அங்கே குருவாகிய சாதோக்கும்+ மற்ற குருமார்களும் சேவை செய்தார்கள். 40  தகன பலிக்கான பலிபீடத்தில் காலையும் மாலையும் தவறாமல் யெகோவாவுக்குத் தகன பலி கொடுத்தார்கள். இஸ்ரவேலுக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்தில் உள்ளபடியே எல்லாவற்றையும் செய்தார்கள்.+ 41  அவர்களோடு ஏமானையும் எதித்தூனையும்+ பெயர் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண்களையும் யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக நியமித்தார்கள்;+ “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி கடவுளை அவர்கள் புகழ்ந்து பாடினார்கள்.+ 42  ஏமானும்+ எதித்தூனும் எக்காளங்களை ஊதி, ஜால்ராக்களைத் தட்டி, மற்ற இசைக் கருவிகளை இசைத்து உண்மைக் கடவுளைப் புகழ்ந்தார்கள். எதித்தூனின்+ மகன்கள் வாயிற்காவலர்களாகச் சேவை செய்தார்கள். 43  பின்பு, மக்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளுக்குப் போனார்கள். தாவீதும் தன்னுடைய குடும்பத்தாரை ஆசீர்வதிப்பதற்காகப் போனார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நினைத்துப் பார்ப்பதற்கும்.”
அல்லது, “அறிவியுங்கள்.”
வே.வா., “அபிஷேகம் செய்தவர்கள்மேல்.”
நே.மொ., “அலங்காரத்தோடு.”
அல்லது, “யெகோவா பரிசுத்தத்தில் மகத்தானவராக இருப்பதால் அவரை வணங்குங்கள்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா