1 நாளாகமம் 19:1-19

19  பின்பு, அம்மோனியர்களின் ராஜா நாகாஸ் இறந்துபோனார்; அடுத்ததாக, அவருடைய மகன் ராஜாவானான்.+  அப்போது தாவீது, “நாகாஸ் எனக்கு மாறாத அன்பு காட்டியதால் நானும் அவருடைய மகன் ஆனூனுக்கு மாறாத அன்பு காட்டுவேன்”+ என்று சொன்னார். அதனால், அவனுக்கு ஆறுதல் சொல்ல தூதுவர்களை அனுப்பிவைத்தார். அதன்படியே, ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல தாவீதின் ஊழியர்கள் அம்மோனியர்களின்+ தேசத்துக்குப் போனார்கள்.  அப்போது அந்தத் தேசத்தின் தலைவர்கள் ஆனூனிடம், “தாவீது ஆறுதல் சொல்வதற்காக ஆட்களை அனுப்பியிருக்கிறானே, அது உங்கள் அப்பா மீதிருக்கிற மரியாதையால் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். தேசத்தை நன்றாக ஆராய்ந்து உளவு பார்ப்பதற்காகவும், பின்பு அதை அழிப்பதற்காகவும்தான் அவனுடைய ஊழியர்கள் வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.  அதனால், ஆனூன் தாவீதுடைய ஊழியர்களைப் பிடித்து அவர்களுடைய தாடியைச் சிரைத்தான்,+ அவர்களுடைய அங்கிகளை இடுப்புக்குக் கீழே வெட்டிவிட்டு அவர்களைத் துரத்தியடித்தான்.  இந்த விஷயம் தாவீதுக்குத் தெரிவிக்கப்பட்டவுடனே, அவர்களைச் சந்திக்க ஆட்களை அனுப்பினார். ஏனென்றால், அவர்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருந்தார்கள். “தாடி வளரும்வரை எரிகோவில்+ தங்கிவிட்டு, பின்பு திரும்பி வாருங்கள்” என்று ராஜா அவர்களிடம் சொல்லச் சொன்னார்.  அதன் பின்பு, தாங்கள் தாவீதின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டதை அம்மோனியர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால், ஆனூனும் அம்மோனியர்களும் 1,000 வெள்ளி தாலந்தை* கூலியாகக் கொடுத்து மெசொப்பொத்தாமியா,* அராம்-மாக்கா, சோபா ஆகிய இடங்களிலிருந்து ரதங்களையும் குதிரைவீரர்களையும் வரவழைத்தார்கள்.+  இப்படி அவர்கள் 32,000 ரதங்களை வரவழைத்தார்கள். அதோடு, மாக்காவின் ராஜாவையும் அவருடைய வீரர்களையும் கூலி கொடுத்து வரவழைத்தார்கள்; இவர்கள் எல்லாரும் வந்து மேதேபாவுக்கு+ முன்னால் முகாம்போட்டார்கள். போர் செய்ய அம்மோனியர்கள் தங்களுடைய நகரங்களிலிருந்து திரண்டு வந்தார்கள்.  தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, யோவாபின்+ தலைமையில் முழு படையையும் தலைசிறந்த வீரர்களையும் அனுப்பினார்.+  அம்மோனியர்கள் வெளியே வந்து தங்களுடைய நகரத்தின் நுழைவாசலில் அணிவகுத்து நின்றார்கள்; மற்ற தேசத்து ராஜாக்கள் இன்னொரு அணியாக வெட்டவெளியில் நின்றார்கள். 10  முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எதிரிகள் தன்னைத் தாக்க வருவதை யோவாப் பார்த்தார், அதனால் இஸ்ரவேலர்களில் மிகச் சிறந்த வீரர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து சீரியர்களோடு போர் செய்வதற்காக அவர்களை அணிவகுத்து நிற்க வைத்தார்.+ 11  அம்மோனியர்களோடு போர் செய்வதற்காக மற்ற வீரர்களைத் தன்னுடைய சகோதரன் அபிசாயின்+ தலைமையில் அணிவகுத்து நிற்க வைத்தார். 12  யோவாப் அபிசாயிடம், “சீரியர்களை+ என்னால் சமாளிக்க முடியவில்லை என்றால், நீ வந்து எனக்கு உதவி செய். அம்மோனியர்களை உன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால், நான் வந்து உனக்கு உதவி செய்கிறேன். 13  நம்முடைய மக்களையும் நம்முடைய கடவுளின் நகரங்களையும் பாதுகாப்பதற்காகத் தைரியத்தோடும் உறுதியோடும்+ போர் செய்வோம். யெகோவா தன்னுடைய பங்கில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்” என்று சொன்னார். 14  யோவாபும் அவரோடு இருந்த வீரர்களும் சீரியர்களோடு போர் செய்ய முன்னேறிப் போனார்கள், அப்போது சீரியர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள்.+ 15  சீரியர்கள் தப்பித்து ஓடியதை அம்மோனியர்கள் பார்த்ததும், அவருடைய சகோதரன் அபிசாயிடமிருந்து பின்வாங்கி நகரத்துக்குள் ஓடிப்போனார்கள். இதற்குப் பின்பு, யோவாப் எருசலேமுக்குத் திரும்பினார். 16  இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போன சீரியர்கள், ஆற்றுப்பகுதிக்கு* பக்கத்தில்+ குடியிருந்த மற்ற சீரியர்களை வரச் சொல்லி தூதுவர்களை அனுப்பினார்கள். ஆதாதேசரின் படைத் தளபதியான சோப்பாக்கின் தலைமையில் அவர்கள் வந்தார்கள்.+ 17  தாவீதுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது, உடனே அவர் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து அவர்களிடம் வந்தார். தன்னுடைய வீரர்களை சீரியர்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்க வைத்தார். அப்படி அவர்கள் அணிவகுத்து நின்றபோது, சீரியர்கள் தாவீதை எதிர்த்துப் போர் செய்தார்கள்.+ 18  ஆனால், சீரியர்கள் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள். சீரியர்களுடைய 7,000 ரதவீரர்களையும் 40,000 காலாட்படை வீரர்களையும் தாவீது கொன்றுபோட்டார். அவர்களுடைய படைத் தளபதியான சோப்பாக்கையும் கொன்றுபோட்டார். 19  இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போனதால்+ ஆதாதேசரின் ஊழியர்கள் உடனடியாக தாவீதுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவருக்கு அடிபணிந்தார்கள்.+ அதன் பின்பு, அம்மோனியர்களுக்கு உதவி செய்ய சீரியர்கள் விரும்பவில்லை.

அடிக்குறிப்புகள்

ஒரு தாலந்து என்பது 34.2 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “அராம்-நகராயிம்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுப்பகுதிக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா