1 நாளாகமம் 20:1-8

20  வருஷத்தின் ஆரம்பத்தில்,* ராஜாக்கள் போருக்குப் போவது வழக்கம். அப்போது, யோவாப்+ படையெடுத்துப் போய் அம்மோனியர்களின் தேசத்தை அழித்துப்போட்டார்; அவர் ரப்பாவுக்கு+ வந்து அதை முற்றுகையிட்டார்; ஆனால், தாவீது எருசலேமிலேயே தங்கிவிட்டார்.+ யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தரைமட்டமாக்கினார்.+  பின்பு, மல்காம் தெய்வத்தின் தலையிலிருந்த கிரீடத்தை தாவீது எடுத்துக்கொண்டார். அதன் எடை ஒரு தாலந்து* தங்கம். அதில் விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதை தாவீதின் தலையில் வைத்தார்கள். அந்த நகரத்திலிருந்து ஏராளமான பொருள்களையும் அவர் கைப்பற்றினார்.+  அங்கிருந்த மக்களை நகரத்துக்கு வெளியே கொண்டுவந்து கல் அறுக்கும் வேலையை அவர்களுக்குக் கொடுத்தார்.+ கூர்மையான இரும்புக் கருவிகளையும் கோடாலிகளையும் பயன்படுத்தி வேலை செய்ய வைத்தார். அம்மோனியர்களுடைய நகரங்களில் இருந்த எல்லாரிடமும் இப்படியே வேலை வாங்கினார். கடைசியில், தன்னுடைய படை முழுவதையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்.  இதற்குப் பின்பு, கேசேர் என்ற இடத்தில் இஸ்ரவேலர்களுக்கும் பெலிஸ்தியர்களுக்கும் போர் நடந்தது. அப்போது, ரெப்பாயீம்+ வம்சத்தைச் சேர்ந்த சிப்பாய் என்பவனை உஷாத்தியனான சிபெக்காய்+ வெட்டிக் கொன்றார். அந்தப் போரில் பெலிஸ்தியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.  மறுபடியும் பெலிஸ்தியர்களுடன் போர் நடந்தது. காத் நகரத்தைச் சேர்ந்த கோலியாத்தின்+ சகோதரன் லாகேமியை யாவீரின் மகன் எல்க்கானான் வெட்டிக் கொன்றார். லாகேமி வைத்திருந்த ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் பெரிதாக இருந்தது.+  மறுபடியும் காத்+ நகரத்தில் போர் நடந்தது. அங்கே ரெப்பாயீம் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவன் மிக மிக உயரமாக இருந்தான்.+ அவனுடைய கைகள் கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறாறு விரல்கள் இருந்தன; மொத்தம் 24 விரல்கள் இருந்தன.+  அவன் இஸ்ரவேலர்களைக் கேலி செய்துகொண்டே இருந்தான்.+ அதனால், தாவீதின் அண்ணனாகிய சிமேயாவுடைய+ மகன் யோனத்தான் அவனை வெட்டிச் சாய்த்தான்.  ரெப்பாயீம் வம்சத்தாரான+ இவர்கள் எல்லாரும் காத் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.+ அவர்களை தாவீதும் அவருடைய ஊழியர்களும் வெட்டி வீழ்த்தினார்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “வசந்த காலத்தில்.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா