பேதுருவின் முதலாம் கடிதம் 3:1-22
3 அதேபோல் மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.+ அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும்,
2 உங்கள் கற்புள்ள நடத்தையையும்+ நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து அவர் விசுவாசியாக* ஆகலாம்;+ நீங்கள் ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே உங்கள் நடத்தையால் அவர் விசுவாசியாக ஆகலாம்.
3 தலைமுடியைப் பின்னிக்கொள்வது, தங்க நகைகளைப் போட்டுக்கொள்வது,+ ஆடம்பரமான உடைகளை உடுத்திக்கொள்வது போன்ற வெளிப்புற அலங்காரம் உங்களுக்கு அலங்காரமாக இருக்க வேண்டாம்.
4 அதற்குப் பதிலாக, இதயத்தில் மறைந்திருக்கிற அமைதியும் சாந்தமுமான குணம்தான் உங்களுக்கு அழியாத அலங்காரமாக இருக்க வேண்டும்.+ அதுதான் கடவுளுடைய பார்வையில் மிகவும் மதிப்புள்ளது.
5 பூர்வ காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருந்த பரிசுத்த பெண்களும் தங்களை இப்படித்தான் அலங்கரித்துக்கொண்டு தங்களுடைய கணவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள்.
6 சாராளும்கூட ஆபிரகாமை எஜமானே என்று கூப்பிட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்தாள்;+ நீங்களும் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்து, எதற்கும் பயப்படாமல் இருந்தால்,+ சாராளுக்கு மகள்களாக இருப்பீர்கள்.
7 அதேபோல் கணவர்களே, நீங்களும் உங்கள் மனைவியை நன்றாகப் புரிந்துகொண்டு* அவளோடு வாழுங்கள்; பெண்ணாக இருப்பவள் உங்களைவிட பலவீனமாக* இருப்பதாலும், கடவுளுடைய அளவற்ற தயவால் உங்களோடுகூட அவளுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்கப்போவதாலும்,+ அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்;+ இல்லையென்றால், உங்கள் ஜெபங்களைக் கடவுள் கேட்க மாட்டார்.
8 முடிவாக, நீங்கள் எல்லாரும் ஒரே சிந்தையோடு இருங்கள்,+ அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும் கரிசனையையும்+ மனத்தாழ்மையையும்+ காட்டுங்கள்.
9 யாராவது கெட்டது செய்தால் பதிலுக்குக் கெட்டது செய்யாதீர்கள்,+ யாராவது அவமானப்படுத்தினால் பதிலுக்கு அவமானப்படுத்தாதீர்கள்;+ அதற்கு மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள்.+ இப்படி நடந்துகொண்டு ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவே* நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
10 “வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்து, நன்றாக வாழ விரும்புகிற ஒருவன் கெட்ட விஷயங்களைப் பேசாதபடி தன் நாவையும், பொய் பேசாதபடி தன் உதடுகளையும் அடக்கி வைக்க வேண்டும்.+
11 கெட்டதைவிட்டு விலகி+ நல்லது செய்ய வேண்டும்;+ சமாதானத்தைத் தேடி, அதற்காகப் பாடுபட வேண்டும்.+
12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+
13 நீங்கள் நல்லது செய்வதில் வைராக்கியமாக இருந்தால், யார் உங்களுக்குக் கெடுதல் செய்வார்கள்?+
14 நீதிக்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும், சந்தோஷமாக இருப்பீர்கள்.+ மற்றவர்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறார்களோ அதைப் பார்த்து நீங்களும் பயப்படாதீர்கள்,* கலக்கம் அடையாதீர்கள்.+
15 கிறிஸ்துவை எஜமானாகவும், பரிசுத்தமானவராகவும் உங்கள் இதயங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும்+ ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள்.+
16 நல்ல மனசாட்சியோடு இருங்கள்.+ அப்போதுதான், கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கிற உங்களுடைய நல்ல நடத்தையைப்+ பழிக்கிறவர்கள் உங்களுக்கு விரோதமாய்ப் பேசியதற்காக வெட்கப்பட்டுப்போவார்கள்.+
17 நீங்கள் கெட்டது செய்து கஷ்டப்படுவதைவிட,+ கடவுளுக்கு விருப்பமானால்,* நல்லது செய்து கஷ்டப்படுவதே மேல்.+
18 கிறிஸ்துவும், பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக இறந்தார்;+ அநீதிமான்களுக்காக ஒரு நீதிமான் மரணமடைந்தார்;+ உங்களைக் கடவுளிடம் வழிநடத்துவதற்காக+ இறந்தார். அவர் பூமிக்குரிய உடலில் கொல்லப்பட்டார்,+ பரலோகத்துக்குரிய உடலில் உயிர்ப்பிக்கப்பட்டார்.+
19 பின்பு, காவலில் இருக்கிற தேவதூதர்களிடம் போய்ப் பிரசங்கித்தார்.+
20 அந்தத் தேவதூதர்கள், முற்காலத்தில் நோவா பேழையைக் கட்டிக்கொண்டிருந்த நாட்களில்,+ கடவுள் பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தபோது கீழ்ப்படியாமல் போனவர்கள்;+ அந்தப் பேழைக்குள் இருந்தவர்கள் மட்டும்தான், அதாவது எட்டுப் பேர்* மட்டும்தான் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.+
21 இதற்கு ஒப்பாக இருக்கிற ஞானஸ்நானம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் இப்போது உங்களைக் காப்பாற்றுகிறது. ஞானஸ்நானம் உடலின் அழுக்கை நீக்குவதாக இல்லாமல், நல்ல மனசாட்சிக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதாக இருக்கிறது.+
22 கிறிஸ்து பரலோகத்துக்குப் போய், இப்போது கடவுளுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்;+ தேவதூதர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் வல்லமையுள்ளவர்களும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “இயேசுவின் சீஷராக.”
^ வே.வா., “மனைவிமீது அக்கறை காட்டி.”
^ நே.மொ., “பலவீனமான பாத்திரமாக.”
^ நே.மொ., “ஆஸ்தியாகப் பெறுவதற்காகவே.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ அல்லது, “மற்றவர்களுடைய மிரட்டல்களுக்குப் பயப்படாதீர்கள்.”
^ வே.வா., “சித்தமானால்.”
^ சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.