1 ராஜாக்கள் 11:1-43

11  பார்வோனின் மகளை+ மட்டுமல்லாமல், மோவாபிய,+ அம்மோனிய,+ ஏதோமிய, சீதோனிய,+ ஏத்திய+ பெண்கள் என மற்ற தேசத்துப் பெண்கள் பலரையும் சாலொமோன் ராஜா நேசித்தார்.+  ஆனால், அந்தத் தேசத்து மக்களைப் பற்றி யெகோவா ஏற்கெனவே இஸ்ரவேலர்களுக்கு எச்சரிப்பு கொடுத்திருந்தார்; “நீங்கள் அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது,* அவர்களும் உங்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் சம்பந்தம் வைத்தால், அவர்கள் கண்டிப்பாக உங்கள் மனதை மாற்றி, தங்களுடைய தெய்வங்களை வணங்க வைத்துவிடுவார்கள்”+ என்று சொல்லியிருந்தார். ஆனால் சாலொமோன் அந்தப் பெண்கள்மீது* கொள்ளை ஆசை வைத்திருந்தார், அவர்களை நேசித்தார்.  சாலொமோனுக்கு 700 மனைவிகள் இருந்தார்கள். அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தவிர, அவருக்கு 300 மறுமனைவிகளும் இருந்தார்கள். அவருடைய மனைவிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இதயத்தை வழிவிலகச் செய்தார்கள்.*  வயதான காலத்தில்,+ அவருடைய மனைவிகள் அவர் இதயத்தை வழிவிலகச் செய்து மற்ற தெய்வங்களை வணங்க வைத்தார்கள்.+ இதனால், அவர் தன்னுடைய அப்பாவாகிய தாவீதைப் போல் தன் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கவில்லை.  சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும்+ அம்மோனியர்கள் வணங்கிய அருவருப்பான தெய்வமாகிய மில்கோமையும்+ சாலொமோன் வணங்கினார்.  யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார், தன்னுடைய அப்பாவாகிய தாவீதைப் போல் யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கவில்லை.+  அதன் பிறகு, மோவாபியர்கள் வணங்கிய அருவருப்பான தெய்வமாகிய கேமோஷுக்கு அவர் ஓர் ஆராதனை மேட்டைக்+ கட்டினார். அம்மோனியர்கள் வணங்கிய+ அருவருப்பான தெய்வமாகிய மோளேகுக்கும்+ ஓர் ஆராதனை மேட்டைக் கட்டினார். இவற்றை எருசலேமுக்கு முன்னாலிருந்த மலையில் கட்டினார்.  மற்ற தேசத்தைச் சேர்ந்த அவருடைய மனைவிகள் தங்களுடைய தெய்வங்களுக்காகப் பலிகளை எரித்து அவற்றிலிருந்து புகை எழும்பிவரச் செய்தார்கள்; அவர்கள் எல்லாருக்காகவும் இதுபோன்ற ஆராதனை மேடுகளை அவர் கட்டித் தந்தார்.  சாலொமோனின் இதயம் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைவிட்டு வழிவிலகிப்போனதால் யெகோவாவுக்கு அவர்மீது பயங்கர கோபம் வந்தது.+ முன்பு சாலொமோனுக்கு அவர் இரண்டு தடவை தரிசனம் தந்திருந்தார்,+ 10  மற்ற தெய்வங்களை வணங்கக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.+ அப்படி எச்சரித்திருந்தும் யெகோவாவுடைய கட்டளைக்கு சாலொமோன் கீழ்ப்படியவில்லை. 11  அதனால் யெகோவா அவரிடம், “நீ என்னைவிட்டு விலகிப் போய்விட்டாய், என் ஒப்பந்தத்தையும் மீறிவிட்டாய்; நான் கொடுத்த சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டாய். அதனால், நான் கண்டிப்பாக ஆட்சியை உன் கையிலிருந்து பிடுங்கி, உன்னுடைய ஊழியர்களில் ஒருவரிடம் கொடுப்பேன்.+ 12  ஆனால், உன் அப்பாவாகிய தாவீதுக்காக இதை உன் காலத்தில் செய்ய மாட்டேன். அதற்குப் பதிலாக, உன்னுடைய மகன் கையிலிருந்து ஆட்சியைப் பிடுங்கிவிடுவேன்.+ 13  ஆனால், ஆட்சியை முழுவதுமாக அவனிடமிருந்து பிடுங்கிவிட மாட்டேன்.+ ஒரு கோத்திரத்தை உன்னுடைய வாரிசுக்குக் கொடுப்பேன்.+ இதை என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும் நான் தேர்ந்தெடுத்த எருசலேமுக்காகவும் செய்வேன்”+ என்று சொன்னார். 14  யெகோவா, ஆதாத் என்பவனை சாலொமோனுடைய எதிரியாக்கினார்.+ இவன் ஏதோமின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்.+ 15  தாவீது ஏதோமியர்களைத் தோற்கடித்த சமயத்தில்,+ இறந்துபோனவர்களை அடக்கம் பண்ணுவதற்கு படைத் தளபதி யோவாப் போனார். ஏதோமிலிருந்த ஆண்கள் எல்லாரையும் கொன்றுபோட முயற்சி செய்தார். 16  (யோவாபும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் ஆறு மாதத்துக்கு அங்கேயே தங்கியிருந்து, ஏதோமிலிருந்த ஆண்கள் எல்லாரையும் கொன்றுபோட்டார்கள்.) 17  ஆனால், சின்னப் பையனாக இருந்த ஆதாத் தன்னுடைய அப்பாவின் ஊழியர்களான ஏதோமியர்கள் சிலரோடு அங்கிருந்து தப்பித்து எகிப்துக்குப் போய்விட்டான். 18  அவர்கள் மீதியான்* என்ற இடத்திலிருந்து பாரானுக்குப்+ போனார்கள். பாரானிலிருந்து சில ஆட்களைக் கூட்டிக்கொண்டு எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போனார்கள். பார்வோன் அவர்களுக்கு உணவும் வீடும் நிலமும் கொடுத்தான். 19  பார்வோனுக்கு ஆதாத்தை ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால், தன்னுடைய மனைவியும் ராணியுமாகிய தாப்பெனேசின் சகோதரியை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தான். 20  பின்பு, தாப்பெனேசின் சகோதரி அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவன் பெயர் கேனுபாத்; அவனை பார்வோனின் அரண்மனையில் தாப்பெனேஸ் வளர்த்தாள்,* பார்வோனின் மகன்களோடு அவனும் அரண்மனையில் இருந்தான். 21  தாவீது இறந்துவிட்டார்,*+ அவருடைய படைத் தளபதி யோவாபும் இறந்துவிட்டார்+ என்ற செய்தியை எகிப்திலிருந்த ஆதாத் கேள்விப்பட்டான். அதனால் அவன் பார்வோனிடம், “நான் என் சொந்த தேசத்துக்குப் போக வேண்டும், எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டான். 22  ஆனால் பார்வோன், “ஏன் உன் தேசத்துக்குப் போக நினைக்கிறாய்? இங்கே உனக்கு என்ன குறை?” என்று கேட்டான். அதற்கு அவன், “ஒரு குறையும் இல்லை, ஆனாலும் தயவுசெய்து எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று சொன்னான். 23  எலியாதாவின் மகனான ரேசோன் என்பவனையும் சாலொமோனுடைய எதிரியாகக் கடவுள் ஆக்கினார்;+ சோபாவின் ராஜாவும் தன் எஜமானுமாகிய ஆதாதேசரிடமிருந்து+ இவன் தப்பித்து ஓடியிருந்தான். 24  சோபா தேசத்துப் படைவீரர்களை தாவீது தோற்கடித்தபோது,*+ ரேசோன் தன்னோடு ஆட்களைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொள்ளைக்கூட்டத்துக்குத் தலைவன் ஆனான். அவர்கள் தமஸ்குவுக்குப்+ போய்க் குடியேறினார்கள், அவன் அங்கே ஆட்சி செய்ய ஆரம்பித்தான். 25  சாலொமோனின் காலமெல்லாம் அவன் அவரை எதிர்த்துவந்தான், ஆதாத்தைப் போலவே ரேசோனும் அவருக்குத் தொந்தரவு கொடுத்துவந்தான். அவன் சீரியாவை ஆட்சி செய்தான், இஸ்ரவேலர்களைப் பயங்கரமாக வெறுத்தான். 26  அதோடு, நேபாத்தின் மகன் யெரொபெயாமும்+ ராஜாவை எதிர்த்துக் கலகம் செய்துவந்தார்.+ இவர் எப்பிராயீமிலுள்ள சேரேதாவைச் சேர்ந்தவர், சாலொமோனின் ஊழியர்;+ இவருடைய அம்மா பெயர் செரூகாள், இவள் ஒரு விதவை. 27  யெரொபெயாம் கலகம் செய்ததற்குக் காரணம் இதுதான்: சாலொமோன் மில்லோவை* கட்டியிருந்தார்,+ தன்னுடைய அப்பாவான ‘தாவீதின் நகரத்தை’+ சுற்றி மதிலைக் கட்டி முடித்தார். 28  இளைஞரான யெரொபெயாம் திறமைசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பது சாலொமோனுக்குத் தெரியவந்ததும், யோசேப்பின் வம்சத்தாரில் கட்டாய வேலை செய்கிறவர்களுக்கு அவரை அதிகாரியாக நியமித்தார்.+ 29  அப்போது ஒருநாள், யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போய்க்கொண்டிருந்தார், சீலோனியரான அகியா தீர்க்கதரிசி+ அவரை வழியில் சந்தித்தார். அகியா ஒரு புது அங்கியைப் போட்டிருந்தார். ஊருக்கு வெளியே அவர்கள் இரண்டு பேர் மட்டும்தான் இருந்தார்கள். 30  அப்போது, அகியா தான் போட்டிருந்த புது அங்கியை 12 துண்டுகளாகக் கிழித்தார். 31  பின்பு அவர் யெரொபெயாமிடம், “நீ 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நான் சாலொமோனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி 10 கோத்திரத்தை உனக்குத் தருவேன்.+ 32  ஆனால், என்னுடைய பெயரை நிலைநாட்டுவதற்காக என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும்+ இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்துக்காகவும்+ ஒரு கோத்திரத்தை மட்டும் அவனிடம் விட்டு வைப்பேன்.+ 33  என்னுடைய மக்கள் என்னை விட்டுவிட்டு+ சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும் மோவாபியர்களின் தெய்வமாகிய கேமோஷையும் அம்மோனியர்களின் தெய்வமாகிய மில்கோமையும் வணங்குகிறார்கள். அவர்கள் என் வழிகளில் நடக்கவில்லை, எனக்குப் பிடித்த காரியங்களைச் செய்யவில்லை. சாலொமோனுடைய அப்பா தாவீதைப் போல் என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் பின்பற்றவில்லை. அதனால்தான் இப்படிச் செய்யப்போகிறேன். 34  ஆனால், ஆட்சியை முழுமையாக அவனிடமிருந்து பிடுங்கிவிட மாட்டேன். அவனுடைய வாழ்நாள் முழுக்க அவனைத் தலைவனாக வைத்திருப்பேன்; ஏனென்றால், நான் தேர்ந்தெடுத்த என்னுடைய ஊழியன் தாவீது+ என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படிந்து நடந்ததால், தாவீதுக்காக அப்படிச் செய்வேன். 35  ஆட்சியை அவனுடைய மகன் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுப்பேன்; அதாவது, பத்துக் கோத்திரங்களை உனக்குக் கொடுப்பேன்.+ 36  என்னுடைய பெயரை நிலைநாட்டுவதற்காக நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்தில் என் முன்னால் தாவீதுடைய விளக்கு அணையாமல்* காக்கப்பட வேண்டும்+ என்பதற்காக அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைத் தருவேன். 37  நான் உன்னை ராஜாவாக நியமிப்பேன், நீ விரும்புகிற எல்லாவற்றின் மீதும் ஆட்சி செய்வாய், இஸ்ரவேல் தேசத்துக்கு ராஜாவாக ஆவாய். 38  என்னுடைய ஊழியன் தாவீதைப் போல்+ நான் கட்டளையிட்ட எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிந்து என் வழிகளில் நடந்தால், என்னுடைய சட்டதிட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து எனக்குப் பிடித்ததைச் செய்தால், நான் உனக்கும் துணையாக இருப்பேன்; தாவீதின் வம்சத்தைப் போலவே உன் வம்சமும் என்றென்றும் ராஜ வம்சமாக இருக்கும்.+ இஸ்ரவேல் தேசத்துக்கு உன்னை ராஜாவாக நியமிப்பேன். 39  இப்படிச் செய்து தாவீதின் சந்ததியை நான் அவமானப்படுத்துவேன்;+ ஆனால், என்றென்றும் அப்படிச் செய்ய மாட்டேன்’”+ என்று சொன்னார். 40  அதனால், யெரொபெயாமைக் கொலை செய்ய சாலொமோன் முயற்சி செய்தார். ஆனால், யெரொபெயாம் எகிப்துக்குத் தப்பித்துப் போய் எகிப்தின் ராஜாவாகிய+ சீஷாக்கிடம்+ தங்கியிருந்தார். சாலொமோன் சாகும்வரை அவர் அங்கேயே இருந்தார். 41  சாலொமோனின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும், அவருடைய ஞானத்தைப் பற்றியும் சாலொமோனின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 42  எருசலேமிலிருந்து இஸ்ரவேல் முழுவதையும் 40 வருஷங்கள் சாலொமோன் ஆட்சி செய்தார். 43  சாலொமோன் இறந்ததும்* அவருடைய அப்பாவான ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார்; அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ரெகொபெயாம்+ ராஜாவானார்.

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, தெய்வச் சிலைகளையும் குறிக்கலாம்.
வே.வா., “அவர்களைக் கல்யாணம் செய்யக் கூடாது.”
வே.வா., “மனைவிகள் அவர்மீது அதிக செல்வாக்கு செலுத்தினார்கள்.”
அநேகமாக, ஏதோமுக்குள் இருக்கிற அல்லது ஏதோமுக்குப் பக்கத்தில் இருக்கிற ஓர் இடமாக இருக்கலாம்.
அல்லது, “பால்குடி மறக்க வைத்தாள்.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டார்.”
நே.மொ., “கொன்றுபோட்டபோது.”
அர்த்தம், “மண்மேடு.” இது ஒரு கோட்டையாக இருந்திருக்கலாம்.
அதாவது, “வம்சம் அழியாமல்.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா