1 ராஜாக்கள் 15:1-34

15  நேபாத்தின் மகனான யெரொபெயாம் ராஜா+ ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில், அபியாம் யூதாவின் ராஜாவானார்.+  அவர் மூன்று வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்; அவருடைய அம்மா பெயர் மாக்காள்,+ அவள் அபிசலோமின்* பேத்தி.  தன் அப்பா செய்த பாவங்களையெல்லாம் அபியாமும் செய்துவந்தார். அவருடைய மூதாதையான தாவீதைப் போல், யெகோவா தேவனுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொள்ளவில்லை.  இருந்தாலும் தாவீதுக்காக,+ அவருடைய கடவுளாகிய யெகோவா அபியாமுக்கு ஒரு விளக்கை* கொடுத்தார்,+ அபியாமின் மகனை எருசலேமில் ராஜாவாக ஏற்படுத்தினார். எருசலேம் தொடர்ந்து நிலைத்திருக்க அனுமதித்தார்.  ஏனென்றால், யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களையே தாவீது செய்திருந்தார். அவருடைய வாழ்நாள் முழுவதும் கடவுளுடைய கட்டளைகள் எதையுமே மீறவில்லை; ஏத்தியனான உரியா விஷயத்தில் மட்டும்தான் தவறு செய்திருந்தார்.+  காலம் முழுக்க ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் போர் நடந்துகொண்டே இருந்தது.+  அபியாமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும்கூட போர் நடந்தது.+  அபியாம் இறந்த* பின்பு, ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆசா+ ராஜாவானார்.+  யெரொபெயாம் ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த 20-ஆம் வருஷத்தில், ஆசா யூதாவின் ராஜாவானார். 10  அவர் எருசலேமில் 41 வருஷங்கள் ஆட்சி செய்தார்; அவருடைய பாட்டியின் பெயர் மாக்காள்,+ இவள் அபிசலோமின் பேத்தி. 11  ஆசா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே, யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களைச் செய்தார்.+ 12  கோயில்களில் இருந்த ஆண் விபச்சாரக்காரர்களைத் தேசத்தைவிட்டே துரத்தினார்.+ தன்னுடைய முன்னோர்கள் செய்து வைத்திருந்த அருவருப்பான* சிலைகளையெல்லாம்+ உடைத்துப்போட்டார். 13  பூஜைக் கம்பத்தின்* வழிபாட்டுக்காக அவருடைய பாட்டி மாக்காள்+ அருவருப்பான சிலையைச் செய்து வைத்திருந்ததால், ராஜமாதா* அந்தஸ்தை அவளிடமிருந்து பறித்துவிட்டார்; அருவருப்பான அந்தச் சிலையைத் தகர்த்துப்போட்டு,+ கீதரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்தார்.+ 14  ஆனால், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை.+ இருந்தாலும், ஆசா தன்னுடைய வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார். 15  தானும் தன்னுடைய அப்பாவும் யெகோவாவுக்கு அர்ப்பணித்திருந்த தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற சாமான்களையும்+ கொண்டுவந்து ஆலயத்தில் வைத்தார். 16  ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவான பாஷாவுக்கும்+ தொடர்ந்து போர் நடந்துவந்தது. 17  அதனால், இஸ்ரவேலின் ராஜாவான பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்தார்; யூதாவின் ராஜாவான ஆசாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்குள் மக்கள் போய் வருவதைத் தடுப்பதற்காக ராமா+ நகரத்தைக் கட்ட* ஆரம்பித்தார்.+ 18  உடனே ஆசா, யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் மீதியிருந்த எல்லா வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து தன்னுடைய ஊழியர்களிடம் கொடுத்தார். அவற்றை தமஸ்குவில் குடியிருந்த சீரியா ராஜாவிடம்,+ அதாவது எசியோனின் பேரனும் தப்ரிமோனின் மகனுமான பெனாதாத்திடம், கொடுக்கச் சொன்னார். 19  அப்படிக் கொடுத்து அனுப்பும்போது, “என் அப்பாவும் உங்கள் அப்பாவும் செய்ததுபோல், நானும் நீங்களும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதனால், நான் அனுப்பியிருக்கிற தங்கத்தையும் வெள்ளியையும் அன்பளிப்பாக ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவான பாஷாவோடு நீங்கள் செய்திருக்கிற ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்படிச் செய்தால் அவர் எங்களைவிட்டுப் பின்வாங்கிப் போய்விடுவார்” என்று சொல்லச் சொன்னார். 20  ஆசா ராஜா சொன்னதை பெனாதாத் ஏற்றுக்கொண்டான். அதனால், இஸ்ரவேல் நகரங்களைத் தாக்குவதற்காகத் தன்னுடைய படைத் தலைவர்களை அனுப்பினான். அவர்கள் ஈயோனையும்+ தாணையும்+ ஆபேல்-பெத்-மாக்காவையும் கின்னரேத் முழுவதையும் நப்தலி பகுதி முழுவதையும் நாசமாக்கினார்கள். 21  பாஷா அதைக் கேள்விப்பட்டதும், ராமா நகரத்தைக் கட்டுவதை* உடனடியாக நிறுத்திவிட்டு, திர்சாவுக்குப்+ போய் அங்கேயே குடியிருந்தார். 22  பின்பு ஆசா ராஜா, யூதாவிலிருந்த அத்தனை பேரையும், ஒருவர் விடாமல் எல்லாரையும், வரச் சொல்லிக் கட்டளையிட்டார். ராமா நகரத்தைக் கட்டுவதற்கு பாஷா பயன்படுத்திய கற்களையும் மரங்களையும் அவர்கள் அங்கிருந்து கொண்டுவந்தார்கள். அவற்றை வைத்து பென்யமீன் பகுதியில் கெபாவையும்+ மிஸ்பாவையும்+ ஆசா கட்டினார்.* 23  ஆசாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவருடைய வீரதீர செயல்கள், அவர் கட்டிய* நகரங்கள் ஆகிய எல்லாவற்றையும் பற்றி யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வயதான காலத்தில், பாதங்களில் வந்த நோயால் ஆசா அவதிப்பட்டார்.+ 24  அவர் இறந்த* பின்பு, அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது அவருடைய மூதாதையான ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார். அடுத்து, அவருடைய மகன் யோசபாத்+ ராஜாவானார். 25  ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில் யெரொபெயாமின் மகன் நாதாப்+ இஸ்ரவேலின் ராஜாவானார்; அவர் இரண்டு வருஷங்கள் ஆட்சி செய்தார். 26  யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். தன்னுடைய அப்பாவைப் போலவே கெட்ட வழியில் நடந்தார்,+ அவரைப் போலவே இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டினார்.+ 27  இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்த அகியாவின் மகனான பாஷா இவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினார். நாதாபும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் பெலிஸ்தியர்களுக்குச் சொந்தமான கிபெத்தோனைச்+ சுற்றிவளைத்தபோது, அங்கே பாஷா அவரைக் கொன்றுபோட்டார். 28  இப்படி, யூதாவை ஆட்சி செய்த ஆசா ராஜாவின் மூன்றாம் வருஷத்தில் நாதாபைக் கொன்றுவிட்டு அவருக்குப் பதிலாக பாஷா ராஜாவானார். 29  அவர் ராஜாவாக ஆனவுடன், யெரொபெயாமின் வீட்டார் எல்லாரையும் கொன்றுபோட்டார். யெரொபெயாமின் வீட்டாரில் ஒருவரைக்கூட உயிரோடு விட்டுவைக்கவில்லை. சீலோவைச் சேர்ந்த அகியா என்ற தன்னுடைய ஊழியர் மூலம் யெகோவா சொன்ன வார்த்தையின்படியே, பாஷா அவர்களை அடியோடு அழித்துப்போட்டார்.+ 30  ஏனென்றால், யெரொபெயாம் தான் பாவம் செய்தது மட்டுமல்லாமல், இஸ்ரவேலர்களையும் பாவம் செய்யத் தூண்டியிருந்தார்; இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மிகவும் புண்படுத்தியிருந்தார். 31  நாதாபின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 32  ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவான பாஷாவுக்கும் தொடர்ந்து போர் நடந்துவந்தது.+ 33  ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், அகியாவின் மகனான பாஷா இஸ்ரவேல் முழுவதுக்கும் ராஜாவானார். அவர் திர்சாவிலிருந்து 24 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ 34  ஆனால், யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார்.+ யெரொபெயாமைப் போலவே மோசமான வழியில் நடந்தார், அவரைப் போலவே இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டினார்.+

அடிக்குறிப்புகள்

அப்சலோமின் இன்னொரு பெயராக இருக்கலாம்.
அதாவது, “வாரிசை.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
வே.வா., “ராணி.”
வே.வா., “வலுப்படுத்த; திரும்பக் கட்ட.”
வே.வா., “வலுப்படுத்துவதை; திரும்பக் கட்டுவதை.”
வே.வா., “வலுப்படுத்தினார்; திரும்பக் கட்டினார்.”
வே.வா., “வலுப்படுத்திய; திரும்பக் கட்டிய.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா