1 ராஜாக்கள் 4:1-34

4  இஸ்ரவேல் தேசம் முழுவதையும் சாலொமோன் ஆட்சி செய்தார்.+  அவரோடு இருந்த உயர் அதிகாரிகள்: சாதோக்கின்+ மகன் அசரியா குருவாக இருந்தார்.  ஷீசாவின் மகன்களான எலிகோரேப்பும் அகியாவும் செயலாளர்களாக இருந்தார்கள்.+ அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார்.  யோய்தாவின் மகன் பெனாயா+ படைத் தளபதியாக இருந்தார். சாதோக்கும் அபியத்தாரும்+ குருமார்களாகச் சேவை செய்தார்கள்.  நாத்தானின்+ மகன் அசரியா நிர்வாகிகளுக்குத் தலைவராக இருந்தார். நாத்தானின் மகன் சாபூத் குருவாகவும் ராஜாவின் ஆலோசகராகவும் இருந்தார்.+  அகீஷார் அரண்மனை அதிகாரியாக இருந்தார். அடிமை வேலை வாங்கப்பட்ட ஆட்களுக்கு+ அப்தாவின் மகன் அதோனீராம் அதிகாரியாக இருந்தார்.+  இஸ்ரவேல் முழுவதையும் கவனித்துக்கொள்ள 12 நிர்வாகிகளை சாலொமோன் நியமித்திருந்தார். ராஜாவுக்கும் அவருடைய அரண்மனையில் இருந்தவர்களுக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வருஷத்தில் ஒவ்வொரு மாதம் உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.+  அந்த நிர்வாகிகளைப் பற்றிய தகவல்: எப்பிராயீம் மலைப்பகுதியை ஹூரின் மகன் நிர்வகித்தார்;  மாக்காத்ஸ், சால்பீம்,+ பெத்-ஷிமேஸ், ஏலோன்-பெத்-தானான் ஆகிய இடங்களை தேக்கேரின் மகன் நிர்வகித்தார்; 10  அருபோத்தை ஏசேத்தின் மகன் நிர்வகித்தார் (சோக்கோவும் ஹேப்பேர் பகுதி முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது); 11  தோர் மலைச் சரிவுகள் முழுவதையும் அபினதாபின் மகன் நிர்வகித்து வந்தார் (இவர் சாலொமோனின் மகள் தாபாத்தைக் கல்யாணம் செய்தார்); 12  தானாக், மெகிதோ,+ யெஸ்ரயேலுக்குக் கீழும் சார்தானுக்குப் பக்கத்திலும் இருக்கிற பெத்-செயான் பகுதி முழுவதும்,+ பெத்-செயானிலிருந்து ஆபேல்-மெகொல்லா வரையிலும், யோக்மேயாம்+ வரையிலும் இருந்த பகுதிகள் எல்லாம் அகிலூத்தின் மகன் பானாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. 13  ராமோத்-கீலேயாத்தை+ கேபேரின் மகன் நிர்வகித்தார் (மனாசேயின் வம்சத்தில் வந்த யாவீரின்+ சிற்றூர்கள் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன. அவை கீலேயாத்தில்+ இருந்தன; பாசானிலுள்ள+ அர்கோப்+ பிரதேசமும் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தப் பகுதியில் மதில்களும் செம்புத் தாழ்ப்பாள்களும் கொண்ட 60 பெரிய நகரங்கள் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன); 14  இத்தோவின் மகன் அகினதாப் மக்னாயீமை+ நிர்வகித்தார். 15  நப்தலி பகுதியை அகிமாஸ் நிர்வகித்தார் (இவர் சாலொமோனின் மற்றொரு மகளான பஸ்மாத்தைக் கல்யாணம் செய்தார்); 16  ஆசேர், பெயாலோத் ஆகிய பகுதிகளை ஊசாயின் மகன் பானா நிர்வகித்தார்; 17  இசக்கார் பகுதியை பருவாவின் மகன் யோசபாத் நிர்வகித்தார்; 18  பென்யமீன்+ பகுதியை ஏளாவின் மகன் சீமேயி+ நிர்வகித்தார்; 19  எமோரியர்களின் ராஜாவான சீகோனும்+ பாசானின் ராஜாவான ஓகும்+ முன்பு ஆட்சி செய்த கீலேயாத் பிரதேசத்தை+ ஊரியின் மகன் கேபேர் நிர்வகித்தார். தேசத்திலிருந்த இந்த எல்லா நிர்வாகிகளுக்கும் ஒரு தலைவர் இருந்தார். 20  யூதாவிலும் இஸ்ரவேலிலும் கடற்கரை மணலைப் போல ஏராளமான மக்கள் இருந்தார்கள்.+ அவர்கள் சாப்பிட்டுக் குடித்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.+ 21  ஆறு* தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசம் வரையிலும் எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த எல்லா தேசங்களையும் சாலொமோன் ஆட்சி செய்தார்.+ சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அந்தத் தேசங்களைச் சேர்ந்த மக்கள் அவருக்குக் கப்பம் கட்டி சேவை செய்தார்கள்.+ 22  சாலொமோனின் அரண்மனையில் தினமும் 30 கோர் அளவு* நைசான மாவும், 60 கோர் அளவு சாதாரண மாவும், 23  கொழுத்த 10 மாடுகளும் மேய்ச்சல் நிலத்திலிருந்து வந்த 20 மாடுகளும், 100 செம்மறியாடுகளும் பலவகை மான்களும்* கொழுத்த குயில்களும் சாப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டன. 24  ஆற்றுக்கு* மேற்கில் இருந்த பகுதிகள் எல்லாம், அதாவது திப்சாவிலிருந்து காசாவரை,+ சாலொமோனின் கட்டுப்பாட்டில் இருந்தது.+ அங்கே இருந்த எல்லா ராஜாக்களும் அவருக்கு அடிபணிந்து நடந்தார்கள். அவருடைய தேசம் முழுவதும் சமாதானமாக இருந்தது. சுற்றியிருந்த எல்லா தேசங்களும் அவரோடு சமாதானமாக இருந்தன.+ 25  சாலொமோனின் காலமெல்லாம், தாண்முதல் பெயெர்-செபாவரை இருந்த யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் அவரவருடைய திராட்சைக் கொடியின் நிழலிலும் அவரவருடைய அத்தி மரத்தின் நிழலிலும் பாதுகாப்பாகக் குடியிருந்தார்கள். 26  ரதக் குதிரைகளை நிறுத்துவதற்காக 4,000* லாயங்களும் 12,000 குதிரைகளும்* சாலொமோனிடம் இருந்தன.+ 27  சாலொமோன் ராஜாவுக்கும் அவருடைய மேஜையில் சாப்பிட்ட எல்லாருக்கும் தேவையான உணவுப் பொருள்களை நிர்வாகிகள் கொண்டுவந்தார்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிர்வாகிக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது, அதில் ஒரு குறையும் வராமல் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்.+ 28  ரதக் குதிரைகள் உட்பட எல்லா குதிரைகளுக்கும் தேவையான பார்லியையும் வைக்கோலையும்கூட அவர்கள் கொண்டுவந்து கொடுத்தார்கள். தாங்கள் கொடுக்க வேண்டிய அளவின்படி, எந்த இடத்தில் அவை தேவைப்பட்டாலும் அவற்றைக் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். 29  சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+ 30  கிழக்கத்திய மக்களையும் எகிப்தியர்களையும்விட சாலொமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினார்.+ 31  ஞானத்தில் அவருக்குச் சமமாக யாருமே இருக்கவில்லை. எஸ்ராகியனான ஏத்தான்,+ மாகோலின் மகன்களான ஏமான்,+ கல்கோல்,+ தர்தா ஆகியோரைவிட அவர் ஞானமுள்ளவராக இருந்தார். சுற்றியிருந்த எல்லா தேசங்களுக்கும் அவருடைய பேரும் புகழும் பரவியது.+ 32  அவர் சொன்ன நீதிமொழிகளின்+ எண்ணிக்கை 3,000. அவருடைய பாடல்களின்+ எண்ணிக்கை 1,005. 33  அவர் மரங்களைப் பற்றிப் பேசினார். அதாவது, லீபனோனில் இருக்கும் தேவதாரு மரத்திலிருந்து சுவரில் வளரும் மருவுச்செடிவரை+ எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். மிருகங்கள்,+ பறவைகள்,*+ ஊரும் பிராணிகள்,*+ மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் பேசினார். 34  சாலொமோனின் ஞானமான வார்த்தைகளைக் கேட்பதற்காக எல்லா தேசங்களிலும் இருந்து மக்கள் வந்தார்கள். அதோடு, உலகெங்கிலும் இருந்து ராஜாக்களும் அவருடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “யூப்ரடிஸ் ஆறு.”
ஒரு கோர் என்பது 220 லிட்டருக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “சிவப்பு மான்களும் கலைமான்களும் ரோ மான்களும்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு.”
சில கையெழுத்துப் பிரதிகளிலும் இணை வசனங்களிலும் இந்த எண்ணிக்கைதான் காணப்படுகிறது. மற்ற கையெழுத்துப் பிரதிகளில் 40,000 என உள்ளது.
வே.வா., “குதிரைவீரர்களும்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் இதயத்தை.”
வே.வா., “பறக்கும் உயிரினங்கள்.”
பூச்சி இனங்களும் இதில் உட்பட்டிருக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா