கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 11:1-33
11 ஓரளவு புத்தியில்லாமல் பேசுகிற என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டால் நல்லது. சொல்லப்போனால், நீங்கள் என்னைப் பொறுத்துக்கொண்டுதான் வருகிறீர்கள்!
2 கடவுளைப் போலவே எனக்கும் உங்கள்மேல் உள்ளப்பூர்வமான அக்கறை இருக்கிறது. ஏனென்றால், கிறிஸ்து என்ற ஒரே மணமகனுக்கு நான் உங்களை நிச்சயம் செய்துகொடுத்தேன். அதனால் உங்களைக் கற்புள்ள* கன்னிப்பெண்ணாக அவர் முன்னால் நிறுத்த விரும்புகிறேன்.+
3 ஆனாலும், பாம்பின் தந்திரத்தால் ஏவாள் மோசம்போக்கப்பட்டதைப் போல+ உங்கள் மனமும் ஏதோவொரு விதத்தில் கெடுக்கப்பட்டு கிறிஸ்துவுக்குக் காட்ட வேண்டிய உண்மைத்தன்மையிலிருந்தும் தூய்மையிலிருந்தும் விலக்கப்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன்.+
4 ஒருவன் உங்களிடம் வந்து நாங்கள் பிரசங்கித்த இயேசுவைத் தவிர வேறொரு இயேசுவைப் பற்றிப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட சிந்தையை* தவிர வேறொரு சிந்தையைப் பெற வைத்தால், அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியைச் சொன்னால்,+ அவனை எளிதில் பொறுத்துக்கொள்கிறீர்கள்.
5 உங்கள் “அருமை” அப்போஸ்தலர்களைவிட நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல என்று நினைக்கிறேன்.+
6 எனக்குப் பேச்சுத்திறன் இல்லாமல் இருக்கலாம்,+ ஆனால் நிச்சயமாகவே அறிவுத்திறன் இல்லாமல் இல்லை. இதை எல்லா விதத்திலும் எல்லா காரியங்களிலும் உங்களுக்குத் தெளிவுபடுத்தினோம்.
7 நீங்கள் உயர்த்தப்படுவதற்காக என்னையே நான் தாழ்த்தி, உங்களுக்கு எந்தச் செலவும் வைக்காமல் கடவுளுடைய நல்ல செய்தியைச் சந்தோஷமாக அறிவித்தேன்.+ இதுதான் நான் செய்த பாவமா?
8 உங்களுக்குச் சேவை செய்வதற்காக மற்ற சபைகளிடமிருந்து தேவையானவற்றை* பெற்றேன்;+ இப்படி உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டதாகவே சொல்வேன்.
9 ஆனாலும், நான் உங்களோடிருந்த சமயத்தில் எனக்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ஒருவருக்கும் நான் பாரமாக இருக்கவில்லை. மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் எனக்குத் தேவையானவற்றை வாரி வழங்கினார்கள்.+ எந்த விதத்திலும் நான் உங்களுக்குப் பாரமாக இல்லாதபடி பார்த்துக்கொண்டேன், இனியும் பார்த்துக்கொள்வேன்.+
10 கிறிஸ்துவின் சத்தியம் எனக்குள் இருக்கும்வரை நான் இப்படிப் பெருமை பேசுவதை அகாயாவில் இருக்கிற யாரும் தடுக்க முடியாது.+
11 நான் ஏன் உங்களுக்குப் பாரமாக இல்லாதபடி பார்த்துக்கொண்டேன்? உங்கள்மேல் அன்பு இல்லாததாலா? உங்கள்மேல் எனக்கு அன்பு இருக்கிறது என்று கடவுளுக்குத் தெரியும்.
12 தாங்களும் அப்போஸ்தலர்கள் என்று பெருமையடித்துக்கொள்கிற சிலர், தங்கள் பணியை எங்களுடைய பணிபோல் காட்டிக்கொள்ள வழிதேடுகிறார்கள். அதற்கு இடம்கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக இப்போது செய்துவருவதையே இனிமேலும் செய்துவருவேன்.+
13 அப்படிப்பட்ட ஆட்கள் போலி அப்போஸ்தலர்கள், ஏமாற்றுகிற வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களைப் போல் வேஷம் போடுகிறவர்கள்.+
14 இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், சாத்தானும்கூட ஒளியின் தூதனைப் போல் வேஷம் போடுகிறான்.+
15 அதனால், அவனுடைய ஊழியர்களும் நீதியின் ஊழியர்களைப் போல் வேஷம் போடுவது பெரிய விஷயம் அல்ல. அவர்களுடைய முடிவு அவர்களுடைய செயல்களுக்கு ஏற்றபடிதான் இருக்கும்.+
16 மறுபடியும் நான் சொல்கிறேன்: யாரும் என்னைப் புத்தியில்லாதவன் என்று நினைக்க வேண்டாம்; அப்படியே நீங்கள் நினைத்தாலும், புத்தியில்லாதவனைப் போலாவது என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது, அவர்களைப் போலவே நானும் கொஞ்சம் பெருமை பேசிக்கொள்ளலாம்.
17 நம் எஜமானுடைய முன்மாதிரியைப் பின்பற்றி நான் இப்படிப் பேசவில்லை, பெருமை பேசும் ஆட்களுக்கே உரிய அளவுக்குமீறிய தன்னம்பிக்கையால்தான் புத்தியில்லாதவனைப் போல் பேசுகிறேன்.
18 இந்த உலகத்தில் இருக்கிற விஷயங்களைப் பற்றி நிறைய பேர் பெருமை பேசுகிறார்கள், நானும் பெருமை பேசுவேன்.
19 நீங்கள் “அதிபுத்திசாலிகளாக” இருப்பதால் புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகப் பொறுத்துக்கொள்கிறீர்கள்.
20 சொல்லப்போனால், உங்களை அடிமைப்படுத்துகிற எவனையும், உங்களை விழுங்கப்பார்க்கிற எவனையும், உங்களுடைய சொத்துகளைப் பிடுங்கிக்கொள்கிற எவனையும், உங்களுக்கு மேலாகத் தன்னை உயர்த்திக்கொள்கிற எவனையும், உங்கள் கன்னத்தில் அறைகிற எவனையும் நீங்கள் பொறுத்துக்கொள்கிறீர்கள்.
21 நாங்கள் எங்களுடைய அதிகாரத்தைச் சரிவரப் பயன்படுத்துவதில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இதைச் சொல்வதற்கே வெட்கக்கேடாக இருக்கிறது.
மற்றவர்கள் துணிந்து பெருமை பேசுகிறார்கள் என்றால், நானும் துணிந்து பெருமை பேசுவேன்—புத்தியில்லாதவன்போல் பேசுகிறேன்.
22 அவர்கள் எபிரெயர்களா? நானும் ஒரு எபிரெயன்.+ அவர்கள் இஸ்ரவேலர்களா? நானும் ஒரு இஸ்ரவேலன். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்களா? நானும் ஆபிரகாமின் சந்ததியில் வந்தவன்.+
23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியர்களா? பைத்தியக்காரனைப் போல் பதில் சொல்கிறேன், நான் அவர்களைவிட சிறந்த ஊழியன். ஆம், அவர்களைவிட அதிகமாக உழைத்தேன்,+ பல தடவை சிறையில் அடைக்கப்பட்டேன்,+ ஏராளமாக அடி வாங்கினேன், எத்தனையோ தடவை செத்துப்பிழைத்தேன்.+
24 யூதர்களிடம் ஐந்து தடவை 39* சாட்டையடிகளை வாங்கினேன்.+
25 மூன்று தடவை தடிகளால் அடிக்கப்பட்டேன்,+ ஒரு தடவை கல்லெறியப்பட்டேன்,+ மூன்று தடவை கப்பல் விபத்தில் மாட்டிக்கொண்டேன்,+ ஒரு இரவும் பகலும் நடுக்கடலில் தத்தளித்தேன்.
26 அடிக்கடி பயணம் செய்தேன். ஆறுகளால் வந்த ஆபத்துகளையும், திருடர்களால் வந்த ஆபத்துகளையும், என் சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களால் வந்த ஆபத்துகளையும்,+ மற்ற தேசத்து மக்களால் வந்த ஆபத்துகளையும்,+ நகரத்தில் வந்த ஆபத்துகளையும்,+ வனாந்தரத்தில் வந்த ஆபத்துகளையும், கடலில் வந்த ஆபத்துகளையும், போலிச் சகோதரர்களால் வந்த ஆபத்துகளையும் எதிர்ப்பட்டேன்.
27 அதோடு, கடினமாக உழைத்தேன், தூக்கமில்லாமல் பல இரவுகளைக் கழித்தேன்,+ பசியோடும் தாகத்தோடும் இருந்தேன்,+ பல தடவை பட்டினி கிடந்தேன்,+ குளிரில் நடுங்கினேன், உடையில்லாமல் இருந்தேன்.
28 இவை தவிர, எல்லா சபைகளையும் பற்றிய கவலை+ தினம் தினம் என்னை வாட்டி வதைக்கிறது.
29 ஒருவன் பலவீனமடைந்தால், நான் பலவீனமாக உணர்வதில்லையா? ஒருவனுடைய விசுவாசம் குலைக்கப்பட்டால், எனக்குக் கோபம் பற்றியெரிவதில்லையா?
30 நான் பெருமை பேச வேண்டியிருந்தால், என் பலவீனத்தைக் காட்டுகிற காரியங்களைப் பற்றித்தான் பெருமை பேசுவேன்.
31 நான் பொய் சொல்லவில்லை என்பது நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் தகப்பனாகவும் கடவுளாகவும், என்றென்றும் புகழப்பட வேண்டியவராகவும் இருக்கிறவருக்குத் தெரியும்.
32 நான் தமஸ்கு நகரத்தில் இருந்தபோது, அரேத்தா ராஜாவிடம் வேலை செய்த ஆளுநர் என்னைப் பிடிப்பதற்காக அந்த நகரத்துக்குக் காவல் போட்டிருந்தார்.
33 ஆனால், நான் ஒரு கூடையில் வைக்கப்பட்டு, நகரத்தின் மதிலில் இருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டேன்.+ இப்படி, அவருடைய கையிலிருந்து தப்பித்தேன்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “தூய்மையான.”
^ வே.வா., “கடவுளுடைய சக்தியை.”
^ வே.வா., “ஆதரவை.”
^ நே.மொ., “ஒன்று குறைய 40.”