2 சாமுவேல் 13:1-39

13  தாவீதின் மகன் அப்சலோமுக்கு ஓர் அழகிய தங்கை இருந்தாள். அவள் பெயர் தாமார்.+ தாவீதின் மகன் அம்னோன்+ அவள்மீது காதல்கொண்டான்.  தாமாரை நினைத்து எப்போதும் ஏங்கினான், அந்த ஏக்கத்தில் நோயாளியாய் ஆகிவிட்டான். அவள் கன்னிப்பெண்ணாக இருந்ததால் அவளை அவனால் நெருங்க முடியவில்லை.  அம்னோனுக்கு ஒரு நண்பன் இருந்தான்; அவன் பெயர் யோனதாப்,+ அவன் தாவீதின் அண்ணனாகிய சிமியாவின்+ மகன். அவன் மிகவும் சாமர்த்தியமானவன்.  அவன் அம்னோனிடம், “இளவரசனே, நீ ஏன் எப்போது பார்த்தாலும் சோகமாகவே இருக்கிறாய்? என்னிடம் சொல்லக் கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அம்னோன், “என் சகோதரன் அப்சலோமின் தங்கை தாமாரைக் காதலிக்கிறேன்”+ என்று சொன்னான்.  அதற்கு யோனதாப், “நீ படுக்கையில் படுத்துக்கொண்டு நோயாளி மாதிரி நடி. உன்னைப் பார்க்க உன் அப்பா வரும்போது, ‘தயவுசெய்து என் தங்கை தாமாரை இங்கே அனுப்பி வையுங்கள், அவள் எனக்குக் கொஞ்சம் உணவு தரட்டும். நோயாளிகளுக்குக் கொடுக்கிற உணவை அவள் எனக்குச் சமைத்துக் கொடுக்கட்டும், நான் அவள் கையால் சாப்பிட வேண்டும்’ என்று சொல்” என்றான்.  அதனால், அம்னோன் படுக்கையில் படுத்துக்கொண்டு நோயாளிபோல் நடித்தான். ராஜா அவனைப் பார்க்க வந்தபோது, “என் தங்கை தாமாரைக் கொஞ்சம் இங்கே அனுப்பி வையுங்கள். அவள் என் கண் முன்னால் இரண்டு ரொட்டி* சுட்டுத் தரட்டும். அவள் கையால் சாப்பிட ஆசைப்படுகிறேன்” என்று சொன்னான்.  உடனே தாவீது தாமாரின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, “உன் அண்ணன் அம்னோனின் வீட்டுக்குப் போய், கொஞ்சம் அவனுக்குச் சமைத்துக் கொடு” என்று சொல்லச் சொன்னார்.  அதனால், தாமார் தன்னுடைய அண்ணன் அம்னோனின் வீட்டுக்குப் போனாள்; அங்கே அவன் படுக்கையில் படுத்திருந்தான். அவள் மாவு பிசைந்து அவன் கண் முன்னாலேயே ரொட்டி சுட்டாள்.  பின்பு, அதை ஒரு பாத்திரத்தில் வைத்து அவனுக்குப் பரிமாறினாள். ஆனால் அவன் சாப்பிட மறுத்தான், “எல்லாரையும் இங்கிருந்து போகச் சொல்” என்று சொன்னான். அதனால், எல்லாரும் அங்கிருந்து வெளியே போனார்கள். 10  அப்போது அம்னோன் தாமாரிடம், “ரொட்டியைப் படுக்கையறைக்குக் கொண்டுவா, நான் உன் கையால் சாப்பிட ஆசைப்படுகிறேன்” என்று சொன்னான். அதனால், தாமார் தான் சுட்ட ரொட்டிகளை எடுத்துக்கொண்டு அம்னோனின் படுக்கையறைக்குப் போனாள். 11  ரொட்டிகளைப் பக்கத்தில் கொண்டுபோனபோது அவன் அவளைப் பிடித்திழுத்து, “என் தங்கையே வா, என்னோடு வந்து படு” என்று சொன்னான். 12  அதற்கு அவள், “வேண்டாம் அண்ணா! என்னைச் சீரழித்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட காரியத்தை இஸ்ரவேலில் யாரும் செய்ய மாட்டார்கள்.+ இந்தக் கேவலமான காரியத்தைச் செய்யாதீர்கள்.+ 13  காலம் முழுவதும் இந்த அவமானத்தோடு நான் எப்படி வாழ்வேன்? இஸ்ரவேலில் உள்ள கேவலமான ஆட்களில் ஒருவராக உங்களையும் நினைத்துவிடுவார்களே. தயவுசெய்து ராஜாவிடம் பேசுங்கள். அவர் கண்டிப்பாக என்னை உங்களுக்குக் கொடுப்பார்” என்று சொன்னாள். 14  ஆனால், அவன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பலவந்தமாகப் பிடித்து அவளைக் கெடுத்தான். 15  அதன் பின்பு, அவளை ரொம்பவே வெறுக்க ஆரம்பித்தான்; அவள்மீது எந்தளவுக்கு ஆசை வைத்திருந்தானோ அதைவிட அதிகமாக வெறுக்க ஆரம்பித்தான். அவளிடம், “எழுந்து, வெளியே போ” என்று சொன்னான். 16  அதைக் கேட்டதும், “வேண்டாம் அண்ணா, என்னைச் சீரழித்ததைவிட இப்படித் துரத்தியடிப்பது ரொம்பக் கொடுமை!” என்று சொன்னாள். ஆனால், அவள் சொன்னதை அவன் கேட்கவே இல்லை. 17  அவன் தன்னுடைய வேலைக்கார வாலிபனைக் கூப்பிட்டு, “தயவுசெய்து, இவளை வெளியே தள்ளி கதவைப் பூட்டு” என்று சொன்னான். 18  (அரச குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் அணியும் விசேஷ* அங்கியை அவள் அணிந்திருந்தாள்.) அதனால், அந்த வேலைக்காரன் அவளை வெளியே அனுப்பி கதவைப் பூட்டினான். 19  உடனே தாமார் தன் தலையில் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு,+ தான் அணிந்திருந்த அழகிய அங்கியைக் கிழித்துக்கொண்டாள்; தன்னுடைய தலையில் கையை வைத்துக்கொண்டு, அழுதுகொண்டே போனாள். 20  அவளுடைய அண்ணன் அப்சலோம்+ அவளைப் பார்த்து, “உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது அம்னோன்தானே? என் தங்கையே, அழாதே, அவன் உன்னுடைய அண்ணன்.+ அதனால் யாரிடமும் இதைப் பற்றி மூச்சுவிடாதே, இதையே நினைத்து நினைத்து அழுதுகொண்டிருக்காதே” என்று சொன்னான். பின்பு, தாமார் தன்னுடைய அண்ணனாகிய அப்சலோம் வீட்டில் தனிமையில் வாழ்ந்தாள். 21  இதையெல்லாம் கேள்விப்பட்டதும் தாவீது ராஜாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ ஆனாலும், அம்னோன் மனதை அவர் புண்படுத்த விரும்பவில்லை; அவன் அவருடைய மூத்த மகனாக இருந்ததால், அவனை நேசித்தார். 22  அப்சலோம் அம்னோனிடம் இதைப் பற்றி எதுவும் பேசவில்லை; இருந்தாலும், தன்னுடைய தங்கை தாமாரை அவன் கெடுத்ததால்+ அவனை வெறுத்தான்.+ 23  இரண்டு வருஷங்கள் உருண்டோடின; அப்போது, எப்பிராயீமுக்குப்+ பக்கத்தில் இருந்த பாகால்-ஆசோரில் அப்சலோம் தன்னுடைய ஆட்களை வைத்து ஆடுகளுக்கு மயிர் கத்தரித்தான்; அங்கே இளவரசர்கள் எல்லாரையும் விருந்துக்குக் கூப்பிட்டான்.+ 24  பின்பு ராஜாவை அப்சலோம் சந்தித்து, “என்னுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிறேன். தயவுசெய்து ராஜாவும் அவருடைய ஊழியர்களும் என்னுடன் வர வேண்டும்” என்று சொன்னான். 25  அதற்கு ராஜா அவனிடம், “வேண்டாம் மகனே, நாங்கள் எல்லாரும் வந்தால், உனக்கு ரொம்பச் சிரமமாக இருக்கும்” என்று சொன்னார். அவன் வற்புறுத்திக் கூப்பிட்டபோதும், அவர் அவனுடன் போவதற்குச் சம்மதிக்கவில்லை; ஆனால் அவனை ஆசீர்வதித்தார். 26  அப்போது அப்சலோம், “சரி, நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து என் அண்ணன் அம்னோனையாவது எங்களுடன் அனுப்பி வையுங்கள்”+ என்று சொன்னான். அதற்கு ராஜா, “அவனை ஏன் கூப்பிடுகிறாய்?” என்று கேட்டார். 27  ஆனாலும், அப்சலோம் வற்புறுத்திக் கேட்டதால், அம்னோனையும் இளவரசர்கள் எல்லாரையும் அவனுடன் அனுப்பிவைத்தார். 28  அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களிடம், “சமயம் பார்த்துக்கொண்டே இருங்கள்; அம்னோன் திராட்சமது குடித்து குஷியாக இருக்கும்போது, ‘அம்னோனை வெட்டுங்கள்!’ என்று சொல்வேன், அப்போது அவனைத் தீர்த்துக்கட்டிவிடுங்கள். எதற்கும் பயப்படாதீர்கள். நான்தானே உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்? அதனால், தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்” என்று சொன்னான். 29  அப்சலோமின் வேலைக்காரர்கள் அவன் கட்டளையிட்டபடியே அம்னோனைக் கொன்றுபோட்டார்கள்; அப்போது, மற்ற இளவரசர்கள் எல்லாரும் எழுந்து தங்களுடைய கோவேறு கழுதைகளில்* ஏறி தப்பித்துப் போனார்கள். 30  அவர்கள் போய்க்கொண்டிருந்தபோதே, “இளவரசர்கள் எல்லாரையும் அப்சலோம் கொன்றுவிட்டான், ஒருவர்கூட தப்பிக்கவில்லை” என்ற செய்தி ராஜாவுக்கு எட்டியது. 31  உடனே ராஜா எழுந்து தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு தரையில் படுத்தார்; அவருடைய ஊழியர்கள் எல்லாரும் தங்களுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு அவர் பக்கத்தில் நின்றார்கள். 32  அப்போது தாவீதின் அண்ணனாகிய சிமியாவின்+ மகன் யோனதாப்+ அவரிடம், “எஜமானே, இளவரசர்கள் எல்லாரும் கொல்லப்பட்டதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். அம்னோன் மட்டும்தான் கொல்லப்பட்டான்.+ அப்சலோமின் கட்டளைப்படிதான் இது நடந்தது. அவன் தங்கை தாமாரை அம்னோன் என்றைக்குக் கெடுத்தானோ+ அன்றைக்கே அவனைத் தீர்த்துக்கட்ட முடிவு பண்ணிவிட்டான்.+ 33  ராஜாவே, ‘இளவரசர்கள் எல்லாரும் செத்துவிட்டார்கள்’ என்ற செய்தியை நம்பாதீர்கள். அது வெறும் வதந்திதான்; அம்னோன் மட்டும்தான் செத்துப்போனான்” என்று சொன்னான். 34  இதற்கிடையே, அப்சலோம் ஓடிப்போனான்.+ பிற்பாடு, மலையோரமாக இருந்த சாலையில் நிறைய பேர் வந்துகொண்டிருப்பதைக் காவல்காரன் பார்த்தான். 35  ராஜாவிடம் யோனதாப்,+ “இதோ! பாருங்கள், நான் சொன்ன மாதிரியே இளவரசர்கள் வருகிறார்கள்” என்றான். 36  அவன் பேசி முடித்ததும், இளவரசர்கள் சத்தமாக அழுதுகொண்டே உள்ளே வந்தார்கள்; ராஜாவும் அவருடைய ஊழியர்கள் எல்லாரும்கூட பயங்கரமாகக் கதறி அழுதார்கள். 37  ஆனால் அப்சலோம் ஓடிப்போய், கேசூரின் ராஜாவும் அம்மியூத்தின் மகனுமாகிய தல்மாயிடம்+ தஞ்சம் புகுந்தான். தாவீது தன்னுடைய மகன் அம்னோனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார். 38  அப்சலோம் கேசூருக்குத்+ தப்பித்து ஓடி அங்கே மூன்று வருஷங்கள் தங்கியிருந்தான். 39  கடைசியில், அம்னோன் இறந்த துக்கத்திலிருந்து தாவீது ராஜா மீண்டார். அதனால், அப்சலோமைப் போய்ப் பார்க்க ஏங்கினார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “இதய வடிவிலான ரொட்டி.”
வே.வா., “அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த.”
பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்குகள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா