2 சாமுவேல் 16:1-23

16  தாவீது மலை உச்சியைக் கடந்து சற்றுத் தூரம் போனபோது,+ மேவிபோசேத்தின்+ வேலைக்காரனான சீபா+ அவரைச் சந்திக்க வந்தான். இரண்டு கழுதைகள்மீது 200 ரொட்டிகளையும் 100 உலர்ந்த திராட்சை அடைகளையும் 100 கோடைக் காலத்துப் பழ* அடைகளையும் ஒரு பெரிய ஜாடி நிறைய திராட்சமதுவையும் ஏற்றிக்கொண்டு வந்தான்.+  அப்போது சீபாவிடம், “இதையெல்லாம் எதற்காகக் கொண்டுவந்தாய்?” என்று ராஜா கேட்டார். அதற்கு சீபா, “ராஜாவின் குடும்பத்தார் பயணம் செய்வதற்காகக் கழுதைகளையும், அவருடைய ஆட்கள் சாப்பிடுவதற்காக ரொட்டிகளையும் அடைகளையும், வனாந்தரத்தில் நடந்து களைத்துப்போகிறவர்களுக்காகத் திராட்சமதுவையும் கொண்டுவந்தேன்”+ என்று சொன்னான்.  ராஜா அவனிடம், “சரி, உன் எஜமானுடைய பேரன் எங்கே?”+ என்று கேட்டார். அதற்கு சீபா, “அவர் எருசலேமில்தான் இருக்கிறார். ‘என் அப்பாவிடமிருந்து பறிபோன ஆட்சியை இஸ்ரவேலர்கள் இன்று எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள்’ என்று சொன்னார்”+ என்றான்.  உடனே ராஜா, “மேவிபோசேத்தின் சொத்துகளையெல்லாம் நீ எடுத்துக்கொள்” என்று சொன்னார்.+ அதற்கு சீபா, “ராஜாவே, என் எஜமானே, உங்கள் முன்னால் தலைவணங்குகிறேன். உங்கள் கருணை எனக்கு எப்போதும் வேண்டும்”+ என்று சொன்னான்.  பகூரிம் என்ற இடத்துக்கு தாவீது ராஜா வந்துசேர்ந்தபோது, சவுலின் வம்சத்தைச் சேர்ந்த கேராவின் மகன் சீமேயி+ அவரைச் சபித்துக்கொண்டே வந்தான்.+  தாவீதுமீதும் அவருடைய எல்லா ஊழியர்கள்மீதும் கற்களை எறிந்துகொண்டே இருந்தான். அதோடு, தாவீதின் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் இருந்த எல்லா ஆட்கள்மீதும் மாவீரர்கள்மீதும் கற்களை எறிந்துகொண்டே இருந்தான்.  சீமேயி அவரைப் பார்த்து, “கொலைகாரனே!* தொலைந்துபோ, கேடுகெட்டவனே! ஓடிப்போ.  சவுலின் குடும்பத்தை ஒழித்துக்கட்டிவிட்டுத்தானே நீ ராஜாவாக ஆனாய்? அந்தப் பழிபாவத்துக்குத்தான் யெகோவா இப்போது உன்னிடம் கணக்குக் கேட்கிறார். யெகோவா உன்னை நீக்கிவிட்டு உன் மகன் அப்சலோமை ராஜாவாக்கியிருக்கிறார். கொலைகாரனே, நீ செய்த பாவத்துக்குத்தான் இப்போது நன்றாக அனுபவிக்கிறாய்!”+ என்று சொல்லி சபித்தான்.  அப்போது செருயாவின்+ மகன் அபிசாய் தாவீது ராஜாவைப் பார்த்து, “எஜமானே, இந்தச் செத்த நாய்+ உங்களைச் சபிப்பதா?+ ராஜாவே, சொல்லுங்கள், அவன் தலையைச் சீவிவிடுகிறேன்!”+ என்று சொன்னார். 10  அதற்கு ராஜா, “செருயாவின் மகன்களே,+ நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? விடுங்கள், அவன் என்னைச் சபிக்கட்டும்.+ ‘தாவீதைச் சபி’ என்று யெகோவாவே அவனிடம் சொல்லியிருக்கிறார்.+ அப்படியிருக்கும்போது, ‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’ என்று யார் கேள்வி கேட்க முடியும்?” என்றார். 11  பின்பு தாவீது அபிசாயிடமும் அவருடைய எல்லா ஊழியர்களிடமும், “நான் பெற்ற மகனே என்னைக் கொன்றுபோடத் துடிக்கும்போது,+ இந்த பென்யமீன் கோத்திரத்தான்+ சும்மாவா இருப்பான்? யெகோவாதான் அவனைச் சபிக்கச் சொல்லியிருக்கிறார்; அவன் சபிக்கட்டும், விட்டுவிடுங்கள். 12  ஒருவேளை நான் படுகிற கஷ்டத்தை யெகோவா பார்ப்பார்.+ இன்று இவன் கொடுத்த சாபத்தை ஆசீர்வாதமாக யெகோவா மாற்றுவார்”+ என்று சொன்னார். 13  தாவீதும் அவருடைய ஆட்களும் மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது, சீமேயியும் அவரைச் சபித்துக்கொண்டே பக்கவாட்டில் நடந்துவந்தான்;+ அவர்மீது கற்களை எறிந்துகொண்டும் மண்ணை வாரி இறைத்துக்கொண்டும் வந்தான். 14  ராஜாவும் அவருடன் இருந்த எல்லாரும் நீண்ட நேரம் பயணம் செய்து ஓரிடத்துக்கு வந்துசேர்ந்தார்கள்; களைத்துப்போனதால் அங்கே ஓய்வெடுத்தார்கள். 15  இதற்கிடையே, அப்சலோமும் இஸ்ரவேலைச் சேர்ந்த அவனுடைய எல்லா ஆட்களும் எருசலேமுக்கு வந்துசேர்ந்தார்கள்; அகித்தோப்பேலும்+ அவர்களுடன் வந்தான். 16  தாவீதின் நண்பரான* அற்கியன்+ ஊசாயும்+ அங்கே வந்து, “ராஜா பல்லாண்டு வாழ்க!+ ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று அப்சலோமிடம் சொன்னார். 17  அதற்கு அவன், “இதுதான் உங்கள் நண்பருக்கு நீங்கள் காட்டுகிற விசுவாசமா?* நீங்கள் ஏன் உங்கள் நண்பருடன் போகவில்லை?” என்று கேட்டான். 18  அதற்கு ஊசாய், “யெகோவாவும் இங்கிருக்கிற மக்களும் இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களோ அவருக்குத்தான் நான் ஆதரவு கொடுப்பேன். அவர் கூடத்தான் இருப்பேன். 19  மறுபடியும் சொல்கிறேன், உங்கள் அப்பாவுக்கு எப்படிச் சேவை செய்தேனோ, அதேமாதிரி உங்களுக்கும் சேவை செய்வேன்.+ இப்போது நான் யாருக்குச் சேவை செய்கிறேன்? அவருடைய மகனுக்குத்தானே?” என்று சொன்னார். 20  பின்பு அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்”*+ என்று கேட்டான். 21  அதற்கு அகித்தோப்பேல், “அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காக உங்கள் அப்பா அவருடைய மறுமனைவிகளை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்,+ இல்லையா? அவர்களோடு உறவுகொள்ளுங்கள்.+ நீங்கள் உங்களுடைய அப்பாவைக் கேவலப்படுத்திய விஷயம் இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரியவரும்போது, உங்கள் ஆதரவாளர்களுக்கு இன்னும் தைரியம் கிடைக்கும்” என்று சொன்னான். 22  அதனால், அரண்மனை மாடியில் அப்சலோமுக்காக ஒரு கூடாரம் போட்டார்கள்.+ இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் முன்னால்+ அப்சலோம் தன்னுடைய அப்பாவின் மறுமனைவிகளோடு உறவுகொண்டான்.+ 23  அந்தக் காலத்தில், அகித்தோப்பேல் கொடுத்த ஆலோசனை உண்மைக் கடவுளின் ஆலோசனையாகவே கருதப்பட்டது. தாவீதும் சரி, அப்சலோமும் சரி, அகித்தோப்பேல் கொடுத்த எல்லா ஆலோசனைகளையும்+ அப்படித்தான் உயர்வாகக் கருதினார்கள்.

அடிக்குறிப்புகள்

முக்கியமாக, அத்திப்பழங்கள். பேரீச்சம் பழங்களாகவும் இருந்திருக்கலாம்.
வே.வா., “இரத்தப்பழி உள்ளவனே.”
வே.வா., “ஆலோசகரான.”
வே.வா., “மாறாத அன்பா?”
வே.வா., “எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா