2 சாமுவேல் 17:1-29

17  அகித்தோப்பேல் அப்சலோமிடம், “12,000 வீரர்களைத் தேர்ந்தெடுத்து இன்று ராத்திரி தாவீதைத் துரத்திக்கொண்டு போக எனக்கு அனுமதி கொடுங்கள்.  அவர் அலுத்துக் களைத்திருக்கும்* சமயம்+ பார்த்து அவரைத் தாக்குவேன், அவரைக் கதிகலங்க வைப்பேன். அவருடன் இருப்பவர்கள் எல்லாரும் சிதறி ஓடிவிடுவார்கள். அப்போது ராஜாவை மட்டும் வெட்டி வீழ்த்துவேன்.+  பின்பு, மக்கள் எல்லாரையும் உங்களிடம் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவேன். நீங்கள் தேடுகிற ஆள் ஒழிந்தால்தான் அவர்கள் எல்லாரும் திரும்பி வருவார்கள். அதன் பின்பு, மக்கள் எல்லாரும் சமாதானமாக இருப்பார்கள்” என்று சொன்னான்.  அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாருக்கும் இந்த ஆலோசனை ரொம்பவே பிடித்திருந்தது.  அப்போது அப்சலோம், “அற்கியனான ஊசாயைக்+ கூப்பிடுங்கள். அவரிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம்” என்று சொன்னான்.  ஊசாய் வந்ததும், “அகித்தோப்பேல் இப்படி ஆலோசனை சொன்னார். அவர் சொன்னபடி செய்யலாமா? இல்லையென்றால், நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்லுங்கள்” என்று அப்சலோம் கேட்டான்.  அதற்கு ஊசாய், “இந்தத் தடவை அகித்தோப்பேல் சொன்ன ஆலோசனை எனக்குச் சரியாகப் படவில்லை”+ என்று சொன்னார்.  “உங்கள் அப்பாவும் அவருடைய ஆட்களும் பலசாலிகள்+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். குட்டிகளைப் பறிகொடுத்த கரடி மாதிரி இப்போது அவர்கள் வெறியோடு அலைகிறார்கள்.*+ அதோடு, உங்கள் அப்பா ஒரு போர்வீரர்.+ ராத்திரி நேரத்தில் மக்களோடு தங்க மாட்டார்.  இந்த நிமிஷம்கூட அவர் ஒரு குகையிலோ* வேறு எங்கோதான் பதுங்கியிருப்பார்.+ ஒருவேளை அவர் நம்மை முதலில் தாக்க ஆரம்பித்தால், அதைக் கேள்விப்படுகிற எல்லாரும், ‘அப்சலோமின் வீரர்கள் தோற்றுப்போனார்கள்!’ என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். 10  அதைக் கேட்டால், சிங்கம் போல வீரமாக+ இருக்கிறவன்கூட பயத்தில் வெலவெலத்துப் போய்விடுவான். உங்கள் அப்பா ஒரு பலசாலி,+ அவருடன் இருக்கிற ஆட்கள் தைரியசாலிகள். இது இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரியும். 11  அதனால், என்னுடைய ஆலோசனை இதுதான்: தாண்முதல் பெயெர்-செபாவரை+ இருக்கிற இஸ்ரவேலர்கள் எல்லாரையும் ஒன்றுதிரட்டுவோம். கடற்கரை மணல்போல் எண்ண முடியாத+ வீரர்களுக்கு நீங்களே தலைமைதாங்கிச் செல்லுங்கள். 12  அவரை எங்கே பார்த்தாலும் சரி, தாக்குவோம். தரையில் இறங்கும் பனிபோல் சூழ்ந்துகொள்வோம். அவரும் அவருடன் இருக்கும் யாரும் தப்பிக்க முடியாது. 13  அவர் ஏதாவது ஒரு நகரத்துக்குள் பதுங்கிக்கொண்டால், இஸ்ரவேலர்கள் எல்லாரும் சேர்ந்து அந்த நகரத்தைக் கயிறு கட்டி இழுத்துவருவோம்; சின்னக் கல்லைக்கூட மிச்சம் வைக்காமல் அப்படியே பள்ளத்தாக்குக்குள் தள்ளிவிடுவோம்” என்று சொன்னார். 14  அப்போது அப்சலோமும் அவனோடு இருந்த இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும், “அகித்தோப்பேல் சொன்னதைவிட அற்கியனான ஊசாய் சொன்ன ஆலோசனை நன்றாக இருக்கிறது!”+ என்றார்கள். அகித்தோப்பேல் சொன்ன நல்ல ஆலோசனையை+ எடுபடாமல் போக வைக்க வேண்டும் என்று யெகோவா தீர்மானித்திருந்தார்.* அப்சலோமை அழிப்பதற்காக யெகோவா இப்படித் தீர்மானித்திருந்தார்.+ 15  பின்பு, ஊசாய் குருமார்களான சாதோக்கையும் அபியத்தாரையும்+ பார்த்து, “அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் பெரியோர்களுக்கும்* அகித்தோப்பேல் இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறார். ஆனால், நான் இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறேன். 16  உடனே தாவீதுக்குத் தகவல் அனுப்பி அவரை எச்சரியுங்கள். அவரிடம் போய், ‘நீங்கள் இன்று ராத்திரி வனாந்தரத்திலுள்ள ஆற்றுத்துறைகளில்* தங்காமல், உடனடியாக யோர்தானைக் கடந்துபோக வேண்டும். இல்லையென்றால், ராஜாவும் அவருடன் இருக்கிற மக்கள் எல்லாரும் அழிந்துவிடுவார்கள்’* என்று சொல்லுங்கள்”+ என்றார். 17  நகரத்துக்குள் போனால் யாராவது பார்த்துவிடுவார்கள் என்பதால் யோனத்தானும்+ அகிமாசும்+ என்-ரொகேலில்+ தங்கியிருந்தார்கள். ஒரு வேலைக்காரப் பெண் அவர்களிடம் போய் விஷயத்தைச் சொன்னாள். உடனே அவர்கள் தாவீது ராஜாவிடம் தகவல் சொல்ல கிளம்பினார்கள். 18  அவர்களை ஒரு வாலிபன் பார்த்துவிட்டு, அப்சலோமிடம் தெரிவித்தான். அதனால் அவர்கள் இரண்டு பேரும் வேகவேகமாக பகூரிமுக்குப்+ போய், ஒருவருடைய வீட்டு முற்றத்தில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி ஒளிந்துகொண்டார்கள். 19  அவருடைய மனைவி அந்தக் கிணற்றை ஒரு துணியால் மூடி, அதன்மேல் நொய்யைப் பரப்பி வைத்தாள். அவர்கள் ஒளிந்திருந்த விஷயம் யாருக்கும் தெரியாது. 20  அப்சலோமின் ஊழியர்கள் அவளுடைய வீட்டுக்கு வந்து, “அகிமாசும் யோனத்தானும் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “அவர்கள் ஆற்றுப்பக்கம் போய்விட்டார்கள்” என்று சொன்னாள்.+ எவ்வளவு தேடியும் அந்த ஆட்களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அதனால், அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கே திரும்பிப்போனார்கள். 21  அவர்கள் போன பின்பு, யோனத்தானும் அகிமாசும் கிணற்றிலிருந்து வெளியே வந்தார்கள். தாவீது ராஜாவிடம் போய், “உடனே கிளம்பி, யோர்தானைக் கடந்துபோய்விடுங்கள். அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்கள். 22  உடனே தாவீதும் அவருடன் இருந்த எல்லா ஆட்களும் எழுந்து யோர்தானைக் கடந்தார்கள். விடிவதற்குள், ஒருவர் விடாமல் அத்தனை பேரும் யோர்தானைக் கடந்திருந்தார்கள். 23  தன்னுடைய ஆலோசனைப்படி அப்சலோம் நடக்கவில்லை எனத் தெரிந்ததும், அகித்தோப்பேல் ஒரு கழுதைமேல் சேணம்* வைத்துத் தன்னுடைய சொந்த ஊருக்குப் போனான்.+ வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு,+ தூக்குப்போட்டுக்கொண்டு செத்தான்.+ பின்பு, அவனுடைய முன்னோர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். 24  இதற்கிடையே தாவீது மக்னாயீம்+ என்ற இடத்துக்குப் போனார். ஆனால், அப்சலோம் இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்தான். 25  அப்சலோம் யோவாபுக்குப்+ பதிலாக அமாசாவை+ படைத் தளபதியாக ஏற்படுத்தினான். எத்திரா என்ற இஸ்ரவேலரின் மகன்தான் அமாசா. இந்த எத்திரா அபிகாயிலுடன்+ உறவு வைத்திருந்தார்.* அபிகாயில் நாகாசின் மகள்; யோவாபின் அம்மாவான செருயாவின் சகோதரி. 26  அப்சலோமும் இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும் கீலேயாத்+ பிரதேசத்தில் முகாம்போட்டார்கள். 27  தாவீது மக்னாயீமுக்கு வந்தவுடனே, அம்மோனியர்களின் நகரமான ரப்பாவைச்+ சேர்ந்த நாகாசின் மகன் சோபியும் லோ-தேபாரைச் சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும்+ ரோகிலிமைச் சேர்ந்த கீலேயாத்தியரான பர்சிலாவும்+ அவரைப் பார்க்க வந்தார்கள். 28  பாய்கள், பாத்திரங்கள், மண்பானைகள், கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், மொச்சைப் பயறுகள், பருப்புகள், சுட்ட கதிர்கள், 29  தேன், வெண்ணெய், செம்மறியாடுகள், பாலாடைக் கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். தாவீதும் அவருடன் இருந்தவர்களும் சாப்பிடுவதற்காக இவற்றையெல்லாம் கொண்டுவந்தார்கள்.+ “வனாந்தரத்தில் இந்த மக்கள் பசிதாகத்தோடு இருப்பார்கள், களைத்துப்போயிருப்பார்கள் என்பதால் இவற்றைக் கொண்டுவந்தோம்”+ என்று சொன்னார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவருடைய இரண்டு கைகளும் தளர்ந்திருக்கும்.”
வே.வா., “மூப்பர்கள்.”
வே.வா., “மனக்கசப்புடன் இருக்கிறார்கள்.”
வே.வா., “குழியிலோ, பள்ளத்தாக்கிலோ.”
வே.வா., “கட்டளையிட்டிருந்தார்.”
வே.வா., “மூப்பர்களுக்கும்.”
நே.மொ., “விழுங்கப்படுவார்கள்.”
அல்லது, “பாலைநிலங்களில்.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
அநேகமாக, எத்திரா அபிகாயிலின் கணவராக இருந்திருக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா