2 சாமுவேல் 2:1-32

2  அதன் பின்பு தாவீது யெகோவாவிடம், “யூதாவிலிருக்கிற ஒரு நகரத்துக்குப் போய்த் தங்கட்டுமா?” என்று விசாரித்தார்.+ யெகோவா அவரிடம், “போ” என்று சொன்னார். அப்போது தாவீது, “எந்த நகரத்துக்குப் போகட்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர், “எப்ரோனுக்குப்+ போ” என்று சொன்னார்.  அதனால், தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளையும், அதாவது யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாமையும்+ இறந்துபோன கர்மேல் ஊரானாகிய நாபாலின் மனைவி அபிகாயிலையும்,+ கூட்டிக்கொண்டு அங்கே போனார்.  அதோடு, தன்னுடன் இருந்த ஆட்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு போனார்;+ அவர்கள் எப்ரோனைச் சுற்றியுள்ள நகரங்களில் குடியேறினார்கள்.  பின்பு, யூதாவைச் சேர்ந்த ஆண்கள் அங்கே வந்து, தாவீதை யூதா வம்சத்துக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+ அவர்கள் தாவீதிடம், “யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்தவர்கள்தான் சவுலை அடக்கம் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.  அதனால், யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்தவர்களிடம் தாவீது தன்னுடைய ஆட்களை அனுப்பி, “உங்கள் எஜமானாகிய சவுலை அடக்கம் செய்து அவருக்கு மாறாத அன்பு காட்டியிருக்கிறீர்கள்;+ அதனால் யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்.  யெகோவா உங்களுக்கு மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டட்டும். நீங்கள் செய்த இந்த நல்ல காரியத்துக்காக நானும் உங்களுக்குக் கருணை காட்டுவேன்.+  நீங்கள் தைரியமாயிருங்கள், உறுதியோடிருங்கள். உங்களுடைய எஜமான் சவுல் இறந்துவிட்டதால், யூதா வம்சத்தார் என்னைத் தங்களுடைய ராஜாவாக அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று சொன்னார்.  ஆனால், சவுலின் படைத் தளபதியும் நேரின் மகனுமாகிய அப்னேர்,+ சவுலின் மகன் இஸ்போசேத்தைக்+ கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து மக்னாயீமுக்குப்+ போய்,  அஷூரியருக்கும் கீலேயாத்துக்கும்+ யெஸ்ரயேலுக்கும்+ எப்பிராயீமுக்கும்+ பென்யமீனுக்கும், சொல்லப்போனால் இஸ்ரவேல் முழுவதுக்கும், அவரை ராஜாவாக்கினார். 10  சவுலின் மகன் இஸ்போசேத் இஸ்ரவேலுக்கு ராஜாவானபோது அவருக்கு 40 வயது; அவர் இரண்டு வருஷங்கள் ஆட்சி செய்தார். யூதா வம்சத்தாரோ தாவீதை ஆதரித்தார்கள்.+ 11  அவர் எப்ரோனிலிருந்து யூதா வம்சத்தார்மீது ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார்.+ 12  கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்போசேத்தின் ஊழியர்களும் மக்னாயீமிலிருந்து+ கிபியோனுக்குப்+ போனார்கள். 13  செருயாவின்+ மகன் யோவாபும்+ தாவீதின் ஊழியர்களும்கூட புறப்பட்டுப் போய் கிபியோனிலுள்ள குளத்துக்குப் பக்கத்தில் அவர்களை நேருக்கு நேர் சந்தித்தார்கள்; குளத்துக்கு இந்தப் பக்கத்தில் இவர்களும், குளத்துக்கு அந்தப் பக்கத்தில் அவர்களும் உட்கார்ந்தார்கள். 14  அப்போது அப்னேர் யோவாபிடம், “இளைஞர்கள் எழுந்து வந்து ஒருவரோடு ஒருவர் மோதட்டும்”* என்று சொன்னார். அதற்கு யோவாப், “சரி, மோதட்டும்” என்று சொன்னார். 15  அப்போது, இரண்டு பக்கத்தில் இருந்தவர்களும் ஆட்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். சவுலின் மகன் இஸ்போசேத்தின் ஊழியர்களில் 12 பென்யமீனியர்களும் தாவீதின் ஊழியர்களில் 12 பேரும் போனார்கள். 16  அவர்கள் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்து, வாளால் ஒருவரை ஒருவர் விலாவில் குத்தினார்கள்; இதனால் அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் செத்து விழுந்தார்கள். அதனால்தான், கிபியோனில் இருக்கிற அந்த இடம் எல்காத்-அசூரிம் என்று அழைக்கப்பட்டது. 17  அதன் பின்பு, இரண்டு தரப்பினரும் அன்று பயங்கர வெறியோடு சண்டை போட்டார்கள்; கடைசியில், அப்னேரும் இஸ்ரவேல் ஆண்களும் தாவீதின் ஊழியர்களிடம் தோற்றுப்போனார்கள். 18  அங்கே செருயாவின்+ மூன்று மகன்களான யோவாபும்+ அபிசாயும்+ ஆசகேலும்+ இருந்தார்கள்; காட்டிலிருக்கிற கலைமான்* போல ஆசகேல் மிக வேகமாய் ஓடுபவர். 19  அவர் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் அப்னேரைத் துரத்திக்கொண்டு ஓடினார். 20  அப்னேர் திரும்பிப் பார்த்து, “நீ ஆசகேல்தானே?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆமாம், நான்தான்” என்று சொன்னார். 21  அப்போது அப்னேர் அவரிடம், “நீ என்னைத் துரத்திக்கொண்டு வராதே, இளைஞர்களில் ஒருவனைப் பிடித்து அவனிடம் இருப்பதைப் பிடுங்கிக்கொள்” என்று சொன்னார். ஆனாலும் ஆசகேல், அவரை விடாமல் துரத்தினார். 22  அதனால் அப்னேர் மறுபடியும் அவரிடம், “என்னைத் துரத்திக்கொண்டு வராதே; வந்தால் உன்னை வெட்டி விடுவேன். உன்னைக் கொன்றுவிட்டு, உன் சகோதரன் யோவாப் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்?” என்று கேட்டார். 23  ஆனால், ஆசகேல் அவரை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தார். அதனால், அப்னேர் தன்னுடைய ஈட்டியின் பின்புறத்தால் அவருடைய அடிவயிற்றில் குத்தினார்;+ அந்த ஈட்டி அவருடைய உடலை ஊடுருவி பின்பக்கமாக வந்தது. அவர் அந்த இடத்திலேயே விழுந்து செத்துப்போனார். ஆசகேல் செத்துக் கிடந்த இடத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றார்கள். 24  பின்பு யோவாபும் அபிசாயும் அப்னேரைத் துரத்திக்கொண்டு போனார்கள். சூரியன் மறைந்துகொண்டிருந்த சமயத்தில், அம்மாவு என்ற குன்றுக்கு வந்துசேர்ந்தார்கள்; இது கிபியோன் வனாந்தரத்துக்குப் போகும் வழியில் கீயாவுக்கு எதிரில் இருக்கிறது. 25  அங்கே பென்யமீனியர்கள் எல்லாரும் அப்னேருக்குப் பின்னால் ஒன்றுதிரண்டு, ஒரு குன்றின் உச்சியில் கூட்டமாக நின்றார்கள். 26  அப்போது அப்னேர் யோவாபிடம், “இன்னும் எவ்வளவு நேரத்துக்குத்தான் சண்டை போட்டுக்கொண்டிருப்பாய்? இப்படியே சண்டை போட்டுக்கொண்டிருந்தால் வேதனைதான் மிஞ்சும் என்று உனக்குத் தெரியாதா? தங்களுடைய சொந்த சகோதரர்களிடம் சண்டை போடுவதை நிறுத்தச்சொல்லி உன்னுடைய ஆட்களிடம் சொல்ல மாட்டாயா?” என்று சத்தமாகக் கேட்டார். 27  அதற்கு யோவாப், “உண்மைக் கடவுள்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீங்கள் மட்டும் இதைச் சொல்லாமல் இருந்திருந்தால், வீரர்கள் தங்களுடைய சகோதரர்களைக் காலைவரை துரத்திக்கொண்டேதான் இருந்திருப்பார்கள்” என்றார். 28  உடனே யோவாப் ஊதுகொம்பை எடுத்து ஊதினார்; அவருடைய வீரர்கள் இஸ்ரவேலர்களைத் துரத்துவதை நிறுத்தினார்கள், சண்டையும் ஓய்ந்தது. 29  அப்னேரும் அவருடைய வீரர்களும் அன்று ராத்திரி முழுவதும் அரபா+ வழியாகப் பயணம் செய்து, யோர்தானைக் கடந்தார்கள்; பின்பு பள்ளத்தாக்கை* கடந்து கடைசியில் மக்னாயீமுக்கு+ வந்துசேர்ந்தார்கள். 30  அப்னேரைத் துரத்துவதை யோவாப் நிறுத்திய பின்பு தன்னுடைய வீரர்களை ஒன்றுதிரட்டினார். தாவீதின் ஊழியர்களில் ஆசகேலும் இன்னும் 19 பேரும் கொல்லப்பட்டிருந்தார்கள். 31  ஆனால், பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்தவர்களையும் அப்னேரின் ஆட்களையும் தாவீதின் ஊழியர்கள் தோற்கடித்திருந்தார்கள், மொத்தம் 360 பேரைக் கொன்று போட்டிருந்தார்கள். 32  ஆசகேலை+ பெத்லகேமிலுள்ள+ அவருடைய அப்பாவின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவருடைய வீரர்களும் ராத்திரி முழுவதும் நடந்து, விடியற்காலையில் எப்ரோனுக்கு+ வந்துசேர்ந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “போட்டி போடட்டும்.”
வே.வா., “நவ்வி மான்.”
வே.வா., “உண்மைக் கடவுள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
அல்லது, “பித்ரோன் முழுவதையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா