2 சாமுவேல் 22:1-51
22 சவுலிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் யெகோவா தாவீதைக் காப்பாற்றினார்.+ அப்போது, யெகோவாவுக்கு முன்பாக தாவீது இந்தப் பாடலைப் பாடினார்.+
2 அவர் பாடியது:
“யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை.+ என்னைக் காப்பாற்றுபவர்.+
3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர்.
4 எல்லா புகழையும் பெறத் தகுதியுள்ளவரான யெகோவாவை நான் கூப்பிடுவேன்,எதிரிகளிடமிருந்து அவர் என்னைக் காப்பாற்றுவார்.
5 மரண அலைகள் என்னைச் சுற்றி அடித்தன;+ஒன்றுக்கும் உதவாதவர்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து எனக்குத் திகிலூட்டினார்கள்.+
6 கல்லறையின்* கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின.+சாவின் கண்ணிகள் என் முன்னால் இருந்தன.+
7 இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்,+என் கடவுளை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.
அப்போது, அவருடைய ஆலயத்திலிருந்து அவர் என் குரலைக் கேட்டார்,என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.+
8 பூமி அதிர்ந்து பயங்கரமாகக் குலுங்கியது;+அவருடைய கோபத்தால் வானத்தின் அஸ்திவாரங்கள் அதிர்ந்தன,+அவை கிடுகிடுவென ஆடின.+
9 அவருடைய மூக்கிலிருந்து புகை எழும்பியது.சுட்டுப்பொசுக்கும் தீ அவர் வாயிலிருந்து புறப்பட்டது.+தகதகக்கும் தணல்கள் அவரிடமிருந்து தெறித்தன.
10 அவர் இறங்கியபோது வானத்தை வளைத்தார்,+கார்மேகங்கள் அவருடைய காலடியில் இருந்தன.+
11 கேருபீனின் மேல் ஏறி அவர் பறந்து வந்தார்.+
தேவதூதரின்* இறக்கைகள்மேல் காட்சி தந்தார்.+
12 பின்பு, இருளையும் கருத்த மழை மேகங்களையும்ஒரு கூடாரம்போல் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொண்டார்.+
13 அவருடைய பிரகாசமான சன்னிதியில் நெருப்புத் தணல்கள் தகதகத்தன.
14 பின்பு, யெகோவா வானத்திலிருந்து இடிபோல் முழங்கினார்;+உன்னதமான கடவுள் தன்னுடைய குரலைக் கேட்கச் செய்தார்.+
15 அம்புகளை எறிந்து+ எதிரிகளைச் சிதறிப்போக வைத்தார்;மின்னலை அனுப்பி அவர்களைக் குழம்பிப்போக வைத்தார்.+
16 யெகோவா அதட்டினார்,அவருடைய மூச்சுக்காற்று பலமாக அடித்தது.+அப்போது, கடலின் அடிப்பரப்பு வெளியே தெரிந்தது;+பூமியின் அஸ்திவாரங்களும் தெரிந்தன.
17 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+
18 பலம்படைத்த எதிரியிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்,+என்னைவிட வலிமையான விரோதிகளிடமிருந்து என்னை விடுவித்தார்.
19 ஆபத்து நாளில் அவர்கள் எனக்கு எதிராக வந்தார்கள்,+ஆனால், யெகோவா எனக்குத் துணையாக இருந்தார்.
20 பாதுகாப்பான* இடத்துக்கு என்னைக் கொண்டுவந்தார்;+என்மேல் வைத்திருந்த பிரியத்தால் என்னைக் காப்பாற்றினார்.+
21 யெகோவா என் நீதிக்குப் பலன் தருகிறார்.+கறைபடியாத என் கைகளுக்குப் பரிசு கொடுக்கிறார்.+
22 நான் எப்போதும் யெகோவாவின் வழிகளில் நடக்கிறேன்.என் கடவுளைவிட்டு நான் விலகவில்லை, அந்தப் பாவத்தை நான் செய்யவில்லை.
23 அவருடைய நீதித்தீர்ப்புகளைக்+ கண் முன்னால் வைத்திருக்கிறேன்.அவருடைய சட்டதிட்டங்களை விட்டுவிலக மாட்டேன்.+
24 அவர் முன்னால் எப்போதும் குற்றமற்றவனாக இருப்பேன்,+தவறு செய்யாமல் ஜாக்கிரதையாக இருப்பேன்.+
25 யெகோவா என் நீதிக்குப் பலன் தரட்டும்.+கறைபடியாமல் இருக்கும் எனக்குப் பலன் கொடுக்கட்டும்.+
26 உண்மையுள்ளவரிடம்* நீங்கள் உண்மையுள்ளவராக* நடந்துகொள்கிறீர்கள்;+குற்றமற்றவரிடம் நீங்கள் குற்றமற்றவராக நடந்துகொள்கிறீர்கள்;+
27 தூய்மையானவருக்கு நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள்,+குறுக்குபுத்திக்காரரிடம் நீங்கள் புத்திசாலித்தனமாக* நடந்துகொள்கிறீர்கள்.+
28 தாழ்மையுள்ளவர்களைக் காப்பாற்றுகிறீர்கள்,+கர்வமுள்ளவர்களை உங்களுடைய கண்கள் வெறுக்கின்றன; நீங்கள் அவர்களைத் தாழ்த்துகிறீர்கள்.+
29 யெகோவாவே, என் விளக்கு நீங்கள்தான்.+என் இருளை வெளிச்சமாக்குகிறவர் யெகோவாதான்.+
30 உங்கள் துணையால் கொள்ளைக்கூட்டத்தைத் தாக்குவேன்;உங்கள் சக்தியால் மதிலையும் தாண்டுவேன்.+
31 உண்மைக் கடவுளுடைய வழிகள் குறை இல்லாதவை.+யெகோவாவுடைய வார்த்தைகள் புடமிடப்பட்டவை.+
தன்னிடம் தஞ்சம் தேடி வருகிற எல்லாருக்கும் அவர் கேடயமாக இருக்கிறார்.+
32 யெகோவாவைத் தவிர வேறு கடவுள் உண்டா?+
நம் கடவுளைத் தவிர வேறு கற்பாறை உண்டா?+
33 உண்மைக் கடவுள் எனக்கு வலிமையான கோட்டையாக இருக்கிறார்,+அவர் என் வழியைச் சீராக்குவார்.+
34 அவர் என் கால்களை மானின் கால்களைப் போலாக்குகிறார்.உயரமான இடங்களில் என்னை நிற்க வைக்கிறார்.+
35 போர் செய்ய என் கைகளுக்குப் பயிற்சி தருகிறார்;அதனால், என் கைகளால் செம்பு வில்லை வளைக்க முடியும்.
36 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்,உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+
37 நான் நடக்கும் பாதையை அகலமாக்குகிறீர்கள்.அதனால், என் கால்கள்* தடுமாறாது.+
38 நான் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய்த் தீர்த்துக்கட்டுவேன்.அவர்களை அடியோடு அழித்துவிட்டுத்தான் திரும்புவேன்.
39 அவர்களை ஒழித்துக்கட்டுவேன், மறுபடியும் எழுந்து வர முடியாதபடி நொறுக்குவேன்;+அவர்கள் என் காலடியில் விழுவார்கள்.
40 போர் செய்ய நீங்கள் எனக்குப் பலம் தருவீர்கள்.+எதிரிகளை என் காலடியில் விழ வைப்பீர்கள்.+
41 என் பகைவர்களைப் பின்வாங்கி ஓட வைப்பீர்கள்.+என் விரோதிகளை நான் ஒழித்துக்கட்டுவேன்.*+
42 அவர்கள் உதவி கேட்டுக் கதறுகிறார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.அவர்கள் யெகோவாவிடமும் கதறுகிறார்கள், ஆனால் அவர் பதில் சொல்வதில்லை.+
43 தரையில் கிடக்கிற தூசியைப் போல் அவர்களை நான் தூள்தூளாக்குவேன்;அவர்களைச் சுக்குநூறாக்கி, தெருக்களில் கிடக்கிற சேற்றைப் போல் மிதித்துப்போடுவேன்.
44 என்னை எதிர்க்கிற* ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுவீர்கள்.+
என்னைப் பாதுகாத்து தேசங்களுக்குத் தலைவனாக்குவீர்கள்;+முன்பின் தெரியாத மக்கள் எனக்குச் சேவை செய்வார்கள்.+
45 மற்ற தேசத்து மக்கள் என் முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு எனக்குக் கீழ்ப்படிவார்கள்.
46 மற்ற தேசத்து மக்கள் வெலவெலத்துப்போவார்கள்.*அவர்களுடைய கோட்டைகளிலிருந்து நடுநடுங்கிக்கொண்டு வருவார்கள்.
47 யெகோவாதான் உயிருள்ள கடவுள்! அவரே என் கற்பாறை!+ அவருக்குப் புகழ் சேரட்டும்!
கடவுள்தான் என்னை மீட்கும் கற்பாறை, அவர் போற்றப்படட்டும்.+
48 உண்மைக் கடவுள் எனக்காகப் பழிவாங்குகிறார்.+மக்களை என் முன்னால் அடிபணிய வைக்கிறார்.+
49 எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறார்.
என்னைத் தாக்க வருகிறவர்களின் கைக்கு எட்டாதபடி என்னைத் தூக்கிக்கொள்கிறார்.+கொடியவனிடமிருந்து என்னைப் பாதுகாக்கிறார்.+
50 அதனால் யெகோவாவே, எல்லா மக்கள் மத்தியிலும் உங்களுக்கு நன்றி சொல்வேன்,+உங்களுடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்:*+
51 தான் நியமித்த ராஜாவை மீட்பதற்காக அவர் மாபெரும் செயல்களைச் செய்கிறார்.*+தான் தேர்ந்தெடுத்த* தாவீதுக்கும் அவருடைய சந்ததிக்கும்மாறாத அன்பை என்றென்றும் காட்டுகிறார்.”+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “உயர்ந்த.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “காற்றின்.”
^ வே.வா., “விசாலமான.”
^ வே.வா., “பற்றுமாறாதவராக.”
^ வே.வா., “பற்றுமாறாதவரிடம்.”
^ வே.வா., “சாமர்த்தியமாக.”
^ வே.வா., “கணுக்கால்கள்.”
^ நே.மொ., “மவுனமாக்குவேன்.”
^ வே.வா., “என்னைக் குறைசொல்கிற.”
^ வே.வா., “வாடிப்போவார்கள்.”
^ வே.வா., “இசை இசைப்பேன்.”
^ வே.வா., “மாபெரும் வெற்றிகளைக் குவிக்கிறார்.”
^ வே.வா., “அபிஷேகம் செய்த.”