2 சாமுவேல் 3:1-39

3  சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் சண்டை ஓயவே இல்லை; தாவீது மேலும் மேலும் வலிமை பெற்றுவந்தார்;+ சவுலின் வீட்டாரோ படிப்படியாக வலிமை இழந்துவந்தார்கள்.+  இதற்கிடையே, எப்ரோனில் இருந்தபோது தாவீதுக்கு மகன்கள் பிறந்தார்கள்.+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாமுக்குப்+ பிறந்த அம்னோன்+ அவருடைய மூத்த மகன்.  இரண்டாம் மகன் கீலேயாப்; இறந்துபோன கர்மேல் ஊரானாகிய நாபாலின் மனைவி அபிகாயில்+ இவனைப் பெற்றாள். மூன்றாம் மகன் அப்சலோம்;+ கேசூர் தேசத்து ராஜாவான தல்மாயின்+ மகளாகிய மாக்காள் இவனைப் பெற்றாள்.  ஆகீத் பெற்ற அதோனியா+ நான்காம் மகன்; அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்.  தாவீதின் மனைவி எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன். இவர்களே எப்ரோனில் தாவீதுக்குப் பிறந்த மகன்கள்.  சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த சமயத்தில், சவுலின் வீட்டில் அப்னேர்+ தன்னுடைய செல்வாக்கை வலுப்படுத்திக்கொண்டே வந்தார்.  அயாவின் மகளாகிய ரிஸ்பாள்+ சவுலுக்கு மறுமனைவியாக இருந்தவள். ஒருசமயம் இஸ்போசேத்+ அப்னேரிடம், “நீங்கள் ஏன் என் அப்பாவின் மறுமனைவியோடு உறவுகொண்டீர்கள்?”+ என்று கேட்டார்.  அதைக் கேட்டதும் அப்னேர் பயங்கர கோபமடைந்து, “நான் என்ன யூத நாயா?* உன்னுடைய அப்பா குடும்பத்துக்கும் அவருடைய அண்ணன் தம்பிகளுக்கும் நண்பர்களுக்கும் இன்றுவரை விசுவாசமாக இருந்திருக்கிறேன்.* தாவீதிடம் பிடித்துக் கொடுக்காமல் உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன்; அப்படியிருக்கும்போது, ஒரு பெண் விஷயத்தில் என்னைக் குற்றம்சாட்டுகிறாயா?  ‘சவுலின் வம்சத்தாரிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி தாவீதுக்குக் கொடுப்பேன், தாண்முதல் பெயெர்-செபாவரை+ இஸ்ரவேல்மீதும் யூதாமீதும் தாவீதின் ஆட்சியை நிலைநாட்டுவேன்’ என்று தாவீதுக்கு யெகோவா ஆணையிட்டுக் கொடுத்திருந்தாரே.+ 10  அந்த ஆணைப்படி தாவீதுக்கு நான் செய்யாவிட்டால் கடவுள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்” என்று சொன்னார். 11  இஸ்போசேத் அப்னேருக்குப் பயந்ததால் பதிலுக்கு ஒரு வார்த்தைகூட பேசவில்லை.+ 12  உடனே அப்னேர் தாவீதிடம் ஆட்களை அனுப்பி, “இந்தத் தேசம் முழுவதும் யாருக்குச் சொந்தம்? என்னோடு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். இஸ்ரவேலர்கள் எல்லாரையும் உங்கள் பக்கம் திருப்ப என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்”+ என்று சொன்னார். 13  அதற்கு தாவீது, “நல்லது! நான் உங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். ஆனால், நீங்கள் எனக்காக ஒன்றைச் செய்ய வேண்டும். நீங்கள் வரும்போது சவுலின் மகள் மீகாளைக்+ கூட்டிக்கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், என்னைப் பார்க்க வராதீர்கள்” என்று சொன்னார். 14  பின்பு சவுலின் மகன் இஸ்போசேத்திடம்+ தாவீது ஆட்களை அனுப்பி, “என் மனைவி மீகாளை என்னிடம் அனுப்பிவையுங்கள். நூறு பெலிஸ்தியர்களின் நுனித்தோலைக் கொடுத்து நான் அவளைக் கல்யாணம் செய்திருக்கிறேன்”+ என்று சொன்னார். 15  அதனால் இஸ்போசேத் அவளுடைய கணவனிடமிருந்து, அதாவது லாயீசின் மகன் பல்த்தியேலிடமிருந்து,+ அவளைக் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பினார். 16  ஆனால், அவளுடைய கணவன் அழுதுகொண்டு பகூரிம்வரை+ அவள் பின்னாலேயே வந்தான். அப்னேர் அவனிடம், “பின்னால் வராதே, போய்விடு” என்று சொன்னார். அதனால், அவன் திரும்பிப் போனான். 17  இதற்கிடையே, இஸ்ரவேலின் பெரியோர்களிடம்* அப்னேர் ஆள் அனுப்பி, “தாவீது உங்களுக்கு ராஜாவாக வேண்டுமென்று கொஞ்ச நாளாகவே ஆசைப்பட்டீர்கள், இல்லையா? 18  இதோ, அதற்கு நேரம் வந்துவிட்டது! ஏனென்றால், ‘என் மக்களை பெலிஸ்தியர்களிடமிருந்தும் எல்லா எதிரிகளிடமிருந்தும் என் ஊழியனாகிய தாவீதின் மூலம் காப்பாற்றுவேன்’+ என்று யெகோவா தாவீதிடம் சொல்லியிருக்கிறாரே” என்றார். 19  பின்பு, இதைப் பற்றி பென்யமீன் வம்சத்தாரிடமும்+ அப்னேர் பேசினார். அதோடு, இஸ்ரவேலர்களும் பென்யமீன் வம்சத்தார் எல்லாரும் தாவீதை ராஜாவாக்க ஒத்துக்கொண்ட விஷயத்தை எப்ரோனில் இருந்த தாவீதிடம் சொல்வதற்காக அப்னேர் புறப்பட்டுப் போனார். 20  தாவீதைச் சந்திக்க 20 ஆட்களுடன் எப்ரோனுக்கு அப்னேர் வந்தபோது, அவருக்கும் அவருடைய ஆட்களுக்கும் தாவீது விருந்து வைத்தார். 21  பின்பு அப்னேர் தாவீதிடம், “என் எஜமானே, நான் போய் இஸ்ரவேலர்கள் எல்லாரையும் ராஜாவாகிய உங்கள் முன்னால் ஒன்றுகூட்டுகிறேன். அவர்கள் உங்களோடு ஒப்பந்தம் செய்வார்கள். நீங்கள் விரும்பியபடியே தேசம் முழுவதையும் ஆட்சி செய்யுங்கள்” என்று சொன்னார். அதன் பின்பு, தாவீது அப்னேரை வழியனுப்பினார், அவரும் சமாதானமாகத் திரும்பிப் போனார். 22  அப்போதுதான், தாவீதின் ஊழியர்களும் யோவாபும் திடீர்த் தாக்குதல் நடத்திவிட்டு, எக்கச்சக்கமான பொருள்களைக் கைப்பற்றிக்கொண்டு திரும்பி வந்தார்கள். அந்தச் சமயத்தில் அப்னேர் எப்ரோனில் இல்லை. ஏனென்றால், தாவீது அவரைச் சமாதானமாக அனுப்பி வைத்திருந்தார். 23  யோவாபும்+ அவரோடு போன எல்லா வீரர்களும் திரும்பி வந்தபோது, “ராஜாவைப் பார்க்க நேரின்+ மகன் அப்னேர்+ வந்திருந்தார். ராஜா அவரைச் சமாதானமாக அனுப்பி வைத்துவிட்டார்” என்று யோவாபிடம் சொன்னார்கள். 24  அதனால் ராஜாவிடம் யோவாப் போய், “ஏன் இப்படிச் செய்தீர்கள்? உங்களைப் பார்க்க அப்னேர் வந்தானே, அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டீர்களே? 25  நேரின் மகன் அப்னேரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அவன் உங்களை முட்டாளாக்கப் பார்க்கிறான். நீங்கள் என்ன செய்கிறீர்கள், ஏது செய்கிறீர்கள் என்பதை நோட்டமிடத்தான் அவன் வந்தான்” என்று சொன்னார். 26  பின்பு யோவாப் அங்கிருந்து போய், அப்னேரைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக அவர் பின்னாலேயே ஆட்களை அனுப்பினார். அவர்கள் அவரை சீரா தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் பார்த்து, திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆனால், தாவீதுக்கு இதைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. 27  அப்னேர் எப்ரோனுக்குள் நுழைந்ததும்,+ யோவாப் அவரிடம் தனியாகப் பேசுவதற்கு நகரத்தின் நுழைவாசலுக்குள் ஓர் ஓரமான இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார். ஆனால், அங்கே போனதும் அவருடைய அடிவயிற்றில் வாளால் குத்தினார், அப்னேர் செத்துப்போனார்.+ தன்னுடைய சகோதரன் ஆசகேலைக் கொன்றதற்காக* அப்னேரைப் பழிவாங்கத்தான் யோவாப் அப்படிச் செய்தார்.+ 28  தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, “நேரின் மகன் அப்னேரின் கொலைக்கு* நானோ என் அரசோ பொறுப்பில்லை. யெகோவாவின் பார்வையில் நாங்கள் குற்றமற்றவர்கள்.*+ 29  இந்தக் கொலைப்பழி* யோவாப்மீதும் அவருடைய தகப்பன் வீட்டார்மீதும் விழட்டும்.+ பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் உள்ளவனும்+ தொழுநோயாளியும்+ கைராட்டை சுற்றுகிறவனும்* வாளுக்கு இரையாகிறவனும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறவனும்+ யோவாப் வம்சத்தில் எப்போதுமே இருக்கட்டும்!” என்று சொன்னார். 30  யோவாபும் அவர் சகோதரன் அபிசாயும்+ அப்னேரைக்+ கொலை செய்திருந்தார்கள்; ஏனென்றால், கிபியோனில் நடந்த சண்டையில் ஆசகேலை அப்னேர் கொன்றுபோட்டிருந்தார்.+ 31  பின்பு தாவீது யோவாபையும் அவரோடிருந்த மக்கள் எல்லாரையும் பார்த்து, “உங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, துக்கத் துணியை* கட்டிக்கொள்ளுங்கள்; அப்னேருக்காக அழுது புலம்புங்கள்” என்று சொன்னார். அப்னேரின் பாடையைத் தூக்கிக்கொண்டு போனபோது, அதன் பின்னால் தாவீது ராஜாவும் நடந்துபோனார். 32  அப்னேரை எப்ரோனில் அடக்கம் செய்தார்கள்; அவருடைய கல்லறையில் ராஜா கதறி அழுதார்; மக்கள் எல்லாரும் அழுதார்கள். 33  அப்னேருக்காக ராஜா புலம்பி அழுது, “அப்னேரே, புத்தியில்லாதவர் போல் நீங்கள் சாக வேண்டுமா? 34  உங்கள் கைகள் கட்டப்படவில்லையே,உங்கள் கால்களில் விலங்கு* பூட்டப்படவில்லையே, குற்றவாளிகள்* கையில் வீழ்வதுபோல் வீழ்ந்தீர்களே”+ என்று சொல்லி அழுதார். அதைக் கேட்டதும் மக்கள் எல்லாரும் அப்னேருக்காக மறுபடியும் அழுதார்கள். 35  தாவீதை ஆறுதல்படுத்துவதற்காக, சூரியன் மறைவதற்கு முன்பே மக்கள் எல்லாரும் அவருக்கு உணவு கொண்டுவந்தார்கள். ஆனால் அவர், “பொழுதுசாய்வதற்கு முன்னால் நான் ஏதாவது சாப்பிட்டால் கடவுள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்!”+ என்று ஆணையிட்டுச் சொன்னார். 36  மக்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள், அவர் செய்தது அவர்களுக்குச் சரியாகப் பட்டது, ராஜா செய்த மற்ற காரியங்கள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்திருந்தது போலவே இதுவும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. 37  அதனால், நேரின் மகன் அப்னேரின் சாவுக்கு ராஜா காரணமில்லை என்பதை தாவீதின் ஆட்களும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் அன்றைக்குத் தெரிந்துகொண்டார்கள்.+ 38  ராஜா தன்னுடைய ஊழியர்களிடம், “இன்று இஸ்ரவேலில் ஒரு தலைவர் இறந்துவிட்டார், ஒரு பெரிய மனிதர் போய்விட்டார்.+ 39  நான் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாதான்,+ ஆனாலும் நான் இப்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறேன். செருயாவின் மகன்கள்+ கொடூரமானவர்களாக இருக்கிறார்கள்.+ தீமை செய்கிறவனுக்கு அவன் செய்த தீமைக்குத் தக்க தண்டனையை யெகோவா கொடுக்கட்டும்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நாய் தலையா?”
வே.வா., “இன்றுவரை மாறாத அன்பு காட்டியிருக்கிறேன்.”
வே.வா., “மூப்பர்களிடம்.”
நே.மொ., “ஆசகேலின் இரத்தத்துக்காக.”
வே.வா., “இரத்தப்பழிக்கு.”
வே.வா., “எங்கள்மீது இரத்தப்பழி இல்லை.”
வே.வா., “இரத்தப்பழி.”
ஊனமுற்றதால் பெண்களுடைய வேலையைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டவனைக் குறிக்கலாம்.
நே.மொ., “செம்பு.”
நே.மொ., “அநீதியின் மகன்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா