2 சாமுவேல் 4:1-12

4  எப்ரோனில் அப்னேர் இறந்த விஷயத்தை+ சவுலின் மகன் இஸ்போசேத்+ கேள்விப்பட்டதும் நிலைகுலைந்துபோனார்.* இஸ்ரவேலர்கள் எல்லாரும் கதிகலங்கினார்கள்.  சவுலுடைய மகனின் படையில் திடீர்த் தாக்குதல் நடத்தும் பிரிவுக்கு இரண்டு பேர் அதிகாரிகளாக இருந்தார்கள். ஒருவன் பெயர் பாணா, மற்றொருவன் பெயர் ரேகாப். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ரிம்மோன் என்பவரின் மகன்கள். இந்த ரிம்மோன், பேரோத் என்ற ஊரைச் சேர்ந்தவர். (பேரோத்+ பென்யமீனியரின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.  பேரோத் ஊர்க்காரர்கள் கித்தாயீமுக்கு+ ஓடிப் போனார்கள்; இன்றுவரை அங்கே அன்னியர்களாகக் குடியிருக்கிறார்கள்.)  சவுலின் மகன் யோனத்தானுக்கு,+ இரண்டு காலும் ஊனமான மகன் ஒருவன் இருந்தான்.+ அவன் பெயர் மேவிபோசேத்.+ சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து+ வந்தபோது, அவனுடைய தாதி* அவனைத் தூக்கிக்கொண்டு தப்பித்து ஓடினாள். அவள் பதறியடித்து ஓடியபோது, அவன் கீழே விழுந்து முடமானான்; அப்போது, அவனுக்கு ஐந்து வயது.  பேரோத்தைச் சேர்ந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபும் பாணாவும் இஸ்போசேத்தின் வீட்டுக்கு உச்சிவெயில் நேரத்தில் போனார்கள். அந்த மதிய வேளையில் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.  ரேகாபும் அவனுடைய சகோதரன் பாணாவும்+ கோதுமை எடுக்க வந்தவர்கள்போல் வீட்டுக்குள் நுழைந்து, அவருடைய அடிவயிற்றில் வாளால் குத்திவிட்டு தப்பித்துப் போனார்கள்.  அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, படுக்கையறையில் இருந்த கட்டிலில் அவர் படுத்திருந்தார். அவரைக் குத்திக் கொலை செய்துவிட்டு அவருடைய தலையை வெட்டினார்கள். அந்தத் தலையை எடுத்துக்கொண்டு அரபாவுக்குப் போகும் வழியாக ராத்திரி முழுவதும் நடந்தார்கள்.  பின்பு, இஸ்போசேத்தின்+ தலையை எப்ரோனில் இருந்த தாவீது ராஜாவிடம் கொண்டுவந்து, “எஜமானே, இதோ, உங்களைக் கொல்லத் துடித்த+ உங்கள் எதிரியாகிய சவுலின்+ மகன் இஸ்போசேத்தின் தலை! ராஜாவாகிய உங்களுக்காக சவுலையும் அவருடைய வம்சத்தாரையும் யெகோவா இன்றைக்குப் பழிவாங்கியிருக்கிறார்” என்று சொன்னார்கள்.  ஆனால் தாவீது, பேரோத்தைச் சேர்ந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபையும் அவனுடைய சகோதரன் பாணாவையும் பார்த்து, “எல்லா துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல்+ ஆணையாகச் சொல்கிறேன்,* கேளுங்கள்: 10  எனக்கு நல்ல செய்தி சொல்வதாக நினைத்துக்கொண்டு ஒருவன் என்னிடம் வந்து, ‘சவுல் இறந்துவிட்டார்’+ என்று சொன்னான்; நான் அவனைப் பிடித்து சிக்லாகுவில் கொன்றுபோட்டேன்.+ செய்தி சொன்னவனுக்கு நான் கொடுத்த பரிசு அதுதான்! 11  அப்படியென்றால், தன் வீட்டிலே படுத்திருந்த ஒரு அப்பாவியைக் கொன்றுபோட்ட அயோக்கியர்களான உங்களை மட்டும் சும்மா விட்டுவிடுவேனா? அவருடைய இரத்தத்துக்காக உங்களிடம் கணக்குக் கேட்காமல் இருப்பேனா?+ இந்தப் பூமியிலிருந்தே உங்களை ஒழித்துக்கட்டுகிறேன்” என்று சொன்னார். 12  பின்பு அவர்களைக் கொல்லச் சொல்லி தன் வீரர்களிடம் கட்டளையிட்டார்.+ அந்த வீரர்கள் அவர்களைக் கொன்றுபோட்டார்கள். பின்பு, அவர்களுடைய கைகளையும் கால்களையும் வெட்டி, உடல்களை எப்ரோனிலுள்ள குளத்தின் அருகே தொங்கவிட்டார்கள்.+ ஆனால், இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனிலுள்ள அப்னேரின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அவருடைய கைகள் தளர்ந்துபோயின.”
தாதி என்பவர் குழந்தைகளைக் கவனித்துக்கொள்பவர்.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா