தீமோத்தேயுவுக்கு இரண்டாம் கடிதம் 3:1-17

3  ஆனால் கடைசி நாட்களில்,+ சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்.  ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக,  பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக,  நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக,  பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறவர்களாக* இருப்பார்கள்;+ இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு.  இவர்களில் சிலர், தந்திரமாகக் குடும்பங்களுக்குள் நுழைந்து பலவீனமான பெண்களை வசப்படுத்திக்கொள்கிறார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய பாவங்களிலேயே ஊறிப்போனவர்கள், பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்தவர்கள்;  இவர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருந்தாலும், சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.  யந்நே, யம்பிரே என்பவர்கள் மோசேயை எதிர்த்ததுபோல், இந்தப் பக்திமான்களும் சத்தியத்தை எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்; இவர்கள் முழுக்க முழுக்க புத்திகெட்டுப்போனவர்கள்; விசுவாசத்தைப் பொறுத்தவரை கடவுளால் ஒதுக்கித்தள்ளப்பட்டவர்கள்.  இனியும் இவர்களால் தங்கள் போக்கிலேயே போய்க்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், அந்த இரண்டு பேருடைய முட்டாள்தனத்தைப் போலவே இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லாருக்கும் வெட்டவெளிச்சமாகிவிடும்.+ 10  நீயோ என் போதனையையும், வாழ்க்கைப் பாணியையும்,+ குறிக்கோளையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் நெருக்கமாகப் பின்பற்றி வந்திருக்கிறாய். 11  எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களும் பாடுகளும் அந்தியோகியா,+ இக்கோனியா,+ லீஸ்திரா+ ஆகிய நகரங்களில் எனக்கு வந்த கஷ்டங்களும் உனக்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் நான் சகித்துக்கொண்டேன்; இவை எல்லாவற்றிலிருந்தும் நம் எஜமான் என்னைக் காப்பாற்றினார்.+ 12  உண்மையில், கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்.+ 13  ஆனால், பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் மேலும் மேலும் மோசமாவார்கள்; அவர்கள் ஏமாற்றிக்கொண்டும் ஏமாந்துகொண்டும் இருப்பார்கள்.+ 14  ஆனால், நீ கற்றுக்கொண்ட விஷயங்களை, நம்பிக்கை வைக்கும் விதத்தில் உனக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி;+ அவற்றை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் என்பது உனக்குத் தெரியுமே. 15  அதுவும், பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே+ அறிந்திருக்கிறாய்;+ அவை உனக்கு ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலம் நீ மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்.+ 16  வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.+ அவை கற்றுக்கொடுப்பதற்கும்,+ கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.+ 17  அதனால், கடவுளுடைய ஊழியன் எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு எல்லா திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற்றவனாக இருப்பான்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “கடவுள்பக்தியின் வல்லமையைப் பொய்யாக்குகிறவர்களாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா