தெசலோனிக்கேயருக்கு இரண்டாம் கடிதம் 1:1-12

1  பரலோகத் தகப்பனாகிய கடவுளோடும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஒன்றுபட்டிருக்கிற தெசலோனிக்கேயருடைய சபைக்கு, சில்வானுவோடும்* தீமோத்தேயுவோடும்+ சேர்ந்து பவுல் எழுதுவது:  பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.  சகோதரர்களே, நாங்கள் எப்போதும் உங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்; அப்படிச் செய்வது சரியானதே. ஏனென்றால், உங்கள் விசுவாசம் அதிகமதிகமாக வளர்ந்து வருகிறது; நீங்கள் எல்லாரும் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகிற அன்பும் அதிகமாகி வருகிறது.+  எல்லா துன்புறுத்தல்களையும் கஷ்டங்களையும்* நீங்கள் தாங்கிக்கொண்டு* சகிப்புத்தன்மையையும் விசுவாசத்தையும் காட்டி வருவதால்,+ கடவுளுடைய சபைகளில் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம்.+  கடவுள் நீதியோடு நியாயந்தீர்க்கிறார் என்பதற்கு இது அத்தாட்சியாக இருக்கிறது. இதன் காரணமாக, கடவுளுடைய அரசாங்கத்துக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் கருதப்படுவீர்கள்; இந்த அரசாங்கத்துக்காகத்தான் இப்போது நீங்கள் துன்பங்களை அனுபவிக்கிறீர்கள்.+  கடவுளுடைய இந்த நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனென்றால், உங்களுக்கு உபத்திரவம் கொடுக்கிறவர்களுக்கு அவர் உபத்திரவத்தைக் கொடுப்பார்.+  ஆனால், இப்போது உபத்திரவப்படுகிற உங்களுக்கு, நம் எஜமானாகிய இயேசு ஜுவாலித்து எரிகிற நெருப்புடன் தன்னுடைய வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது,+ எங்களோடு உங்களுக்கும் விடுதலை கொடுப்பார்.+  அப்போது, கடவுளைப் பற்றித் தெரியாதவர்களையும் நம் எஜமானாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் அவர் பழிவாங்குவார்.+  இப்படிப்பட்டவர்கள் நம் எஜமானுக்கு முன்னாலிருந்தும் அவருடைய மகத்தான வல்லமையிலிருந்தும் நீக்கப்பட்டு, நிரந்தர அழிவைத் தண்டனையாகப் பெறுவார்கள்.+ 10  அந்தச் சமயத்தில் அவர் தன்னுடைய பரிசுத்தவான்களோடுகூட மகிமைப்படும்படி வருவார். நாங்கள் கொடுத்த சாட்சியை நீங்கள் விசுவாசித்தது போல விசுவாசிக்கிற எல்லாரும் அந்த நாளில் அவரைப் பார்த்து மலைத்துப்போவார்கள். 11  அதனால், நாங்கள் எப்போதும் உங்களுக்காக ஜெபம் செய்கிறோம். தான் கொடுத்த அழைப்புக்கு நம் கடவுள் உங்களைத் தகுதியுள்ளவர்களாகக் கருதட்டும்;+ தனக்குப் பிரியமான எல்லா நல்ல காரியங்களையும் முழுமையாக நிறைவேற்றட்டும்; விசுவாசத்தால் நீங்கள் செய்து வருகிற வேலையைத் தன்னுடைய வல்லமையால் வெற்றிபெறச் செய்யட்டும். 12  அப்போது, நம்முடைய கடவுளும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவும் கொடுக்கிற அளவற்ற கருணையால் நம் எஜமானாகிய இயேசுவின் பெயர் உங்கள் மூலம் மகிமைப்படும், அவரோடு ஒன்றுபட்டிருக்கிற நீங்களும் மகிமைப்படுவீர்கள்.

அடிக்குறிப்புகள்

சீலா என்றும் அழைக்கப்படுகிறார்.
வே.வா., “உபத்திரவங்களையும்.”
வே.வா., “சகித்துக்கொண்டு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா