2 நாளாகமம் 11:1-23
11 ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தவுடனே, போர்ப் பயிற்சி பெற்ற 1,80,000 வீரர்களை யூதா வம்சத்திலிருந்தும் பென்யமீன் வம்சத்திலிருந்தும்+ ஒன்றுதிரட்டினார். இஸ்ரவேலுடன் போர் செய்து அதை மறுபடியும் தன்னுடைய ஆட்சியின்கீழ் கொண்டுவருவதற்காக அப்படிச் செய்தார்.+
2 அப்போது யெகோவா, தீர்க்கதரிசி* செமாயாவிடம்,+
3 “யூதாவின் ராஜாவான சாலொமோனின் மகன் ரெகொபெயாமிடமும் யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் நீ போய்,
4 ‘உங்கள் சகோதரர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்யக் கூடாது. அவரவர் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போய்விட வேண்டும். ஏனென்றால், நான்தான் இப்படி நடக்க வைத்தேன்’+ என்று யெகோவா சொல்வதாகச் சொல்” என்றார். அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமை எதிர்த்துப் போர் செய்யாமல் திரும்பிப் போனார்கள்.
5 ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்தார், யூதா தேசத்தில் மதில் சூழ்ந்த நகரங்களைக் கட்டினார்.
6 அதாவது பெத்லகேம்,+ ஏத்தாம், தெக்கோவா,+
7 பெத்-சூர், சோகோ,+ அதுல்லாம்,+
8 காத்,+ மரேஷா, சீப்,+
9 அதோராயீம், லாகீஸ்,+ அசெக்கா,+
10 சோரா, ஆயலோன்,+ எப்ரோன்+ ஆகிய நகரங்களைக் கட்டினார்;* மதில் சூழ்ந்த இந்த நகரங்கள் யூதா, பென்யமீன் பகுதிகளில் இருந்தன.
11 மதில் சூழ்ந்த இந்த நகரங்களை அவர் இன்னும் வலுப்படுத்தி, அவற்றை மேற்பார்வை செய்ய படைத் தலைவர்களை நியமித்தார்; உணவுப் பொருள்கள், எண்ணெய், திராட்சமது ஆகியவற்றை அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
12 இந்த எல்லா நகரங்களுக்கும் பெரிய கேடயங்களையும் ஈட்டிகளையும் அனுப்பி வைத்து, அவற்றை மிகவும் வலுப்படுத்தினார். யூதா மக்களையும் பென்யமீன் மக்களையும் அவர் ஆட்சி செய்துவந்தார்.
13 இஸ்ரவேல் எங்கும் இருந்த குருமார்களும் லேவியர்களும் தங்களுடைய பகுதிகளைவிட்டு வந்து ரெகொபெயாம் பக்கம் சேர்ந்துகொண்டார்கள்.
14 லேவியர்கள் தங்களுடைய மேய்ச்சல் நிலங்களையும் நகரங்களையும் விட்டுவிட்டு+ யூதாவுக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்; ஏனென்றால், யெரொபெயாமும் அவருடைய மகன்களும் அவர்களை யெகோவாவின் சேவையிலிருந்து நீக்கியிருந்தார்கள்.+
15 பின்பு யெரொபெயாம், ஆராதனை மேடுகளில் தான் வைத்திருந்த ஆட்டு உருவப் பேய்களுக்கும்*+ கன்றுக்குட்டி சிலைகளுக்கும்+ சேவை செய்ய மற்ற ஆட்களைக் குருமார்களாக+ நியமித்திருந்தார்.
16 இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களையும் சேர்ந்த சிலர், இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைத்தான் வழிபட வேண்டுமென உறுதியாக இருந்தார்கள்; அதனால் குருமார்களையும் லேவியர்களையும் பின்பற்றி, இவர்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்குப் பலி கொடுக்க எருசலேமுக்கு வந்தார்கள்.+
17 யூதாவின் ராஜாவும் சாலொமோனின் மகனுமான ரெகொபெயாமின் ஆட்சிக்கு மூன்று வருஷங்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஏனென்றால், அவர்கள் தாவீதின் வழியிலும் சாலொமோனின் வழியிலும் மூன்று வருஷங்கள் நடந்தார்கள்.
18 பின்பு, ரெகொபெயாம் மகலாத்தைக் கல்யாணம் செய்துகொண்டார்; அவள் தாவீதின் மகனான யெரிமோத்துக்கும் ஈசாயின் பேத்தியும் எலியாபின்+ மகளுமாகிய அபியாயேலுக்கும் பிறந்தவள்.
19 எயூஷ், செமரியா, சாகாம் ஆகியோரை ரெகொபெயாமுக்கு மகலாத் பெற்றாள்.
20 அடுத்து, அப்சலோமின்+ பேத்தி மாக்காளை ரெகொபெயாம் கல்யாணம் செய்துகொண்டார். அபியா,+ அத்தாய், சீசா, செலோமித் ஆகியோரை அவள் பெற்றாள்.
21 ரெகொபெயாமுக்கு 18 மனைவிகளும் 60 மறுமனைவிகளும் இருந்தார்கள்.+ ஆனாலும், அவர்கள் எல்லாரையும்விட அப்சலோமின் பேத்தி மாக்காளைத்தான் அவர் அதிகமாக நேசித்தார். அவருக்கு 28 மகன்களும் 60 மகள்களும் இருந்தார்கள்.
22 தனக்கு அடுத்து மாக்காளின் மகன் அபியாவை ராஜாவாக்க வேண்டுமென்று ரெகொபெயாம் ஆசைப்பட்டார்; அதனால், தன்னுடைய எல்லா மகன்களுக்கும் அவரைத் தலைவராக ஆக்கினார்.
23 அதோடு, புத்திசாலித்தனமாகத் தன்னுடைய மகன்களில் சிலரை யூதா, பென்யமீன் பகுதிகளில் இருந்த மதில் சூழ்ந்த நகரங்கள்+ எல்லாவற்றுக்கும் அனுப்பிவிட்டார்; அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் ஏராளமாக வழங்கினார், அவர்களுக்கு நிறைய பெண்களைக் கல்யாணம் செய்து வைத்தார்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “உண்மைக் கடவுளின் மனிதரான.”
^ வே.வா., “வலுப்படுத்தினார்.”
^ நே.மொ., “வெள்ளாடுகளுக்கும்.”