2 நாளாகமம் 12:1-16

12  ரெகொபெயாமின் ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டு,+ அவர் வலிமையுள்ள ராஜாவாக ஆனவுடனே யெகோவாவின் சட்டத்தை ஒதுக்கித்தள்ளினார்;+ அவருடன் இருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவரைப் போலவே நடந்துகொண்டார்கள்.  ரெகொபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவான சீஷாக்+ எருசலேமை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாததால்தான் இப்படி நடந்தது.  சீஷாக் 1,200 ரதங்களோடும் 60,000 குதிரைவீரர்களோடும் வந்தான்; லீபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியர்கள் ஆகிய எண்ணற்ற வீரர்களையும் எகிப்திலிருந்து+ திரட்டிக்கொண்டு வந்தான்.  யூதாவின் மதில் சூழ்ந்த நகரங்களைக் கைப்பற்றிய பின்பு, கடைசியில் எருசலேமைத் தாக்க வந்தான்.  சீஷாக்குக்குப் பயந்து எருசலேமில் கூடியிருந்த யூதாவின் அதிகாரிகளையும் ரெகொபெயாமையும் சந்திக்க செமாயா+ தீர்க்கதரிசி வந்தார். அவர்களிடம், “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் என்னை ஒதுக்கிவிட்டீர்கள்; அதனால் நானும் உங்களை ஒதுக்கிவிட்டு,+ சீஷாக்கின் கையில் கொடுத்துவிட்டேன்’” என்று சொன்னார்.  அதைக் கேட்டதும் இஸ்ரவேலின் அதிகாரிகளும் ராஜாவும் தாழ்மையுடன் நடந்துகொண்டு,+ “யெகோவா நீதியுள்ளவர்” என்று சொன்னார்கள்.  அவர்கள் தாழ்மையாக நடந்துகொண்டதை யெகோவா கவனித்தார்; அதனால் செமாயாவிடம், “அவர்கள் தாழ்மையாக நடந்துகொண்டார்கள்; அதனால் அவர்களை அழிக்க மாட்டேன்,+ சீக்கிரத்தில் அவர்களைக் காப்பாற்றுவேன். சீஷாக்கைப் பயன்படுத்தி என் கோபத்தை எருசலேம்மீது கொட்ட மாட்டேன்.  ஆனால், அவர்கள் அவனுக்குச் சேவை செய்யும் நிலைமை வரும். அப்போதுதான், எனக்குச் சேவை செய்வதற்கும் மற்ற தேசத்து ராஜாக்களுக்கு* சேவை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வார்கள்” என்று யெகோவா சொன்னார்.  எகிப்தின் ராஜாவான சீஷாக் எருசலேம்மீது படையெடுத்து வந்தான்; யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும்+ அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டுபோனான். சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கக் கேடயங்கள் உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனான்.+ 10  அதனால், ரெகொபெயாம் ராஜா அந்தத் தங்கக் கேடயங்களுக்குப் பதிலாக செம்புக் கேடயங்களைச் செய்து, அரண்மனை வாசலைக் காக்கிற காவலாளிகளின் தலைவர்களிடம் ஒப்படைத்தார். 11  யெகோவாவின் ஆலயத்துக்கு ராஜா போகும்போதெல்லாம் காவலாளிகள் அவற்றை எடுத்துக்கொண்டு அவருடன் போவார்கள். பின்பு, அவற்றைக் காவலாளிகளின் அறையில் திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள். 12  ராஜா தாழ்மையாக நடந்துகொண்டதால், அவர்மீது யெகோவாவுக்கு இருந்த கோபம் தணிந்தது;+ யூதா மக்களும் சில நல்ல காரியங்களைச் செய்தார்கள்;+ அதனால், கடவுள் அவர்களை அடியோடு அழிக்கவில்லை.+ 13  ரெகொபெயாம் ராஜா எருசலேமில் தன் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டு தொடர்ந்து ஆட்சி செய்தார். ராஜாவானபோது அவருக்கு 41 வயது; யெகோவா தன்னுடைய பெயரை நிலைநாட்டுவதற்காக இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் தேர்ந்தெடுத்திருந்த எருசலேம் நகரத்திலிருந்து 17 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் நாமாள், அவள் ஓர் அம்மோனியப் பெண்.+ 14  யெகோவாவைத் தேட வேண்டும் என்று ரெகொபெயாம் தன் இதயத்தில் உறுதியான தீர்மானம் எடுக்காததால்,+ மோசமான காரியங்களைச் செய்தார். 15  ஆரம்பம்முதல் முடிவுவரை ரெகொபெயாம் செய்த காரியங்களெல்லாம், செமாயா+ தீர்க்கதரிசி எழுதிய வம்சாவளிப் பதிவிலும் தரிசனக்காரரான இத்தோ+ எழுதிய வம்சாவளிப் பதிவிலும் இருக்கிறது. ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையே எப்போதும் போர் நடந்துகொண்டிருந்தது.+ 16  ரெகொபெயாம் இறந்ததும்,* அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு அவருடைய மகன் அபியா+ ராஜாவானார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மற்ற ராஜ்யங்களுக்கு.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா