2 நாளாகமம் 13:1-22

13  யெரொபெயாம் ராஜா ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில், அபியா யூதாவின் ராஜாவானார்.+  அவர் மூன்று வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்; அவருடைய அம்மா பெயர் மிகாயா,+ அவள் கிபியாவைச்+ சேர்ந்த ஊரியேலின் மகள். அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையே போர் நடந்தது.+  போர்ப் பயிற்சி பெற்ற+ 4,00,000 மாவீரர்களுடன் அபியா படையெடுத்துப் போனார். அதேபோல், போர்ப் பயிற்சி பெற்ற 8,00,000 மாவீரர்களுடன் யெரொபெயாம் அவரை எதிர்த்து வந்து அணிவகுத்து நின்றார்.  அப்போது, எப்பிராயீம் மலைப்பகுதியில் இருக்கிற செமராயிம் என்ற மலையில் அபியா நின்றுகொண்டு, “யெரொபெயாமே, இஸ்ரவேலர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.  இஸ்ரவேலின் கடவுளான யெகோவா தாவீதோடு நிரந்தர ஒப்பந்தம்*+ செய்து, இஸ்ரவேலை என்றென்றும் ஆளுகிற அதிகாரத்தை+ அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும்+ கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா?  ஆனால், நேபாத்தின் மகனும் சாலொமோனின் ஊழியனுமாகிய இந்த யெரொபெயாம்+ தன் எஜமானுக்கு எதிராகக் கலகம் செய்தான்.+  வேலைவெட்டி இல்லாத உதவாக்கரைகள் அவன் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். சாலொமோனின் மகன் ரெகொபெயாம் தைரியமோ அனுபவமோ இல்லாத இளைஞனாக இருந்த சமயத்தில், அந்தக் கலகக்காரர்களின் கை ஓங்கியது; ரெகொபெயாமால் அவர்களை அடக்க முடியவில்லை.  இப்போது உங்களிடம் நிறைய பேர் இருக்கிறார்கள், யெரொபெயாம் செய்து வைத்த தங்கக் கன்றுக்குட்டிகளைத் தெய்வமாக+ வழிபட்டுக்கொண்டிருக்கிறீர்கள், அதனால் தாவீதின் வாரிசுகள் கையில் இருக்கிற யெகோவாவின் ஆட்சியையே எதிர்த்து நிற்க முடியுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.  யெகோவா நியமித்த ஆரோன் வம்சத்து குருமார்களையும் லேவியர்களையும் துரத்திவிட்டு,+ மற்ற தேசத்து மக்களைப் போல் நீங்களே குருமார்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள்.+ ஒரு இளம் காளையையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தவனையெல்லாம் பொய் தெய்வங்களுக்குப் பூஜை செய்கிற குருமாராக்கிவிட்டீர்கள். 10  ஆனால், எங்களுக்கு யெகோவாதான் கடவுள்,+ அவரைவிட்டு நாங்கள் விலகவில்லை; ஆரோனின் வம்சத்தில் வந்த எங்கள் குருமார்கள் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள், லேவியர்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். 11  தினமும் காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குத் தகன பலிகளைக் கொடுத்து,+ நறுமண தூபம் காட்டுகிறார்கள்;+ சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட மேஜையில் படையல் ரொட்டிகளை வைக்கிறார்கள்;+ தினமும் மாலையில் தங்க விளக்குத்தண்டில்+ இருக்கிற அகல் விளக்குகளை ஏற்றுகிறார்கள்;+ இப்படி, எங்கள் கடவுளான யெகோவா கொடுத்த பொறுப்புகளை நாங்கள் கண்ணும்கருத்துமாகச் செய்துவருகிறோம். ஆனால், நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். 12  இதோ பாருங்கள், உண்மைக் கடவுள் எங்களுடன் இருக்கிறார், எங்களை வழிநடத்துகிறார்; உங்களுக்கு எதிராக எக்காளங்களை ஊதி, போர் முழக்கம் செய்ய குருமார்கள் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் வீரர்களே, உங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்கு எதிராகப் போர் செய்யாதீர்கள், அப்படிச் செய்தால் தோற்றுதான் போவீர்கள்”+ என்று சொன்னார். 13  ஆனால் யெரொபெயாம், யூதா வீரர்களைப் பின்பக்கத்திலிருந்து பதுங்கித் தாக்குவதற்கு ஒரு படையை ஏற்பாடு செய்திருந்தார்; அவரும் அவருடன் இருந்த படைவீரர்களும் முன்பக்கத்திலிருந்து தாக்க வந்தார்கள். 14  யூதா வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் படைகள் சூழ்ந்திருப்பதைக் கண்டார்கள். அதனால், அவர்கள் உதவிக்காக யெகோவாவிடம் கூக்குரலிட்டார்கள்;+ அப்போது, குருமார்கள் சத்தமாக எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தார்கள். 15  யூதா வீரர்கள் போர் முழக்கம் செய்தார்கள். அப்போது, யெரொபெயாமும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் அபியாவிடமும் யூதா வீரர்களிடமும் தோற்றுப்போகும்படி உண்மைக் கடவுள் செய்தார். 16  இஸ்ரவேல் வீரர்கள் யூதா வீரர்களிடமிருந்து தப்பித்து தலைதெறிக்க ஓடினார்கள். அவர்களை யூதா வீரர்களின் கையில் கடவுள் கொடுத்தார். 17  அபியாவும் அவருடைய வீரர்களும் ஏராளமான இஸ்ரவேல் வீரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே இருந்தார்கள். போர்ப் பயிற்சி பெற்ற 5,00,000 இஸ்ரவேல் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 18  இப்படி, இஸ்ரவேல் வீரர்கள் அன்றைக்குத் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால், யூதா வீரர்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை நம்பியிருந்ததால் ஜெயித்தார்கள்.+ 19  யெரொபெயாமை அபியா விடாமல் துரத்திக்கொண்டே போய், அவரிடமிருந்து நகரங்களைக் கைப்பற்றினார்; அதாவது, பெத்தேலையும்+ அதன் சிற்றூர்களையும்,* எஷானாவையும் அதன் சிற்றூர்களையும், எப்பெரேனையும்+ அதன் சிற்றூர்களையும் கைப்பற்றினார். 20  அபியாவின் ஆட்சிக்காலம் முழுவதிலும் யெரொபெயாமால் மறுபடியும் தலைதூக்கவே முடியவில்லை. பின்பு, யெரொபெயாமை யெகோவா தண்டித்தார், அதனால் அவர் செத்துப்போனார்.+ 21  அபியாவின் ஆட்சி நாளுக்கு நாள் வலிமையடைந்தது. காலப்போக்கில், அவர் 14 பெண்களைக் கல்யாணம் செய்தார்,+ அவருக்கு 22 மகன்களும் 16 மகள்களும் பிறந்தார்கள். 22  அபியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களும், அவர் செய்த செயல்களும் அவர் சொன்ன வார்த்தைகளும் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில்*+ எழுதப்பட்டிருக்கின்றன.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உப்பு ஒப்பந்தம்.”
வே.வா., “அதைச் சுற்றியுள்ள ஊர்களையும்.”
வே.வா., “விளக்கவுரையில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா