2 நாளாகமம் 22:1-12
22 பின்பு, எருசலேம் மக்கள் யோராமின் கடைசி மகனான அகசியாவை அடுத்த ராஜாவாக்கினார்கள். ஏனென்றால், அரேபியர்களுடன் வந்த கொள்ளைக்கூட்டத்தார் யூதாவின் முகாமைத் தாக்கி, அவருடைய மூத்த மகன்கள் எல்லாரையும் கொன்றுபோட்டிருந்தார்கள்.+ அதனால், யோராமின் கடைசி மகனான அகசியா யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.+
2 ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்,+ இவள் உம்ரியின்+ பேத்தி.
3 ஆகாபின் வீட்டாரைப் போலவே+ அகசியா நடந்துகொண்டார்; மோசமான வழியில் நடப்பதற்கு அவருடைய அம்மா அவருக்கு ஆலோசனை கொடுத்தாள்;
4 அவருடைய அப்பா இறந்த பின்பு ஆகாபின் வீட்டார் அவருக்கு ஆலோசகர்களாக ஆனார்கள். அதனால், அவர்களைப் போலவே யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களை அகசியா செய்துவந்தார். அவருடைய அழிவுக்கு இதுதான் காரணம்.
5 அவர்களுடைய பேச்சைக் கேட்டு, இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபின் மகன் யோராமுடன் சேர்ந்து இவரும் போருக்குப் போனார். சீரியாவின் ராஜாவான அசகேலை+ எதிர்த்துப் போர் செய்ய ராமோத்-கீலேயாத்துக்கு+ யோராமுடன் போனார். அந்தப் போரில் வில்வீரர்கள் அம்பு எறிந்து யோராமைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள்.
6 சீரியாவின் ராஜாவான அசகேலை எதிர்த்து ராமாவில் போர் செய்தபோது யோராம் காயமடைந்ததால், குணமாவதற்காக யெஸ்ரயேலுக்குத்+ திரும்பிப் போனார்.+
ஆகாபின் மகனான யோராம்+ காயமடைந்ததால்*+ அவரைப் பார்க்க யூதாவின் ராஜாவும் யோராமின்+ மகனுமான அகசியா* யெஸ்ரயேலுக்குப் போனார்.
7 யோராமைப் பார்க்க அகசியா போயிருந்த சமயத்தில் கடவுள் அவருக்கு அழிவைக் கொண்டுவந்தார். அகசியா அங்கே போயிருந்தபோது, நிம்சியின் பேரனான யெகூவைப்+ பார்ப்பதற்காக யோராமுடன் போனார். யெகோவா ஆகாபின் வீட்டாரை அழிப்பதற்காக யெகூவை அபிஷேகம் செய்திருந்தார்.+
8 ஆகாபின் வீட்டாரை யெகூ ஒழித்துக்கட்ட ஆரம்பித்தபோது, யூதாவிலிருந்த அதிகாரிகளையும் அகசியாவின் சகோதரர்களின் மகன்களையும் பார்த்து அவர்களைக் கொன்றுபோட்டார்.+ இவர்கள் அகசியாவின் அமைச்சர்களாக இருந்தார்கள்.
9 பின்பு, அவர் அகசியாவைத் தேடினார். சமாரியாவில் ஒளிந்துகொண்டிருந்த அகசியாவைப் பிடித்து யெகூவிடம் கொண்டுவந்தார்கள். பின்பு, அவரைக் கொன்றுபோட்டார்கள். “என்ன இருந்தாலும், இவர் யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கிய யோசபாத்தின் பேரன், இல்லையா?”+ என்று சொல்லி அவரை அடக்கம் செய்தார்கள்.+ அகசியாவுக்கு அடுத்தபடியாகத் தேசத்தை ஆட்சி செய்யும் அளவுக்கு அவருடைய குடும்பத்தில் வேறு யாருமே இருக்கவில்லை.
10 அகசியாவின் அம்மா அத்தாலியாள்,+ தன்னுடைய மகன் அகசியா இறந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதும், யூதாவின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகள் எல்லாரையும் கொன்றுபோட்டாள்.+
11 ஆனால், யோராம் ராஜாவின்+ மகளான யோசேபியாத் அகசியாவின் மகன் யோவாசைக்+ காப்பாற்றினாள்; (அவள் குருவாகிய யோய்தாவின்+ மனைவி, அகசியாவின் சகோதரி.) மற்ற இளவரசர்கள் கொல்லப்படவிருந்த சமயத்தில், யாருக்கும் தெரியாமல் யோவாசை மட்டும் அங்கிருந்து தூக்கிக்கொண்டு போனாள்; பின்பு, அவனையும் அவனுடைய தாதியையும்* உட்புற படுக்கையறையில் ஒளித்து வைத்தாள். அவனை எப்படியோ அத்தாலியாளின் கண்ணில் படாமல் மறைத்து வைத்தார்கள்; அதனால், யோவாசின் உயிர் தப்பியது.+
12 உண்மைக் கடவுளின் ஆலயத்தில் அவனை ஒளித்து வைத்திருந்தார்கள். அவன் ஆறு வருஷங்களுக்கு அவர்களோடு இருந்தான். அந்தச் சமயத்தில் அத்தாலியாள் அந்தத் தேசத்தை ஆட்சி செய்துவந்தாள்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “வியாதிப்பட்டதால்.”
^ எபிரெய கையெழுத்து பிரதிகள் சிலவற்றில் “அசரியா” என்று இருக்கிறது.
^ தாதி என்பவர் குழந்தைகளைக் கவனித்துக்கொள்பவர்.