2 நாளாகமம் 24:1-27

24  யோவாஸ் ராஜாவானபோது அவருக்கு ஏழு வயது.+ அவர் 40 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா, பெயெர்-செபாவைச்+ சேர்ந்த சிபியாள்.  குருவாகிய யோய்தா உயிரோடு இருந்த காலமெல்லாம் யோவாஸ் யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார்.+  யோய்தா இரண்டு பெண்களை யோவாசுக்குக் கல்யாணம் செய்து வைத்தார். அவருக்கு மகன்களும் மகள்களும் பிறந்தார்கள்.  யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்க+ வேண்டுமென்று யோவாஸ் மனதார ஆசைப்பட்டார்.  அதனால் குருமார்களையும் லேவியர்களையும் அவர் ஒன்றுகூட்டி, “உங்கள் கடவுளின் ஆலயத்தை ஒவ்வொரு வருஷமும் பழுதுபார்க்க வேண்டும்.+ அதனால், யூதாவில் இருக்கிற எல்லா நகரங்களுக்கும் போய், இஸ்ரவேல் மக்கள் எல்லாரிடமும் நன்கொடை வாங்குங்கள். தாமதிக்காமல் உடனே செய்யுங்கள்” என்று சொன்னார். ஆனால், லேவியர்கள் அதை உடனடியாகச் செய்யவில்லை.+  அதனால் தலைமைக் குருவான யோய்தாவை ராஜா கூப்பிட்டு,+ “சாட்சிக் கூடாரத்துக்காக+ இஸ்ரவேல் சபையார் புனித வரியைக் கட்ட வேண்டுமென்று யெகோவாவின் ஊழியரான மோசே கட்டளையிட்டிருந்தார், இல்லையா?+ பிறகு ஏன் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற மக்களிடமிருந்து புனித வரியை வாங்குவதற்காக லேவியர்களை அனுப்பவில்லை?  அந்தப் பொல்லாத அத்தாலியாளின் மகன்கள்+ யெகோவாவின் ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து,+ அங்கிருந்த பரிசுத்த பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்து பாகாலை வணங்குவதற்காகப் பயன்படுத்தியது உங்களுக்கே தெரியும்” என்று சொன்னார்.  பின்பு, ராஜாவின் கட்டளைப்படி, ஒரு பெட்டியைச்+ செய்து யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலுக்கு வெளியே வைத்தார்கள்.+  இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது கடவுளின் ஊழியரான மோசே கட்டளையிட்ட புனித வரியை+ யெகோவாவுக்குக் கொடுக்கச் சொல்லி யூதா எங்கும் எருசலேம் எங்கும் அறிவிப்பு செய்யப்பட்டது. 10  அதைக் கேட்டு எல்லா மக்களும் எல்லா அதிகாரிகளும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.+ பெட்டி நிரம்பி வழியும்வரை* காணிக்கைகளைக் கொண்டுவந்து அதில் போட்டுக்கொண்டே இருந்தார்கள். 11  அந்தப் பெட்டியில் நிறைய பணம் சேர்ந்துவிட்டதைப் பார்க்கும்போது லேவியர்கள் அதை ராஜாவிடம் கொண்டுவருவார்கள். பின்பு, ராஜாவின் செயலாளரும் முதன்மை குருவின் உதவியாளரும் பணத்தை வெளியே எடுத்துவிட்டு,+ அந்தப் பெட்டியைக் கொண்டுபோய் பழையபடி அதன் இடத்தில் வைத்துவிடுவார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் செய்து, ஏராளமான பணத்தைச் சேர்த்தார்கள். 12  ராஜாவும் யோய்தாவும் யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்கிறவர்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தார்கள். இவர்கள், யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிப்பதற்காகக் கற்களை வெட்டிச் செதுக்குகிறவர்களையும் கைத்தொழிலாளிகளையும் வேலைக்கு வைத்தார்கள்.+ அதோடு, இரும்பையும் செம்பையும் வைத்து வேலை செய்கிறவர்களையும் யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்கிற வேலைக்காக நியமித்தார்கள். 13  மேற்பார்வை செய்கிறவர்கள் வேலையை ஆரம்பித்து வைத்தார்கள். அவர்களுடைய மேற்பார்வையில் பழுதுபார்க்கும் வேலை நன்றாக முன்னேறியது. உண்மைக் கடவுளின் ஆலயத்தை உறுதியாகக் கட்டி, பழைய நிலைக்குக் கொண்டுவந்தார்கள். 14  ஆலய வேலை முடிந்தவுடன், மிச்சமிருந்த பணத்தை ராஜாவிடமும் யோய்தாவிடமும் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் அந்தப் பணத்தை வைத்து யெகோவாவின் ஆலயத்துக்குத் தேவையான சாமான்களைச் செய்தார்கள். ஆலய வேலைக்கும் பலி செலுத்துவதற்கும் தேவையான சாமான்கள், கிண்ணங்கள், வெள்ளிச் சாமான்கள், தங்கச் சாமான்கள் ஆகியவற்றைச் செய்தார்கள்.+ யோய்தா உயிரோடு இருந்தவரை, யெகோவாவின் ஆலயத்தில் தவறாமல் தகன பலிகளைக் கொடுத்துவந்தார்கள்.+ 15  யோய்தா பல வருஷங்கள் திருப்தியாக வாழ்ந்து, வயதாகி கடைசியில் இறந்துபோனார். அப்போது, அவருக்கு 130 வயது. 16  அவர் இஸ்ரவேல் மக்களுக்கும் உண்மைக் கடவுளுக்கும் அவருடைய ஆலயத்துக்கும் நிறைய நல்லது செய்திருந்தார்.+ அதனால் ‘தாவீதின் நகரத்தில்,’ ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.+ 17  யோய்தா இறந்த பிறகு, யூதாவிலிருந்த அதிகாரிகள் ராஜாவிடம் வந்து அவர் முன்னால் தலைவணங்கினார்கள். ராஜா அவர்கள் பேச்சைக் கேட்டார். 18  மக்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவின் ஆலயத்தை அலட்சியம் செய்துவிட்டு, பூஜைக் கம்பங்களையும்* சிலைகளையும் வணங்க ஆரம்பித்தார்கள். இப்படிப் பாவம் செய்ததால் யூதாமீதும் எருசலேம்மீதும் கடவுள் மிகவும் கோபப்பட்டார். 19  அவர்கள் தன்னிடம் திரும்பிவருவதற்காக யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகளை மீண்டும் மீண்டும் அனுப்பினார். அவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்தார்கள். ஆனால், மக்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.+ 20  குருவாகிய யோய்தாவின்+ மகன் சகரியாமீது கடவுளுடைய சக்தி வந்தது. அப்போது அவர் ஓர் உயரமான இடத்தில் நின்றுகொண்டு மக்களைப் பார்த்து, “உண்மைக் கடவுள் சொல்வது என்னவென்றால், ‘ஏன் யெகோவாவின் கட்டளைகளை மீறி நடக்கிறீர்கள்? அவருடைய கட்டளைகளை மீறினால் நீங்கள் செய்கிற எதிலும் வெற்றி கிடைக்காது. நீங்கள் யெகோவாவை ஒதுக்கிவிட்டீர்கள், அதனால் அவரும் உங்களை ஒதுக்கிவிடுவார்’”+ என்று சொன்னார். 21  அதனால், சகரியாவுக்கு எதிராக அவர்கள் சதித்திட்டம் போட்டார்கள்.+ ராஜாவின் கட்டளைப்படி, யெகோவாவுடைய ஆலயத்தின் பிரகாரத்தில் அவரைக் கல்லெறிந்து கொன்றார்கள்.+ 22  யோய்தா காட்டிய மாறாத அன்பை நினைத்துப் பார்க்காமல் அவருடைய மகன் சகரியாவை யோவாஸ் ராஜா கொன்றுபோட்டார். சகரியா சாகும்போது, “இதற்கெல்லாம் யெகோவா உங்களுக்குச் சரியான தண்டனை கொடுப்பார்”+ என்று சொல்லிவிட்டு இறந்துபோனார். 23  அடுத்த வருஷத்தின் ஆரம்பத்தில் யோவாசுக்கு எதிராக சீரியர்கள் படையெடுத்து வந்து, யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள்.+ எல்லா அதிகாரிகளையும் கொன்றுபோட்டார்கள்.+ அங்கிருந்து கொள்ளையடித்த எல்லா பொருள்களையும் தமஸ்கு ராஜாவுக்கு அனுப்பி வைத்தார்கள். 24  சீரியர்கள் கொஞ்சம் வீரர்களோடு படையெடுத்து வந்தபோதிலும், யூதாவின் மிகப் பெரிய படையைத் தோற்கடித்தார்கள்.+ மக்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை அலட்சியம் செய்ததால், யெகோவா அவர்களைத் தோற்றுப்போக வைத்தார். சீரியர்கள் யோவாசுக்குத் தண்டனை கொடுத்தார்கள். 25  (அவர்களுடைய தாக்குதலால் யோவாஸ் பயங்கரமாகக் காயமடைந்திருந்தார்*), அவர்கள் அங்கிருந்து திரும்பிப் போனதும் அவருடைய ஊழியர்களே அவருக்கு எதிராகச் சதித்திட்டம் போட்டார்கள். ஏனென்றால், அவர் குருவாகிய யோய்தாவின்+ மகன்களுடைய* இரத்தத்தைச் சிந்தியிருந்தார். அவருடைய படுக்கையிலேயே அவரைப் படுகொலை செய்தார்கள்.+ அவர் இறந்ததும் ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை.+ 26  அம்மோனியப் பெண்ணான சிமியாத்தின் மகன் சாபாத்தும் மோவாபியப் பெண்ணான சிம்ரீத்தின் மகன் யெகோஸபாத்தும்தான் அவருக்கு எதிராகச் சதி செய்தவர்கள்.+ 27  யோவாசின் மகன்களைப் பற்றியும், அவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்புகளைப்+ பற்றியும், உண்மைக் கடவுளின் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதைப்+ பற்றியும் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவருக்குப் பிறகு, அவருடைய மகன் அமத்சியா ராஜாவானார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “எல்லாரும் கொடுத்து முடிக்கும்வரை.”
வே.வா., “நிறைய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.”
வே.வா., “மகனுடைய.” அநேகமாக, மரியாதைக்காகப் பன்மையில் சொல்லப்பட்டிருக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா