2 நாளாகமம் 31:1-21

31  பண்டிகை முடிந்தவுடன், அங்கே வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் யூதா நகரங்களுக்குப் போய் அங்கிருந்த பூஜைத் தூண்களை நொறுக்கினார்கள்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டினார்கள்;+ யூதா, பென்யமீன் முழுவதிலும் இருந்த ஆராதனை மேடுகளையும்+ பலிபீடங்களையும் அழித்தார்கள்.+ அதுமட்டுமல்ல, எப்பிராயீமிலும் மனாசேயிலும்+ இருந்தவற்றையும் அழித்தார்கள். எல்லாவற்றையும் அடியோடு அழித்த பின்பு, இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவரவருடைய நகரங்களுக்குத் திரும்பினார்கள்.  குருமார்களும் லேவியர்களும் தங்களுடைய வேலைகளைச் செய்வதற்காக+ எசேக்கியா அவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்தார்.+ தகன பலிகள் மற்றும் சமாதான பலிகள் கொடுப்பதற்கும், யெகோவாவுடைய ஆலயத்தின் பிரகாரங்களில் வேலை செய்வதற்கும், அங்கிருக்கிற வாசல்களில் நன்றி சொல்லி அவரைப் புகழ்வதற்கும் அவர்களை நியமித்தார்.+  யெகோவாவின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்தபடி, தகன பலிகளுக்காகவும்+ காலையிலும் மாலையிலும் செலுத்த வேண்டிய பலிகளுக்காகவும்+ ஓய்வுநாளிலும்+ மாதப்பிறப்பு நாளிலும்+ பண்டிகை நாட்களிலும்+ செலுத்த வேண்டிய தகன பலிகளுக்காகவும் ராஜா தன்னுடைய சொத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுத்தார்.  அதோடு, குருமார்களும் லேவியர்களும் யெகோவாவின் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதற்கு உதவியாக* அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்கச் சொல்லி எருசலேமில் குடியிருந்த மக்களுக்குக் கட்டளையிட்டார்.+  ராஜாவின் கட்டளையைக் கேட்டதுமே இஸ்ரவேலர்கள் தங்களுடைய முதல் அறுவடையில் கிடைத்த தானியத்தையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும்,+ தேனையும், நிலத்தில் விளைந்த எல்லாவற்றையும் ஏராளமாகக் கொண்டுவந்தார்கள்.+ எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தைத் தாராளமாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.+  யூதா நகரங்களில் குடியிருந்த இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும்கூட ஆடுமாடுகளில் பத்தில் ஒன்றைக் கொண்டுவந்தார்கள். தங்கள் கடவுளான யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட* பரிசுத்த பொருள்களில் பத்திலொரு பாகத்தைக்+ கொண்டுவந்து குவியல் குவியலாகக் குவித்து வைத்தார்கள்.  மூன்றாம் மாதத்தில்+ காணிக்கைகளைக் கொண்டுவந்து குவிக்க ஆரம்பித்து, ஏழாம் மாதத்தில்+ கொடுத்து முடித்தார்கள்.  குவித்து வைக்கப்பட்டிருந்த காணிக்கைகளைப் பார்த்தபோது எசேக்கியாவும் அதிகாரிகளும் யெகோவாவைப் புகழ்ந்தார்கள், அவருடைய மக்களான இஸ்ரவேலர்களை ஆசீர்வதித்தார்கள்.  காணிக்கைகளைப் பற்றிக் குருமார்களிடமும் லேவியர்களிடமும் எசேக்கியா விசாரித்தார். 10  அதற்கு சாதோக்கின் வம்சத்தில் வந்த முதன்மை குரு அசரியா, “யெகோவாவின் ஆலயத்துக்குக் காணிக்கை கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து+ மக்கள் திருப்தியாகச் சாப்பிடுகிறார்கள், சாப்பிட்டதுபோக இன்னும் ஏராளமாகவும் இருக்கிறது. யெகோவா தன்னுடைய மக்களை ஆசீர்வதித்திருக்கிறார், அதனால்தான் இவ்வளவு மீதியாக இருக்கிறது”+ என்று சொன்னார். 11  எசேக்கியா அதைக் கேட்டதும் யெகோவாவின் ஆலயத்தில் சேமிப்பு அறைகளை* தயார்படுத்தச் சொன்னார்.+ அவர் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள். 12  காணிக்கைகளையும் பத்திலொரு பாகத்தையும்*+ பரிசுத்த பொருள்களையும் தவறாமல் கொண்டுவந்தார்கள். இவை எல்லாவற்றையும் மேற்பார்வை செய்ய லேவியரான கொனனியா நியமிக்கப்பட்டார். அவருடைய சகோதரன் சீமேயி அவருக்குக் கீழே அதிகாரியாக இருந்தார். 13  கொனனியாவுக்கும் அவருடைய சகோதரர் சீமேயிக்கும் உதவியாக யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், யெரிமோத், யோசபத், ஏலியேல், இஸ்மகியா, மகாத், பெனாயா ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். எசேக்கியா ராஜாவின் ஆணைப்படி, இவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள். அசரியா உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளராக இருந்தார். 14  மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு உண்மைக் கடவுளுக்குக் கொடுத்த காணிக்கைகளைக்+ கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கிழக்கு வாசலைக் காவல்காக்கும் இம்னாவின் மகன் கோரேவுக்குக் கொடுக்கப்பட்டது.+ யெகோவாவுக்காகக் கொடுக்கப்பட்ட காணிக்கையையும்+ மகா பரிசுத்த பொருள்களையும் அவர் பிரித்துக் கொடுத்தார்.+ 15  ஏதேன், மினியாமீன், யெசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் அவருக்குக் கீழே வேலை பார்த்தார்கள். குருமார்களின் நகரங்களில்+ இருந்துகொண்டு தங்களுடைய பிரிவைச் சேர்ந்த+ பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டிய நம்பகமான பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 16  அதோடு, வம்சாவளிப் பட்டியலில் இருந்தவர்களுக்கும் அந்தப் பொருள்களை அவர்கள் பிரித்துக் கொடுத்தார்கள். அதாவது, யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்வதற்காகவும் தங்களுடைய பிரிவுகளுக்குரிய வேலைகளைச் செய்வதற்காகவும் வந்த ஆட்களுக்கும், மூன்று வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய அவர்களுடைய மகன்களுக்கும் அவற்றைக் கொடுத்தார்கள். 17  குருமார்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின்படி+ வம்சாவளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். அதேபோல், இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள லேவியர்கள்+ தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின்படியும் தங்களுடைய பிரிவுக்குக்+ கொடுக்கப்பட்ட வேலையின்படியும் வம்சாவளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். 18  வம்சாவளிப் பட்டியலில் லேவியர்களுடைய மனைவிகள், சின்னப் பிள்ளைகள், மகன்கள், மகள்கள் என எல்லாருடைய பெயரையும் பதிவு செய்திருந்தார்கள். லேவியர்களுடைய குடும்பங்கள் எல்லாமே பதிவு செய்யப்பட்டன. ஏனென்றால், நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட பரிசுத்த வேலையைச் செய்வதற்காக லேவியர்கள் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்.* 19  நகரங்களுக்கு வெளியே* குடியிருந்த ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்;+ குருமார்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் எல்லாருக்கும், லேவியர்களின் வம்சாவளிப் பட்டியலில் இருந்த எல்லாருக்கும் உணவுப் பொருள்களைப் பிரித்துக் கொடுக்க எல்லா நகரங்களிலும் ஆட்கள் பேர்பேராக நியமிக்கப்பட்டார்கள். 20  யூதா முழுவதும் எசேக்கியா இப்படிச் செய்தார். தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடித்த நல்ல காரியங்களைச் செய்துவந்தார். அவருக்கு உண்மையாக நடந்துகொண்டார். 21  கடவுளை வணங்குவது சம்பந்தமாக எதைச் செய்தாலும், உண்மைக் கடவுளின் ஆலய வேலையைச்+ செய்வதாக இருந்தாலும் சரி, திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் அவர் முழு இதயத்தோடு செய்ததால் வெற்றி பெற்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெகோவாவின் சட்டத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கு உதவியாக.”
நே.மொ., “புனிதமாக்கப்பட்ட.”
வே.வா., “சாப்பாட்டு அறைகளை.”
வே.வா., “தசமபாகத்தையும்.”
நே.மொ., “புனிதப்படுத்தியிருந்தார்கள்.”
நே.மொ., “மேய்ச்சல் நிலங்களில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா