2 நாளாகமம் 8:1-18
8 யெகோவாவின் ஆலயத்தையும் தன்னுடைய அரண்மனையையும் 20 வருஷங்களில் சாலொமோன் கட்டி முடித்தார்.+
2 அதன் பின்பு, ஈராம்+ தனக்குக் கொடுத்த நகரங்களை சாலொமோன் திரும்பக் கட்டி, இஸ்ரவேலர்களை அங்கே குடியேற்றினார்.
3 அதோடு, காமாத்-சோபாவுடன் போர் செய்து அதைக் கைப்பற்றினார்.
4 பின்பு, வனாந்தரத்தில் தத்மோர் நகரத்தையும், காமாத்+ பகுதியில் தன்னுடைய சேமிப்புக் கிடங்குகள்+ இருந்த நகரங்களையும் வலுப்படுத்தினார்.*
5 மேல் பெத்-ஓரோனையும்+ கீழ் பெத்-ஓரோனையும்+ வலுப்படுத்தினார்; மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்ட பாதுகாப்பான நகரங்களாக அவற்றை மாற்றினார்.
6 பாலாத்+ நகரத்தையும் சாலொமோனின் சேமிப்புக் கிடங்குகளுக்கான எல்லா நகரங்களையும் ரதங்களுக்கான எல்லா நகரங்களையும்+ குதிரைவீரர்களுக்கான நகரங்களையும் கட்டினார். அதோடு, எருசலேமிலும் லீபனோனிலும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுவதிலும் தான் விரும்பிய எல்லாவற்றையும் அவர் கட்டினார்.
7 மற்ற தேசத்து மக்களான+ ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களில் மீதியாக இருந்தவர்களின் வம்சத்தார்,
8 அதாவது இஸ்ரவேலர்கள் அடியோடு அழிக்காமல் விட்டுவைத்திருந்த ஆட்களின் வம்சத்தார்,+ தேசத்தில் இருந்தார்கள்; சாலொமோன் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார். அவர்கள் இன்றுவரை அவருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.+
9 ஆனால், இஸ்ரவேலர்களில் யாரையும் அடிமையாக்கி வேலை வாங்கவில்லை;+ ஏனென்றால், அவர்கள் சாலொமோனுடைய போர்வீரர்களாக, அவருடைய படை அதிகாரிகளுக்குத் தலைவர்களாக, அவருடைய ரதவீரர்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.+
10 சாலொமோன் ராஜாவுடைய வேலைகளை மேற்பார்வை செய்ய 250 பேர் இருந்தார்கள். இவர்கள் நிர்வாகிகளுக்குத் தலைவர்களாக இருந்தார்கள். வேலை செய்த ஆட்களுக்கு இவர்கள் அதிகாரிகளாக இருந்தார்கள்.+
11 சாலொமோன் பார்வோனுடைய மகளை+ ‘தாவீதின் நகரத்திலிருந்து’ கூட்டிக்கொண்டுவந்து, அவளுக்காகத் தான் கட்டிய மாளிகையில் குடிவைத்தார்.+ “என் மனைவியாக இருந்தாலும்கூட, இஸ்ரவேலின் ராஜாவான தாவீதின் அரண்மனையில் அவள் குடியிருக்கக் கூடாது; யெகோவாவின் பெட்டி இருக்கும் இடங்களெல்லாம் பரிசுத்தமானவை”+ என்று அவர் நினைத்ததால் அப்படிச் செய்தார்.
12 பின்பு, நுழைவு மண்டபத்துக்கு+ முன்னால் யெகோவாவுக்கென்று தான் கட்டியிருந்த பலிபீடத்தில்+ யெகோவாவுக்குத் தகன பலிகளைக்+ கொடுத்தார்.
13 மோசே கொடுத்த கட்டளைப்படி, சாலொமோன் தினமும் பலிகள் கொடுத்துவந்தார்; அதேபோல், ஓய்வுநாளிலும்+ ஒவ்வொரு மாதப்பிறப்பிலும்*+ கொடுத்துவந்தார். புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை,+ வாரங்களின் பண்டிகை,+ கூடாரப் பண்டிகை+ என வருஷா வருஷம் கொண்டாடப்படுகிற மூன்று பண்டிகை நாட்களிலும்+ பலிகள் கொடுத்துவந்தார்.
14 தன்னுடைய அப்பா தாவீதின் கட்டளைப்படியே, குருமார்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து,+ ஆலயத்தில் சேவை செய்ய நியமித்தார். அதோடு, லேவியர்களுக்கும் வேலைகளை நியமித்தார்; தினமும் கடவுளைப் புகழ்ந்து பாடுவதற்கும்+ குருமார்களுக்கு உதவி செய்வதற்கும்* அவர்களை நியமித்தார்; வெவ்வேறு வாசல்களில் காவல் காப்பதற்கு வாயிற்காவலர்களின் பிரிவுகளை ஏற்படுத்தினார்.+ இப்படிச் செய்யச் சொல்லி உண்மைக் கடவுளின் ஊழியரான தாவீது கட்டளையிட்டிருந்தார்.
15 சேமிப்பு அறைகள் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, வேறெந்த விஷயமாக இருந்தாலும் சரி, ராஜா கொடுத்த கட்டளைகளுக்குக் குருமார்களும் லேவியர்களும் அப்படியே கீழ்ப்படிந்தார்கள்.
16 யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்ட நாள்முதல்+ அதைக் கட்டிமுடித்த நாள்வரை, எல்லா வேலைகளையும் சாலொமோன் நன்றாகத் திட்டமிட்டுச் செய்தார்.* இப்படி, யெகோவாவின் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.+
17 அதன் பின்பு, ஏதோம் தேசத்தின்+ கடலோரத்தில் இருந்த ஏலோத்துக்கும்+ எசியோன்-கேபேருக்கும்+ சாலொமோன் போனார்.
18 ஈராம்+ தன்னுடைய ஊழியர்கள் மூலம் சாலொமோனுக்குக் கப்பல்களை அனுப்பி வைத்தார், அதோடு அனுபவமுள்ள மாலுமிகளையும் அனுப்பி வைத்தார். அவர்கள் சாலொமோனின் ஆட்களோடு ஓப்பீருக்குப்+ போய், அங்கிருந்து 450 தாலந்து* தங்கத்தை+ சாலொமோன் ராஜாவுக்குக்+ கொண்டுவந்தார்கள்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “திரும்பக் கட்டினார்.”
^ வே.வா., “முதலாம் பிறையிலும்.”
^ வே.வா., “குருமார்கள் முன்னிலையில் சேவை செய்வதற்கும்.”
^ வே.வா., “ஒழுங்கான முறையில் செய்துமுடித்தார்.”
^ ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.