2 நாளாகமம் 9:1-31

9  சாலொமோனைப் பற்றி சேபா தேசத்து ராணி+ கேள்விப்பட்டாள்; அதனால், சிக்கலான கேள்விகளைக் கேட்டு* அவருடைய அறிவைச் சோதித்துப் பார்க்க, மிகப் பெரிய பரிவாரத்துடன் எருசலேமுக்கு வந்தாள். பரிமளத் தைலத்தையும் ஏராளமான தங்கத்தையும்+ ரத்தினக் கற்களையும் அவளுடைய ஒட்டகங்கள் சுமந்துவந்தன. அவள் சாலொமோனைச் சந்தித்து, தன் மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாள்.+  அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சாலொமோன் பதில் சொன்னார். எந்தக் கேள்வியும் அவருக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.  சாலொமோனின் ஞானம்,+ அவர் கட்டிய அரண்மனை,+  அவருடைய ஊழியர்கள் உட்கார்ந்திருந்த வரிசை, மேஜையில் பரிமாறப்பட்ட உணவு,+ பரிமாறப்பட்ட விதம், பரிமாறியவர்களின் உடை, பானம் பரிமாறிய ஆட்கள், அவர்களுடைய உடை, யெகோவாவின் ஆலயத்தில் அவர் வழக்கமாகச் செலுத்திய தகன பலிகள்+ ஆகியவற்றைப் பார்த்து சேபா தேசத்து ராணி வாயடைத்துப்போனாள்.*  அதனால் ராஜாவிடம், “உங்களுடைய சாதனைகளையும்* ஞானத்தையும் பற்றி எங்கள் தேசத்தில் நான் கேள்விப்பட்டது அத்தனையும் உண்மை.  ஆனால், நேரில் வந்து பார்க்கும்வரை அதையெல்லாம் நான் நம்பவே இல்லை.+ உங்களுடைய மகா ஞானத்தைப்+ பற்றிப் பாதிகூட நான் கேள்விப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் கேள்விப்பட்டதைவிட நீங்கள் பல மடங்கு சிறந்தவராக இருக்கிறீர்கள்.+  உங்களுடைய மக்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்! எப்போதும் உங்களோடு இருந்து, உங்களுடைய ஞானமான வார்த்தைகளைக் கேட்கிற உங்களுடைய ஊழியர்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்!  உங்கள்மீது பிரியம் வைத்து, தன்னுடைய சிம்மாசனத்தில் உங்களை உட்கார வைத்த உங்களுடைய கடவுளான யெகோவாவைப் போற்றிப் புகழ்கிறேன். இஸ்ரவேலர்கள்மீது இன்றுபோல் என்றும் அன்பு காட்ட வேண்டுமென்று யெகோவா விரும்புவதால்,+ அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உங்களை ராஜாவாக ஆக்கியிருக்கிறார்” என்று சொன்னாள்.  பின்பு, 120 தாலந்து* தங்கத்தையும்+ பெருமளவு பரிமளத் தைலத்தையும் ரத்தினக் கற்களையும் சாலொமோன் ராஜாவுக்குக் கொடுத்தாள்.+ சேபா தேசத்து ராணி கொண்டுவந்த அளவுக்குப் பரிமளத் தைலத்தை அதன் பிறகு வேறு யாருமே கொண்டுவரவில்லை. 10  ஓப்பீரிலிருந்து தங்கம் கொண்டுவந்த ஈராமின் ஆட்களும் சாலொமோனின் ஆட்களும்,+ சந்தன மரங்களையும் விலைமதிப்புள்ள கற்களையும்கூட கொண்டுவந்தார்கள்.+ 11  அந்தச் சந்தன மரங்களைப் பயன்படுத்தி யெகோவாவின் ஆலயத்திலும் தன்னுடைய அரண்மனையிலும்+ படிக்கட்டுகளை+ ராஜா அமைத்தார். அதோடு, பாடகர்களுக்காக யாழ்களையும் நரம்பிசைக் கருவிகளையும் செய்தார்.+ இதற்கு முன்பு யாருமே இவ்வளவு தரமான மரங்களை யூதா தேசத்தில் பார்த்ததில்லை. 12  சாலொமோன் ராஜாவும்கூட சேபா தேசத்து ராணி ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார். அவள் கொண்டுவந்ததைவிட அதிகமான அன்பளிப்புகளைக் கொடுத்தார்.* அதன் பின்பு, அவள் தன் ஊழியர்களோடு தன்னுடைய தேசத்துக்குத் திரும்பிப் போனாள்.+ 13  ஒவ்வொரு வருஷமும் சாலொமோனுக்குக் கிடைத்த தங்கத்தின் எடை 666 தாலந்து.+ 14  இது தவிர, வியாபாரிகளும் பயண வியாபாரிகளும் அவருக்குப் பொருள்களைக் கொண்டுவந்தார்கள். அரேபியாவிலுள்ள எல்லா ராஜாக்களும் இஸ்ரவேல் ஆளுநர்களும் அவருக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்தார்கள்.+ 15  சாலொமோன் ராஜா கலப்புத் தங்கத்தில் 200 பெரிய கேடயங்களைச் செய்தார்+ (ஒவ்வொரு கேடயத்துக்கும் 600 சேக்கல்* கலப்புத் தங்கம் பயன்படுத்தப்பட்டது).+ 16  அதோடு, கலப்புத் தங்கத்தில் 300 சிறிய கேடயங்களையும்* செய்தார். (இவை ஒவ்வொன்றையும் செய்ய மூன்று மினா* தங்கம் பயன்படுத்தப்பட்டது). பின்பு, ‘லீபனோன் வன மாளிகையில்’+ அவற்றை வைத்தார். 17  அதோடு, யானைத்தந்தத்தில் மிகப் பெரிய சிம்மாசனம் ஒன்றைச் செய்து, அதன்மீது சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார்.+ 18  அந்தச் சிம்மாசனத்துக்கு ஏறிப் போக ஆறு படிக்கட்டுகள் இருந்தன. அதனுடன் ஒரு தங்கக் கால்மணையும் இணைக்கப்பட்டிருந்தது. இருக்கையின் இரண்டு பக்கங்களிலும் கைப்பிடிகள் இருந்தன, ஒவ்வொரு கைப்பிடியின் பக்கத்திலும் ஒரு சிங்க உருவம்+ வைக்கப்பட்டிருந்தது. 19  அதோடு, ஆறு படிக்கட்டுகளிலும் இந்தப் பக்கம் ஒரு சிங்கம், அந்தப் பக்கம் ஒரு சிங்கம் என மொத்தம் 12 சிங்க உருவங்கள்+ வைக்கப்பட்டிருந்தன. வேறெந்த ராஜ்யத்திலும் இப்படிப்பட்ட சிம்மாசனம் செய்யப்படவில்லை. 20  சாலொமோன் ராஜா குடிக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாமே தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன. ‘லீபனோன் வன மாளிகையில்’ இருந்த எல்லா பாத்திரங்களும் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன, எதுவும் வெள்ளியில் செய்யப்படவில்லை. ஏனென்றால், சாலொமோன் காலத்தில் வெள்ளி+ ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. 21  ராஜாவின் கப்பல்கள் ஈராமின்+ ஆட்களோடு தர்ஷீசுக்குப்+ போய்வந்தன. மூன்று வருஷங்களுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, யானைத்தந்தம்,+ வாலில்லா குரங்குகள், மயில்கள் ஆகியவற்றை ‘தர்ஷீஸ் கப்பல்கள்’ கொண்டுவந்தன. 22  இப்படி, உலகத்திலிருந்த வேறெந்த ராஜாவையும்விட செல்வத்திலும் ஞானத்திலும்+ சாலொமோன் ராஜா தலைசிறந்தவராக இருந்தார். 23  சாலொமோனைச் சந்தித்து, உண்மைக் கடவுள் தந்த ஞானத்தால்+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்க உலகத்திலிருந்த எல்லா தேசத்து ராஜாக்களும் ஆசைப்பட்டார்கள். 24  அவரைச் சந்திக்க வந்த ஒவ்வொருவரும் தங்கப் பொருள்கள், வெள்ளிப் பொருள்கள், உடைகள்,+ ஆயுதங்கள், பரிமளத் தைலம், குதிரைகள், கோவேறு கழுதைகள்* ஆகியவற்றை அன்பளிப்பாகக் கொண்டுவந்தார்கள்; வருஷா வருஷம் இப்படிச் செய்துவந்தார்கள். 25  சாலொமோனிடம் 4,000 குதிரை லாயங்களும், ரதங்களும், 12,000 குதிரைகளும்*+ இருந்தன; ரதங்களுக்கான நகரங்களிலும் எருசலேமில் ராஜா குடியிருந்த இடத்துக்குப் பக்கத்திலும் அவற்றை நிறுத்தி வைத்தார்.+ 26  ஆறு* தொடங்கி பெலிஸ்தியர்களின் தேசம் வரையிலும் எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த எல்லா அரசர்களையும் அவர் ஆட்சி செய்தார்.+ 27  வெள்ளியைக் கற்களைப் போலவும், தேவதாரு மரங்களை சேப்பெல்லாவிலுள்ள காட்டத்தி மரங்களைப்+ போலவும் சாலொமோன் ராஜா எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கச் செய்தார். 28  எகிப்திலிருந்தும் மற்ற தேசங்களிலிருந்தும் சாலொமோனுக்காகக் குதிரைகள் கொண்டுவரப்பட்டன.+ 29  ஆரம்பம்முதல் முடிவுவரை சாலொமோனின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள்+ எல்லாம் நாத்தான்+ தீர்க்கதரிசி எழுதிய புத்தகத்திலும், சீலோனியரான அகியா+ எழுதிய தீர்க்கதரிசனப் புத்தகத்திலும் உள்ளன. தரிசனக்காரரான இத்தோ+ எழுதிய தரிசனப் புத்தகத்திலும் உள்ளன; இவர் நேபாத்தின் மகன் யெரொபெயாமைப்+ பற்றியும் எழுதினார். 30  இஸ்ரவேல் முழுவதையும் எருசலேமிலிருந்து சாலொமோன் 40 வருஷங்கள் ஆட்சி செய்தார். 31  பின்பு, சாலொமோன் இறந்ததும், அவருடைய அப்பாவான ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார்;*+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ரெகொபெயாம் ராஜாவானார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “புதிர்களைப் போட்டு.”
நே.மொ., “ராணிக்குப் பேச்சு மூச்சே இல்லாமல் போனது.”
வே.வா., “வார்த்தைகளையும்.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அல்லது, “அவள் கொண்டுவந்த அன்பளிப்புகளின் மதிப்பைவிட அதிகமாகக் கொடுத்தார்.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராமுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பொதுவாக, வில்வீரர்கள் இவற்றை வைத்திருப்பார்கள்.
எபிரெய வேதாகமத்தில், ஒரு மினா என்பது 570 கிராமுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்குகள்.
வே.வா., “குதிரைவீரர்களும்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆறு.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா