2 ராஜாக்கள் 13:1-25

13  யூதாவின் ராஜா அகசியாவுடைய+ மகன் யோவாஸ்+ ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், யெகூவின் மகன் யோவாகாஸ்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் 17 வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார்.  யெகோவா வெறுக்கிற காரியங்களைத் தொடர்ந்து செய்துவந்தார். இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமுடைய பாவ வழியைவிட்டு விலகவே இல்லை,+ விடாப்பிடியாக அந்தக் கெட்ட வழியிலேயே நடந்தார்.  அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ யோவாகாசின் காலமெல்லாம் சீரியாவின் ராஜாவான அசகேல்+ கையிலும் அவனுடைய மகன் பெனாதாத்+ கையிலும் இஸ்ரவேலர்களை அவர் விட்டுவிட்டார்.  அப்போது, கருணை காட்டச் சொல்லி யெகோவாவிடம் யோவாகாஸ் கெஞ்சினார். சீரியாவின் ராஜா இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்துவதை யெகோவா பார்த்ததால், யோவாகாசின் ஜெபத்தைக் கேட்டார்.+  சீரியர்களின் பிடியிலிருந்து இஸ்ரவேலர்களை விடுவிக்க யெகோவா அவர்களுக்கு ஒரு மீட்பரைத் தந்தார்.+ அதனால் இஸ்ரவேலர்கள் முன்புபோல தங்கள் வீடுகளில் குடியிருந்தார்கள்.*  (ஆனாலும், யெரொபெயாமுடைய வீட்டார் செய்த பாவத்தைவிட்டு அவர்கள் விலகவில்லை;+ இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். சமாரியாவிலிருந்த பூஜைக் கம்பம்*+ அழிக்கப்படாமல் அப்படியேதான் இருந்தது.)  கடைசியில், யோவாகாசிடம் வெறும் 50 குதிரைவீரர்களும் 10,000 காலாட்படை வீரர்களும்தான் இருந்தார்கள்; வெறும் 10 ரதங்கள்தான் இருந்தன. ஏனென்றால், அவருடைய மற்ற ரதங்களையும் வீரர்களையும் சீரியாவின் ராஜா அழித்துவிட்டான்,+ களத்துமேட்டிலிருக்கிற பதரைப் போல் மிதித்துப்போட்டான்.+  யோவாகாசின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  யோவாகாஸ் இறந்த* பின்பு, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டார்.+ அடுத்து, அவருடைய மகன் யோவாஸ் ராஜாவானார். 10  யூதாவின் ராஜா யோவாஸ் ஆட்சி செய்த 37-ஆம் வருஷத்தில், யோவாகாசின்+ மகன் யோவாஸ் சமாரியாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை 16 வருஷங்கள் ஆட்சி செய்தார். 11  யெகோவா வெறுக்கிற காரியங்களை அவர் தொடர்ந்து செய்துவந்தார். இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவே இல்லை.+ அவர் செய்த பாவங்களையெல்லாம் இவரும் தொடர்ந்து செய்துவந்தார். 12  யோவாசின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவருடைய வீரதீர செயல்கள், யூதாவின் ராஜா அமத்சியாவோடு அவர் போர் செய்த விதம்+ ஆகியவற்றைப் பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 13  யோவாஸ் இறந்த* பின்பு, இஸ்ரவேலின் மற்ற ராஜாக்களைப் போல சமாரியாவில் அடக்கம் பண்ணப்பட்டார்.+ அடுத்ததாக, யெரொபெயாம்*+ ராஜாவானார். 14  எலிசா+ நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோயினால் அவர் பிற்பாடு இறந்துபோனார். நோய்வாய்ப்பட்ட எலிசாவைப் பார்க்க இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் வந்தார். எலிசாவைக் கட்டிப்பிடித்து, “தகப்பனே, தகப்பனே! இஸ்ரவேலின் ரதமே, குதிரைவீரரே!”+ என்று சொல்லி அழுதார். 15  அப்போது எலிசா அவரிடம், “வில்லையும் அம்புகளையும் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். அவரும் அப்படியே செய்தார். 16  பின்பு அவர் இஸ்ரவேலின் ராஜாவிடம், “வில்லைக் கையில் பிடியுங்கள்” என்று சொன்னார். அவர் அதைக் கையில் பிடித்ததும், ராஜாவின் கைகள்மீது எலிசா தன் கைகளை வைத்தார். 17  “கிழக்கில் இருக்கும் ஜன்னலைத் திறங்கள்” என்று எலிசா சொன்னார். ராஜா அதைத் திறந்ததும், “அம்பு எறியுங்கள்” என்று சொன்னார். ராஜா அப்படியே செய்தார். அப்போது எலிசா, “இது வெற்றி* தரும் யெகோவாவின் அம்பு, சீரியாவை வெல்லும் அம்பு! நீங்கள் ஆப்பெக்கில்+ சீரியர்களின் படையைத் தோற்கடித்து அதை ஒழித்துக்கட்டுவீர்கள்” என்று சொன்னார். 18  பின்பு எலிசா இஸ்ரவேலின் ராஜாவிடம், “அம்புகளை எடுங்கள்” என்று சொன்னார். பின்பு, “தரையில் அடியுங்கள்” என்று சொன்னார். ராஜா மூன்று தடவை அடித்துவிட்டு நிறுத்திக்கொண்டார். 19  அதனால் உண்மைக் கடவுளின் ஊழியர் பயங்கரமாகக் கோபப்பட்டு, “ஐந்து, ஆறு தடவையாவது அடித்திருக்க வேண்டாமா? அப்படிச் செய்திருந்தால் சீரியர்களை அடியோடு அழித்திருப்பீர்கள். இப்போது, மூன்று தடவை மட்டும்தான் தோற்கடிப்பீர்கள்”+ என்று சொன்னார். 20  அதன் பின்பு எலிசா இறந்துபோனார், அவரை அடக்கம் செய்தார்கள். மோவாபைச் சேர்ந்த கொள்ளைக்கூட்டம்+ ஒவ்வொரு வருஷத்தின் ஆரம்பத்திலும்* தேசத்துக்குள் படையெடுப்பது வழக்கம். 21  இறந்துபோன ஒருவனை சிலபேர் அடக்கம் செய்துகொண்டிருந்தபோது, அந்தக் கொள்ளைக்கூட்டத்தைப் பார்த்தார்கள்; உடனே இறந்துபோனவனின் உடலை எலிசாவின் கல்லறையில் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகள்மீது பட்டவுடனே உயிர் பெற்றது,+ அவன் எழுந்து நின்றான். 22  யோவாகாசின் காலமெல்லாம் சீரியாவின் ராஜா அசகேல்+ இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினான்.+ 23  இருந்தாலும், ஆபிரகாம்,+ ஈசாக்கு,+ யாக்கோபு ஆகியோருடன் செய்த ஒப்பந்தத்தின் காரணமாக+ யெகோவா அவர்களுக்குக் கருணையும் இரக்கமும் காட்டினார்,+ அவர்களைக் கரிசனையோடு நடத்தினார்; அவர்களை அழித்துப்போட விரும்பவில்லை. இன்றுவரை தன் முன்னாலிருந்து அவர்களைத் தள்ளிவிடவுமில்லை. 24  சீரியாவின் ராஜா அசகேல் இறந்த பின்பு, அவனுடைய மகன் பெனாதாத் ராஜாவானான். 25  யோவாசின் அப்பாவான யோவாகாசுடன் போர் செய்து இஸ்ரவேலர்களுடைய நகரங்களை அசகேல் கைப்பற்றியிருந்தான். அவனுடைய மகன் பெனாதாத்திடமிருந்து யோவாஸ் அவற்றை மீட்டார். அவர் மூன்று தடவை பெனாதாத்தைத் தோற்கடித்து+ அந்த நகரங்களை மீட்டுக்கொண்டார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் குடியிருந்தார்கள்.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”
அதாவது, “இரண்டாம் யெரொபெயாம்.”
வே.வா., “மீட்பு.”
வசந்த காலமாக இருக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா