2 ராஜாக்கள் 18:1-37

18  ஏலாவின் மகன் ஓசெயா+ ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், ஆகாஸ்+ ராஜாவின் மகன் எசேக்கியா+ யூதாவின் ராஜாவானார்.  அப்போது, அவருக்கு 25 வயது. அவர் 29 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அபி;* அவள் சகரியாவின் மகள்.+  எசேக்கியா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே,+ யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+  அவர்தான் ஆராதனை மேடுகளை அழித்தார்,+ பூஜைத் தூண்களைத் தகர்த்தார், பூஜைக் கம்பத்தை* வெட்டிப்போட்டார்.+ அதோடு, மோசே செய்திருந்த செம்புப் பாம்பை+ நொறுக்கினார்; ஏனென்றால், அதுவரைக்கும் இஸ்ரவேல் மக்கள் அதன் முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்திருந்தார்கள். அதை நிகுஸ்தான்* என்று அழைத்தார்கள்.  அவர் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாமீது நம்பிக்கை வைத்தார்.+ அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, யூதா ராஜாக்களில் வேறு யாரும் அவரைப் போல இருக்கவில்லை.  அவர் யெகோவாவை உறுதியாகப் பிடித்துக்கொண்டார்.+ அவருடைய வழியைவிட்டு விலகவே இல்லை. மோசேயிடம் யெகோவா கொடுத்த கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தார்.  யெகோவா அவருக்குத் துணையாக இருந்ததால், எல்லாவற்றையும் ஞானமாகச் செய்தார். அசீரிய ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்தார், அவனுக்குச் சேவை செய்ய மறுத்துவிட்டார்.+  காசா வரையிலும், அதன் சுற்றுப்பகுதிகள் வரையிலும் இருந்த பெலிஸ்திய நகரங்கள் எல்லாவற்றையும் பிடித்தார்;+ காவற்கோபுரங்கள் தொடங்கி மதில் சூழ்ந்த நகரங்கள்வரை* எல்லா இடங்களையும் கைப்பற்றினார்.  எசேக்கியா ராஜா ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில், அதாவது ஏலாவின் மகன் ஓசெயா ராஜா+ இஸ்ரவேலை ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில், அசீரிய ராஜாவான சல்மனாசார் சமாரியாமீது படையெடுத்து வந்து அதை முற்றுகையிட்டான்.+ 10  மூன்றாம் வருஷத்தின் முடிவில், அவனுடைய வீரர்கள் அதைக் கைப்பற்றினார்கள்.+ எசேக்கியா ஆட்சி செய்த ஆறாம் வருஷத்தில், அதாவது ஓசெயா ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியா கைப்பற்றப்பட்டது. 11  பின்பு, அசீரிய ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+ 12  இஸ்ரவேலர்கள் தங்களுடைய கடவுளான யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் அவருடைய ஒப்பந்தத்தை மீறிக்கொண்டே இருந்ததால், யெகோவா தன்னுடைய ஊழியரான மோசே மூலம் கொடுத்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததால், இப்படியெல்லாம் நடந்தது.+ அவர்கள் அவருடைய பேச்சைக் கேட்கவுமில்லை, அவருக்குக் கீழ்ப்படியவுமில்லை. 13  எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா+ சனகெரிப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+ 14  அதனால், லாகீசில் இருந்த அசீரிய ராஜாவான சனகெரிப்புக்கு எசேக்கியா ராஜா செய்தி அனுப்பினார்; “நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்ன கேட்டாலும் தந்துவிடுகிறேன், எங்களைத் தாக்காமல் திரும்பிப் போய்விடுங்கள்” என்று சொன்னார். அப்போது, யூதாவின் ராஜாவான எசேக்கியாவிடம், 300 தாலந்து* வெள்ளியையும் 30 தாலந்து தங்கத்தையும் அபராதம் கட்டச் சொல்லி அசீரிய ராஜா சொன்னான். 15  அதனால், யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா வெள்ளியையும் எடுத்து எசேக்கியா கொடுத்து அனுப்பினார்.+ 16  அதோடு, யெகோவாவின் ஆலயத்திலிருந்த கதவுகளையும்+ நிலைக்கால்களையும் வெட்டியெடுத்து, அதன்மீது தான் அடித்திருந்த தங்கத் தகடுகளையும்+ அசீரிய ராஜாவுக்குக் கொடுத்து அனுப்பினார். 17  பின்பு தர்தான்,* ரப்சாரிஸ்,* ரப்சாக்கே* ஆகியோரை எருசலேமிலிருந்த எசேக்கியா ராஜாவிடம் அசீரிய ராஜா அனுப்பினான்.+ அவர்களோடு பெரிய படையையும் லாகீசிலிருந்து+ அனுப்பினான். அவர்கள் எருசலேமுக்கு வந்து மேல்குளத்தின் வாய்க்கால் பக்கத்தில் நின்றார்கள். அது வண்ணார் பகுதிக்குப் பக்கத்திலிருந்த நெடுஞ்சாலையில் இருந்தது.+ 18  ராஜாவை வெளியே வரச் சொல்லி அங்கிருந்து அவர்கள் சத்தம்போட்டுக் கூப்பிட்டார்கள். அப்போது, அரண்மனை நிர்வாகியும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கீம்,+ செயலாளரான செப்னா,+ பதிவாளரும் ஆசாப்பின் மகனுமான யோவா ஆகியோர் புறப்பட்டு அவர்களிடம் வந்தார்கள். 19  அப்போது ரப்சாக்கே அவர்களிடம், “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய இந்தச் செய்தியைத் தயவுசெய்து எசேக்கியாவிடம் போய்ச் சொல்லுங்கள், ‘என்ன தைரியத்தில் நீ இப்படியெல்லாம் செய்கிறாய்?+ 20  என்னோடு போர் செய்ய உனக்குச் சாமர்த்தியமும் பலமும் இருப்பதாகப் பிதற்றுகிறாயே. யாரை நம்பி என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய்?+ 21  இதோ! எகிப்தைப்போய் நம்பிக்கொண்டிருக்கிறாயே.+ அது ஒடிந்துபோன நாணல். அதன்மேல் யாராவது கை ஊன்றினால், அது அவனுடைய கையைக் குத்திக் கிழித்துவிடும். எகிப்தின் ராஜாவான பார்வோனை நம்பியிருக்கிற எல்லாருக்கும் அதே கதிதான் ஏற்படும். 22  “எங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்”+ என்று ஒருவேளை நீ சொல்லலாம். ஆனால், அவருடைய ஆராதனை மேடுகளையும் பலிபீடங்களையும்தான் நீ அழித்துவிட்டாயே!+ “எருசலேமில் இருக்கிற இந்தப் பலிபீடத்தின் முன்னால்தான் நீங்கள் மண்டிபோட வேண்டும்” என்று யூதாவிலும் எருசலேமிலும் இருப்பவர்களுக்குச் சொல்லியிருக்கிறாயே!’+ 23  இதோ, என் எஜமானாகிய அசீரிய ராஜா உனக்குச் சவால் விடுகிறார், கேள். நான் உனக்கு 2,000 குதிரைகளைத் தருகிறேன், அதில் சவாரி செய்வதற்காவது உன்னிடம் ஆட்கள் இருக்கிறார்களா பார்க்கலாம்!+ 24  ரதங்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் நீ எகிப்திடம் கையேந்தி நிற்கிறாயே, என் எஜமானுக்கு வேலை செய்கிற ஒரு சாதாரண ஆளுநரையாவது உன்னால் விரட்டியடிக்க முடியுமா? 25  யெகோவாவின் உத்தரவு இல்லாமலா நான் இந்த இடத்தை அழிக்க வந்திருக்கிறேன்? ‘இந்த நகரத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அதை அழித்துப்போடு’ என்று யெகோவாதான் என்னிடம் சொன்னார்” என்றான். 26  அதற்கு இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும் செப்னாவும்+ யோவாவும், “உங்கள் ஊழியர்களான எங்களுக்கு அரமேயிக் மொழி*+ தெரியும். தயவுசெய்து அரமேயிக் மொழியிலேயே பேசுங்கள். மதில்மேல் இருக்கிறவர்களுக்குக் கேட்கிற மாதிரி யூதர்களுடைய மொழியில் பேச வேண்டாம்”+ என்று ரப்சாக்கேயிடம்+ சொன்னார்கள். 27  அதற்கு ரப்சாக்கே, “உங்களிடமும் உங்கள் எஜமானிடமும் மட்டும் பேசுவதற்காகவா ராஜா என்னை அனுப்பி வைத்தார்? மதில்மேல் உட்கார்ந்திருக்கிற இந்த ஆட்களிடமும் பேசத்தானே என்னை அனுப்பி வைத்தார்? உங்களோடு சேர்ந்து அவர்களும்தானே தங்களுடைய மலத்தைத் தின்று தங்களுடைய சிறுநீரைக் குடிக்கப்போகிறார்கள்?” என்று சொன்னான். 28  பின்பு, ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதர்களுடைய மொழியில் சத்தமாக, “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய செய்தியைக் கேளுங்கள்.+ 29  ராஜாவின் செய்தி இதுதான்: ‘எசேக்கியாவின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள். அவனால் உங்களை என் கையிலிருந்து காப்பாற்ற முடியாது.+ 30  யெகோவாவை நம்பும்படி எசேக்கியா உங்களிடம் சொல்வான். “யெகோவா நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவார், இந்த நகரத்தை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்க மாட்டார்”+ என்று சொல்வான். அதையெல்லாம் நம்பாதீர்கள். 31  எசேக்கியாவின் பேச்சைக் கேட்காதீர்கள். அசீரிய ராஜா இப்படிச் சொல்கிறார்: “என்னோடு சமாதானம் பண்ணிக்கொண்டு, சரணடைந்து விடுங்கள். அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் திராட்சைக் கொடியிலிருந்தே பழங்களைச் சாப்பிடுவீர்கள், உங்கள் அத்தி மரத்திலிருந்தே பழங்களைச் சாப்பிடுவீர்கள், உங்கள் தண்ணீர்த் தொட்டியிலிருந்தே தண்ணீரைக் குடிப்பீர்கள். 32  பின்பு நான் வந்து, உங்கள் தேசத்தைப் போலவே செழிப்பாக இருக்கும் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன்.+ அது, தானியமும் புதிய திராட்சமதுவும் ரொட்டியும் தேனும் ஏராளமாகக் கிடைக்கிற தேசம்; திராட்சைத் தோட்டங்களும் ஒலிவ மரங்களும் ஏராளமாக இருக்கிற தேசம். நீங்கள் சாகாமல் அந்தத் தேசத்தில் நன்றாக வாழ்வீர்கள். ‘யெகோவா நம்மைக் காப்பாற்றுவார்’ என்று எசேக்கியா சொல்வதைக் கேட்டு ஏமாந்துபோகாதீர்கள். 33  எந்தத் தெய்வமாவது அசீரிய ராஜாவின் பிடியிலிருந்து தன்னுடைய நகரத்தைக் காப்பாற்றியிருக்கிறதா? 34  காமாத்திலும்+ அர்பாத்திலும் உள்ள தெய்வங்களால் என்ன செய்ய முடிந்தது? செப்பர்வாயிமிலும்+ ஏனாவிலும் ஈவாவிலும் உள்ள தெய்வங்களால் என்ன செய்ய முடிந்தது? அவற்றால் சமாரியாவை என்னிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?+ 35  இதுவரைக்கும் எந்தத் தெய்வத்தால் தன்னுடைய நகரத்தை என் கையிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கிறது? அப்படியிருக்கும்போது, யெகோவா மட்டும் எப்படி எருசலேமை என்னிடமிருந்து காப்பாற்றுவார்?”’”+ என்று கேட்டான். 36  ஆனால் மக்கள், பதிலுக்கு ஒரு வார்த்தைகூட பேசாமல் அமைதியாக இருந்தார்கள். ஏனென்றால், “நீங்கள் அவனுக்குப் பதில் சொல்லக் கூடாது”+ என்று ராஜா கட்டளை கொடுத்திருந்தார். 37  அரண்மனை நிர்வாகியும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கீம், செயலாளரான செப்னா, பதிவாளரும் ஆசாப்பின் மகனுமான யோவா ஆகியோர் தங்களுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் வந்து, ரப்சாக்கே சொன்னதையெல்லாம் சொன்னார்கள்.

அடிக்குறிப்புகள்

அபியாள் என்பதன் சுருக்கம்.
வே.வா., “செம்புப் பாம்பு சிலை.”
அதாவது, “மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும்.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “படைத் தளபதி.”
வே.வா., “அரண்மனையின் முக்கிய அதிகாரி.”
வே.வா., “பானம் பரிமாறுகிறவர்களின் தலைவன்.”
வே.வா., “சீரியர்களின் மொழி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா