அப்போஸ்தலரின் செயல்கள் 13:1-52

  • பர்னபாவும் சவுலும் மிஷனரிகளாக அனுப்பப்படுகிறார்கள் (1-3)

  • சீப்புரு தீவில் ஊழியம் (4-12)

  • பிசீதியாவில் உள்ள அந்தியோகியாவில் பவுல் பேசுகிறார் (13-41)

  • மற்ற தேசத்து மக்களிடம் போகச் சொல்லி ஒரு தீர்க்கதரிசனத்தில் கட்டளை (42-52)

13  அந்தியோகியாவில் இருந்த சபையில்+ பர்னபாவும், நீகர் என்று அழைக்கப்பட்ட சிமியோனும், சிரேனே ஊர்க்காரரான லூகியும், மாகாண அதிபதியான ஏரோதுவோடு படித்த மனாயீனும், சவுலும் தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள்.  அவர்கள் யெகோவாவுக்கு* ஊழியம் செய்தும் விரதமிருந்தும் வந்தபோது, “பர்னபாவையும் சவுலையும் எந்த வேலைக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேனோ+ அந்த வேலைக்காக அவர்களை எனக்கென்று ஒதுக்கிவையுங்கள்”+ என்று கடவுளுடைய சக்தி சொன்னது.  அவர்கள் விரதமிருந்து ஜெபம் செய்த பிறகு, அவர்கள் இரண்டு பேர்மேலும் கைகளை வைத்து அவர்களை அனுப்பினார்கள்.  இப்படி, கடவுளுடைய சக்தியால் அனுப்பப்பட்ட அந்த இரண்டு பேரும் செலூக்கியாவுக்குப் போய், அங்கிருந்து சீப்புரு தீவுக்குக் கப்பல் ஏறினார்கள்.  அவர்கள் சாலமி நகரத்துக்கு வந்தபோது, யூதர்களுடைய ஜெபக்கூடங்களில் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்க ஆரம்பித்தார்கள். யோவானும் ஓர் உதவியாளராக அவர்களோடு இருந்தார்.+  அங்கிருந்து அந்தத் தீவு முழுவதும் பயணம் செய்து பாப்போ நகரம்வரை போனபோது, பர்யேசு என்ற பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தார்கள்; அவன் ஒரு சூனியக்காரன், போலித் தீர்க்கதரிசி.  ரோம மாநில ஆளுநரான* செர்கியு பவுலோடு அவன் இருந்தான். அந்த ஆளுநர் புத்திக்கூர்மை உள்ளவராக இருந்தார்; கடவுளுடைய வார்த்தையைக் கேட்க அந்த ஆளுநர் ஆர்வமாக இருந்ததால் பர்னபாவையும் சவுலையும் தன்னிடம் வரவழைத்தார்.  ஆனால், எலிமா என்று அழைக்கப்பட்ட அந்தச் சூனியக்காரன் (எலிமா என்ற பெயரின் அர்த்தமே சூனியக்காரன் என்பதுதான்) அவர்களை எதிர்த்துக்கொண்டும், எஜமான்மேல் அந்த ஆளுநர் நம்பிக்கை வைப்பதைத் தடுக்க முயற்சி செய்துகொண்டும் இருந்தான்.  பவுல் என்ற சவுல் கடவுளுடைய சக்தியால் நிறைந்தவராக, அவனை உற்றுப் பார்த்து, 10  “எல்லா விதமான பித்தலாட்டமும் எல்லா விதமான அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே,+ நீதியான எல்லாவற்றுக்கும் பகைவனே, யெகோவாவின்* நீதியான வழிகளைப் புரட்டிப்போடுவதை நிறுத்த மாட்டாயா? 11  இதோ! யெகோவாவின்* கை உனக்கு எதிராக வந்திருக்கிறது; கொஞ்சக் காலத்துக்கு நீ குருடனாகி, சூரிய ஒளியைப் பார்க்காமல் இருப்பாய்” என்று சொன்னார். உடனே அவனுடைய கண் மங்கலாகி, இருண்டுபோனது. அதனால், தன்னுடைய கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போவதற்கு ஆட்களை அவன் தேட ஆரம்பித்தான். 12  நடந்ததையெல்லாம் பார்த்த ஆளுநர் இயேசுவின் சீஷராக ஆனார். ஏனென்றால், அவர் யெகோவாவை* பற்றிய போதனையைக் கேட்டு மலைத்துப்போனார். 13  அதன் பின்பு, பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறி பம்பிலியாவில் உள்ள பெர்கேவுக்கு வந்தார்கள். ஆனால், யோவான்+ அவர்களைவிட்டுப் பிரிந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்.+ 14  அவர்களோ பெர்கேவிலிருந்து பிசீதியாவில் உள்ள அந்தியோகியாவுக்கு வந்துசேர்ந்தார்கள்; ஓய்வுநாளில் ஜெபக்கூடத்துக்குள்+ போய் உட்கார்ந்தார்கள். 15  அங்கே கூடியிருந்தவர்களுக்கு முன்னால் திருச்சட்டமும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் வாசிக்கப்பட்டன.+ அதன் பின்பு, ஜெபக்கூடத் தலைவர்கள் இவர்களிடம் ஆள் அனுப்பி, “சகோதரர்களே, இங்கே இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். 16  அதனால் பவுல் எழுந்து, எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டுப் பேச ஆரம்பித்தார்: “இஸ்ரவேல் மக்களே, கடவுள்பயமுள்ள மற்றவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். 17  இஸ்ரவேல் மக்களின் கடவுள் நம்முடைய முன்னோர்களைத் தேர்ந்தெடுத்தார். எகிப்து தேசத்தில் அவர்கள் அன்னியர்களாகக் குடியிருந்தபோது, அவர்களை அவர் உயர்த்தினார்; தன்னுடைய கைபலத்தால் அங்கிருந்து அவர்களை வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்.+ 18  கிட்டத்தட்ட 40 வருஷங்கள் வனாந்தரத்தில் அவர்களைச் சகித்துக்கொண்டார்.+ 19  பின்பு, கானான் தேசத்திலிருந்த ஏழு இனத்தவர்களை ஒழித்து, அந்தத் தேசத்தை இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகக் கொடுத்தார்.+ 20  இவையெல்லாம் சுமார் 450 வருஷ காலப்பகுதியில் நடந்தன. இவற்றுக்குப் பின்பு, சாமுவேல் தீர்க்கதரிசியின் காலம்வரை, அவர்களுக்காக நியாயாதிபதிகளை ஏற்படுத்தினார்.+ 21  ஆனால், அதற்குப் பிறகு தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்திக் கேட்டார்கள்;+ அதனால் கடவுள், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசின் மகன் சவுலை+ 40 வருஷத்துக்கு ராஜாவாக அவர்களுக்குக் கொடுத்தார். 22  பின்பு, அவரை நீக்கிவிட்டு தாவீதை ராஜாவாக நியமித்து,+ ‘ஈசாயின் மகன் தாவீது என் இதயத்துக்குப் பிடித்தமானவனாக இருப்பதைக் கண்டேன்;+ நான் விரும்பிய எல்லா காரியங்களையும் அவன் செய்வான்’ என்று அவரைப் பற்றிச் சாட்சி கொடுத்தார். 23  தான் கொடுத்த வாக்குறுதியின்படியே, தாவீதின் சந்ததியிலிருந்து இயேசுவை இஸ்ரவேலின் மீட்பராக+ வர வைத்தார். 24  இவர் வருவதற்கு முன்பே, மனம் திருந்தியதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெறும்படி இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் யோவான் பிரசங்கித்துவந்தார்.+ 25  ஆனால், யோவான் தன்னுடைய ஊழியத்தை முடிக்கப்போகும் சமயத்தில், ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவரல்ல. இதோ! எனக்குப் பின்பு ஒருவர் வரப்போகிறார். அவருடைய செருப்புகளை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை’+ என்று சொன்னார். 26  சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் வந்த மக்களே, இங்கே கூடியிருக்கும் கடவுள்பயமுள்ள மற்றவர்களே, மீட்பைப் பற்றிய இந்தச் செய்தி நமக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.+ 27  ஏனென்றால், எருசலேமின் குடிமக்களும் அவர்களுடைய தலைவர்களும் அவர் யார் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, அவருக்கு அவர்கள் தீர்ப்பு கொடுத்தபோது, ஒவ்வொரு ஓய்வுநாளிலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்து சத்தமாக வாசிக்கப்படுகிற வார்த்தைகளையே+ நிறைவேற்றினார்கள். 28  மரண தண்டனைக்கேற்ற குற்றம் எதையும் அவரிடம் கண்டுபிடிக்காதபோதிலும்,+ அவரைக் கொலை செய்யும்படி பிலாத்துவை வற்புறுத்தினார்கள்.+ 29  அவரைப் பற்றி எழுதப்பட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றிய பின்பு, அவரை மரக் கம்பத்திலிருந்து* இறக்கி, கல்லறையில்* வைத்தார்கள்.+ 30  ஆனால், கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.+ 31  கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குத் தன்னோடு வந்திருந்தவர்கள்முன் பல நாட்களாக அவர் தோன்றினார். அவர்கள்தான் இப்போது மக்கள் முன்னால் அவருடைய சாட்சிகளாக இருக்கிறார்கள்.+ 32  அதனால், முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியைப் பற்றிய நல்ல செய்தியை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். 33  இயேசுவைக் கடவுள் உயிரோடு எழுப்பியதன் மூலம், அவர்களுடைய பிள்ளைகளான நமக்கு அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்.+ இவரைப் பற்றித்தான் இரண்டாம் சங்கீதத்தில், ‘நீ என்னுடைய மகன், இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 34  அவர் இனி ஒருபோதும் அழிந்துபோகாதபடி கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார். இதைப் பற்றித்தான், ‘நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே உங்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுவேன், என் வாக்குறுதி நம்பகமானது’ என்று தெரிவித்திருக்கிறார்.+ 35  வேறொரு சங்கீதத்தில், ‘உங்களுக்கு உண்மையாக* இருப்பவரின் உடல் அழிந்துபோக விடமாட்டீர்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.+ 36  தாவீது தன்னுடைய வாழ்நாள் காலத்தில் கடவுளுக்குச் சேவை செய்துவிட்டு* கண்மூடினார். பின்பு, தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டார், அவருடைய உடல் அழிந்துபோனது.+ 37  ஆனால், கடவுளால் உயிரோடு எழுப்பப்பட்டவரின் உடல் அழிந்துபோகவில்லை.+ 38  அதனால் சகோதரர்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: அவர் மூலம்தான் உங்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைக்கும் என்பதை அறிவிக்கிறோம்.+ 39  நீங்கள் விசுவாசம் வைத்தால், எந்தக் காரியங்களில் மோசேயின் திருச்சட்டம் உங்கள் குற்றங்களை நீக்க முடியவில்லையோ+ அந்தக் காரியங்களிலெல்லாம் அவர் மூலமாக உங்கள் குற்றங்கள் நீக்கப்படும்.+ 40  அதனால், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது உங்களுக்கு நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 41  அதில், ‘ஏளனம் செய்பவர்களே, பாருங்கள், ஆச்சரியப்படுங்கள், ஒழிந்துபோங்கள்; ஏனென்றால், உங்களுடைய காலத்தில் நான் ஒரு செயலைச் செய்யப்போகிறேன். அதைப் பற்றி யாராவது உங்களுக்கு விவரமாகச் சொன்னால்கூட நீங்கள் அதை ஒருபோதும் நம்ப மாட்டீர்கள்’ என எழுதப்பட்டிருக்கிறது”+ என்று சொன்னார். 42  பின்பு அவர்கள் வெளியே வந்தபோது, அடுத்த ஓய்வுநாளிலும் இந்த விஷயங்களைப் பற்றித் தங்களிடம் பேசும்படி அங்கிருந்த மக்கள் கேட்டுக்கொண்டார்கள். 43  ஜெபக்கூடத்துக்கு வந்திருந்த கூட்டம் கலைந்த பின்பு, நிறைய யூதர்களும் யூத மதத்துக்கு மாறிய பக்தியுள்ள ஆட்களும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பின்னால் போனார்கள். பவுலும் பர்னபாவும் அவர்களோடு பேசியபோது கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற எப்போதும் தகுதியுள்ளவர்களாக இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.+ 44  அடுத்த ஓய்வுநாளின்போது, யெகோவாவின்* வார்த்தையைக் கேட்பதற்காக கிட்டத்தட்ட நகரவாசிகள் எல்லாரும் கூடிவந்தார்கள். 45  யூதர்கள் அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது பொறாமையால் பொங்கியெழுந்தார்கள். பவுல் சொன்ன விஷயங்களுக்கு முரணாகப் பேசி, கடவுளை நிந்தித்தார்கள்.+ 46  அதனால், பவுலும் பர்னபாவும் தைரியமாக அவர்களிடம், “கடவுளுடைய வார்த்தையை உங்களுக்குத்தான் நாங்கள் முதலில் சொல்ல வேண்டியிருந்தது.+ ஆனால் நீங்கள் அதை உதறித்தள்ளி, முடிவில்லாத வாழ்வுக்கு உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கிறீர்கள்! அதனால், இப்போது நாங்கள் மற்ற தேசத்து மக்களிடம் போகிறோம்.+ 47  ஏனென்றால், ‘பூமியெங்கும் இருக்கிறவர்களுக்கு மீட்புக்கான வழியைக் காட்டுவதற்காக உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாக நியமித்திருக்கிறேன்’ என்ற வசனத்தில் யெகோவாவே* எங்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார். 48  மற்ற தேசத்து மக்கள் இதைக் கேட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு, யெகோவாவின்* வார்த்தையை மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள். முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருந்தவர்கள் இயேசுவின் சீஷர்களானார்கள். 49  அதோடு, யெகோவாவின்* வார்த்தை அந்தப் பகுதி முழுவதும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தது. 50  ஆனால் யூதர்கள், கடவுளை வணங்கிவந்த பிரபலமான பெண்களையும் நகரத்திலிருந்த முக்கியமான ஆண்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்தி,+ தங்களுடைய நகரத்துக்கு வெளியே தள்ளிவிட்டார்கள். 51  அப்போது அவர்கள் இரண்டு பேரும், தங்கள் பாதத்தில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு,+ இக்கோனியாவுக்குப் போனார்கள். 52  சீஷர்கள் சந்தோஷத்தாலும்+ கடவுளுடைய சக்தியாலும் நிரப்பப்பட்டு வந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “மரத்திலிருந்து.”
வே.வா., “நினைவுக் கல்லறையில்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “கடவுளுடைய சித்தத்தைச் செய்துவிட்டு.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.