அப்போஸ்தலரின் செயல்கள் 20:1-38
20 கலவரம் ஓய்ந்த பின்பு சீஷர்களை பவுல் வரவழைத்து உற்சாகப்படுத்தினார். பின்பு, அவர்களை வழியனுப்பிவிட்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனார்.
2 அங்கே ஊர் ஊராகப் போய் பல விஷயங்களைச் சொல்லி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். அதன் பின்பு, கிரேக்கு தேசத்துக்குப் போய்,
3 அங்கே மூன்று மாதங்கள் தங்கினார். சீரியாவுக்குக் கப்பலில் பயணம் செய்யவிருந்த சமயத்தில், யூதர்கள் அவருக்கு எதிராகச் சதி செய்திருப்பதைத்+ தெரிந்துகொண்டு மக்கெதோனியா வழியாகத் திரும்பிப்போக முடிவுசெய்தார்.
4 பெரோயாவைச் சேர்ந்த பீருவின் மகன் சோபத்தரும், தெசலோனிக்கேயர்களான அரிஸ்தர்க்கும்+ செக்குந்தும், தெர்பையைச் சேர்ந்த காயுவும், தீமோத்தேயுவும்,+ ஆசிய மாகாணத்தைச் சேர்ந்த தீகிக்கும்+ துரோப்பீமும்+ அவரோடு போனார்கள்.
5 இவர்கள் முன்னதாகவே போய், துரோவாவில் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
6 நாங்களோ, புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை+ நாட்களுக்குப் பின்பு பிலிப்பியிலிருந்து கப்பல் ஏறி, ஐந்து நாட்களுக்குள் துரோவாவிலிருந்த அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம்; அங்கே ஏழு நாட்கள் தங்கினோம்.
7 வாரத்தின் முதல்நாள், உணவு சாப்பிடுவதற்காக நாங்கள் கூடியிருந்தோம். அடுத்த நாள் பவுல் புறப்பட இருந்ததால், அவர்களோடு பேச ஆரம்பித்தார்; நடுராத்திரிவரை தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
8 நாங்கள் கூடியிருந்த மாடி அறையில் நிறைய விளக்குகள் இருந்தன.
9 ஐத்திகு என்ற ஓர் இளைஞன் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். பவுல் பேசிக்கொண்டே இருந்தபோது அவன் அசந்து தூங்கிவிட்டான்; அதனால் மூன்றாம் மாடியிலிருந்து* கீழே விழுந்தான்; அவனைப் பிணமாகத்தான் எடுத்தார்கள்.
10 பவுல் கீழே இறங்கி வந்து, அவன்மேல் படுத்து, அவனை அணைத்துக்கொண்டு,+ “கூச்சல் போடாதீர்கள், இவனுக்கு உயிர் வந்துவிட்டது”+ என்று சொன்னார்.
11 பின்பு மாடிக்குப் போய், ரொட்டியைப் பிட்டுக் கொடுத்து அவரும் சாப்பிட ஆரம்பித்தார். அதன் பின்பு, பொழுது விடியும்வரை ரொம்ப நேரம் பேசிவிட்டு, புறப்பட்டுப் போனார்.
12 உயிர்பெற்ற அந்த இளைஞனை அவர்கள் கூட்டிக்கொண்டுபோய், அளவில்லாத ஆறுதல் அடைந்தார்கள்.
13 ஆசோ நகரம்வரை நடந்தே போக வேண்டுமென்று பவுல் நினைத்திருந்ததால், அவரை அங்கே கப்பலில் ஏற்றிக்கொள்வதற்காக, அவர் சொன்னபடியே நாங்கள் முன்னதாகப் புறப்பட்டுப் போனோம்.
14 பின்பு, ஆசோவில் அவர் எங்களைச் சந்தித்தபோது, அவரைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு மித்திலேனே நகரத்துக்குப் போனோம்.
15 மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு கீயு தீவின் எதிர்ப்புறமாக வந்துசேர்ந்தோம். அடுத்த நாள் சாமு தீவில் சற்று நின்றோம், அதற்கடுத்த நாள் மிலேத்து நகரத்துக்கு வந்துசேர்ந்தோம்.
16 எப்படியாவது பெந்தெகொஸ்தே பண்டிகை நாளன்று எருசலேமுக்குப்+ போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்ற அவசரத்தில் பவுல் இருந்தார். அதனால், ஆசிய மாகாணத்தில் இனியும் காலம் தாழ்த்தாமல் எபேசுவைக் கடந்துபோய்விடத்+ தீர்மானித்திருந்தார்.
17 ஆனாலும், மிலேத்துவிலிருந்து எபேசுவுக்குச் செய்தி அனுப்பி, அந்தச் சபையிலுள்ள மூப்பர்களை வரவழைத்தார்.
18 அவர்கள் வந்துசேர்ந்ததும் அவர்களிடம், “நான் ஆசிய மாகாணத்துக்கு+ வந்து உங்களோடிருந்த நாள்முதல் எப்படி நடந்துகொண்டேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
19 யூதர்களுடைய சதித்திட்டங்களால் ஏற்பட்ட சோதனைகளின்போது நான் மிகுந்த மனத்தாழ்மையோடும்+ கண்ணீரோடும் எஜமானுக்கு ஊழியம் செய்தேன்.
20 நன்மையான எல்லாவற்றையும் உங்களுக்குச் சொன்னேன். பொது இடங்களிலும்+ வீடு வீடாகவும் உங்களுக்குக் கற்பித்தேன்.+
21 அதோடு, கடவுளிடம் மனம் திருந்தி வருவதைப் பற்றியும்,+ நம்முடைய எஜமானாகிய இயேசுமேல் விசுவாசம் வைப்பதைப் பற்றியும் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் முழுமையாகச் சாட்சி கொடுத்தேன்.+
22 இப்போது, கடவுளுடைய சக்திக்குக் கட்டுப்பட்டு எருசலேமுக்குப் போகிறேன். ஆனால், அங்கே எனக்கு என்ன நடக்குமென்று தெரியாது.
23 சிறைவாசத்தையும் உபத்திரவத்தையும் அனுபவிக்கப்போகிறேன் என்று மட்டுமே தெரியும். இதை ஒவ்வொரு நகரத்திலும் கடவுளுடைய சக்தி என்னிடம் சொல்கிறது.+
24 ஆனாலும், என் உயிர் எனக்கு முக்கியமல்ல, எஜமானாகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தைச் செய்து முடிப்பதுதான் எனக்கு முக்கியம்.+ ஆம், கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நல்ல செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுத்து என் ஓட்டத்தை முடிப்பதுதான் எனக்கு முக்கியம்.
25 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உங்கள் எல்லாரிடமும் நான் பிரசங்கித்து வந்தேன். ஆனால், நீங்கள் இனி என் முகத்தைப் பார்க்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
26 அதனால், எந்த மனுஷனுடைய சாவுக்கும்* நான் பொறுப்பல்ல+ என்பதற்குச் சாட்சி சொல்ல இப்போது உங்களை அழைக்கிறேன்.
27 கடவுளுடைய நோக்கங்களில் ஒன்றைக்கூட மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.+
28 உங்களுக்கும்+ மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள். கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்ப்பதற்குக்+ கடவுளுடைய சக்தி உங்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது.+ கடவுள் தன்னுடைய சொந்த மகனின் இரத்தத்தால் வாங்கிய சபை அது.+
29 நான் போன பின்பு கொடிய ஓநாய் போன்ற ஆட்கள் உங்கள் நடுவில் நுழைவார்கள்+ என்பது எனக்குத் தெரியும். கடவுளுடைய மந்தையை அவர்கள் மென்மையாக நடத்த மாட்டார்கள்.
30 அதோடு, உங்கள் மத்தியிலிருந்தே சிலர் எழும்பி சீஷர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துச் சொல்வார்கள்.+
31 அதனால் விழிப்புடன் இருங்கள். மூன்று வருஷங்கள் ராத்திரி பகலாக+ நான் கண்ணீரோடு உங்கள் ஒவ்வொருவருக்கும் விடாமல் புத்தி சொன்னதை ஞாபகத்தில் வையுங்கள்.
32 இப்போது கடவுளும் அவருடைய அளவற்ற கருணையும்* உங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபம் செய்கிறேன். அந்த அளவற்ற கருணையைப் பற்றிய செய்தி உங்களைப் பலப்படுத்தும், புனிதமாக்கப்பட்ட எல்லாரும் பெறப்போகிற சொத்தை உங்களுக்குக் கொடுக்கும்.+
33 யாருடைய தங்கத்தையும் வெள்ளியையும் உடையையும் அடைவதற்கு நான் ஆசைப்பட்டதில்லை.+
34 என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்தக் கைகள்தான் வேலை செய்தன,+ இது உங்களுக்கே தெரியும்.
35 இப்படிக் கடினமாக உழைத்து பலவீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்கு எல்லாவற்றிலும் காட்டியிருக்கிறேன்.+ ‘வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது’+ என்று எஜமானாகிய இயேசு சொன்ன வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்” என்று சொன்னார்.
36 பவுல் இவற்றைச் சொன்ன பின்பு, எல்லாரோடும் சேர்ந்து மண்டிபோட்டு ஜெபம் செய்தார்.
37 ‘இனி நீங்கள் என் முகத்தைப் பார்க்க மாட்டீர்கள்’ என்று அவர் சொன்னபோது அவர்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.+
38 அதனால், அவர்கள் எல்லாரும் கதறி அழுது, அவரைக் கட்டிப்பிடித்து, பாசத்தோடு முத்தம் கொடுத்தார்கள். பின்பு, அவரை வழியனுப்ப கப்பல்வரை அவர் கூடவே போனார்கள்.
அடிக்குறிப்புகள்
^ இங்கே தரைத்தளத்தையும் சேர்த்து மூன்றாம் மாடி என்று சொல்லப்படுகிறது.
^ வே.வா., “இரத்தத்துக்கும்.”
^ நே.மொ., “அளவற்ற கருணையைப் பற்றிய செய்தியும்.”