அப்போஸ்தலரின் செயல்கள் 21:1-40

  • எருசலேமுக்குப் போகும் வழியில் (1-14)

  • எருசலேமுக்குப் போய்ச் சேருதல் (15-19)

  • மூப்பர்களின் ஆலோசனைப்படி பவுல் செய்கிறார் (20-26)

  • ஆலயத்தில் கலகம்; பவுல் கைது செய்யப்படுகிறார் (27-36)

  • கூட்டத்தாரிடம் பேச பவுலுக்கு அனுமதி கிடைக்கிறது (37-40)

21  அவர்களிடமிருந்து நாங்கள் பிரியாவிடை பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி நேராக கோஸ் நகரத்துக்குப் போனோம். அடுத்த நாள் ரோதுவுக்கும், அங்கிருந்து பத்தாராவுக்கும் போனோம்.  அங்கே பெனிக்கேவுக்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதில் ஏறிப் பயணம் செய்தோம்.  எங்களுக்கு இடது பக்கம் சீப்புரு தீவு தெரிந்தது. ஆனால், அங்கே போகாமல் சீரியாவை நோக்கிப் பயணம் செய்து தீருவில் இறங்கினோம். கப்பலிலிருந்த சரக்குகளை அங்கே இறக்க வேண்டியிருந்தது.  அங்கிருந்த சீஷர்களைத் தேடிக் கண்டுபிடித்து, ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்பட்டதால், எருசலேமுக்குள் காலெடுத்து வைக்க வேண்டாமென்று பவுலிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.+  அந்த ஏழு நாட்களுக்குப் பிறகு, அங்கிருந்து தொடர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்தோம். எங்களை வழியனுப்புவதற்கு அவர்கள் எல்லாரும் பெண்களோடும் பிள்ளைகளோடும் நகரத்துக்கு வெளியேவரை வந்தார்கள். கடற்கரையில் நாங்கள் மண்டிபோட்டு ஜெபம் செய்தோம்.  பின்பு, அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கப்பல் ஏறினோம். அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.  நாங்கள் தீரு நகரத்திலிருந்து பித்தொலோமாய் நகரத்துக்கு வந்து கப்பல் பயணத்தை முடித்துக்கொண்டோம். அங்கிருந்த சகோதரர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, அவர்களோடு ஒரு நாள் தங்கினோம்.  அடுத்த நாள் அங்கிருந்து புறப்பட்டு செசரியாவுக்குப் போனோம். நற்செய்தியாளரான பிலிப்புவின் வீட்டுக்குப் போய் அவரோடு தங்கினோம். முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு ஆண்களில் அவரும் ஒருவர்.+  திருமணமாகாத நான்கு மகள்கள் அவருக்கு இருந்தார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தார்கள்.+ 10  அங்கே நாங்கள் பல நாட்கள் தங்கியிருந்தபோது, அகபு+ என்ற தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தார். 11  அவர் எங்களிடம் வந்து, பவுலின் இடுப்புவாரை எடுத்து தன்னுடைய கால்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு, “கடவுளுடைய சக்தி சொல்வது என்னவென்றால், ‘இந்த இடுப்புவார் யாருக்குச் சொந்தமோ அவரை யூதர்கள் எருசலேமில் இப்படிக் கட்டி,+ மற்ற தேசத்து மக்களின் கைகளில் ஒப்படைப்பார்கள்’”+ என்று சொன்னார். 12  இதைக் கேட்டபோது எருசலேமுக்குப் போக வேண்டாமென்று நாங்களும் அங்கிருந்தவர்களும் பவுலைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். 13  அதற்கு பவுல், “ஏன் இப்படி அழுது என்னை மனம்தளர வைக்கிறீர்கள்? எஜமானாகிய இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கைது செய்யப்படுவதற்கு மட்டுமல்ல, சாவதற்குக்கூட தயாராக இருக்கிறேன்”+ என்று சொன்னார். 14  நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை; அதனால், “யெகோவாவுடைய* விருப்பப்படி* நடக்கட்டும்” என்று சொல்லி அமைதியாகிவிட்டோம். 15  அந்த நாட்களுக்குப் பின்பு, பயண ஏற்பாடுகளைச் செய்து, எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16  செசரியாவிலிருந்து சில சீஷர்களும் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச் சேர்ந்த மினாசோன் என்ற ஆரம்பக் கால சீஷர் ஒருவருடைய வீட்டில் விருந்தாளிகளாகத் தங்குவதற்கு எங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள். 17  நாங்கள் எருசலேமுக்குப் போய்ச் சேர்ந்தபோது, சகோதரர்கள் எங்களைச் சந்தோஷமாக வரவேற்றார்கள். 18  அடுத்த நாள், பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு யாக்கோபைப்+ பார்க்கப் போனார். அங்கே மூப்பர்கள் எல்லாரும் வந்திருந்தார்கள். 19  அப்போது அவர்களுக்கு அவர் வாழ்த்துச் சொல்லிவிட்டு, தன் ஊழியத்தின் மூலம் மற்ற தேசத்து மக்கள் மத்தியில் கடவுள் செய்த காரியங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார். 20  அதைக் கேட்டதும் அங்கே இருந்தவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்; பின்பு அவரிடம், “சகோதரரே, யூதர்களில் எத்தனையோ ஆயிரம் பேர் இயேசுவின் சீஷர்களாகியிருப்பது உங்களுக்கே தெரியும்; அவர்கள் எல்லாரும் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் வைராக்கியமாக இருக்கிறார்கள்.+ 21  ஆனால், மற்ற தேசத்து மக்கள் மத்தியில் வாழும் யூதர்களிடம் அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யவோ நம்முடைய சம்பிரதாயங்களின்படி நடக்கவோ கூடாது என்று சொல்லி, மோசேயின் திருச்சட்டத்தைவிட்டு விலகுமாறு* நீங்கள் கற்பிக்கிறீர்கள்+ என்ற வதந்தியை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். 22  இப்போது என்ன செய்வது? நீங்கள் இங்கே வந்திருப்பது எப்படியும் அவர்களுக்குத் தெரியவரும். 23  அதனால் நாங்கள் சொல்கிறபடி செய்யுங்கள்: கடவுளிடம் நேர்ந்துகொண்ட நான்கு ஆண்கள் இப்போது எங்களோடு இருக்கிறார்கள். 24  அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து நீங்களும் தூய்மைச் சடங்கு செய்துகொள்ளுங்கள். அவர்கள் தலைச்சவரம் செய்துகொள்வதற்கு ஆகும் எல்லா செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட விஷயமெல்லாம் வெறும் வதந்தி என்பதையும், நீங்கள் நல்ல நடத்தை உள்ளவர் என்பதையும், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதையும் எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.+ 25  இயேசுவின் சீஷர்களாகியிருக்கிற மற்ற தேசத்து மக்களைப் பொறுத்ததில், உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதற்கும்+ இரத்தத்துக்கும்+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்*+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ விலகியிருக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதி அனுப்பியிருக்கிறோம்” என்று சொன்னார்கள். 26  அடுத்த நாள் பவுல் அந்த ஆண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து அவரும் தூய்மைச் சடங்கு செய்துகொண்டார்.+ அதன் பின்பு, தூய்மைச் சடங்கு நாட்கள் எப்போது முடிவுக்கு வரும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் எப்போது காணிக்கை செலுத்தப்பட வேண்டுமென்றும் சொல்வதற்காக ஆலயத்துக்குள் போனார். 27  அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் சமயத்தில், ஆசியாவிலிருந்து வந்திருந்த யூதர்கள் சிலர் அவரை ஆலயத்தில் பார்த்து, கூட்டத்தாரைத் தூண்டிவிட்டு, அவரைப் பிடித்துக்கொண்டு, 28  “இஸ்ரவேல் மக்களே, ஓடி வாருங்கள்! இந்த ஆள்தான் எங்கும் போய் நம்முடைய மக்களுக்கும் நம்முடைய திருச்சட்டத்துக்கும் இந்த இடத்துக்கும் விரோதமாக எல்லாருக்கும் கற்பித்து வருகிறான். கிரேக்கர்களைக்கூட ஆலயத்துக்குள் கூட்டிக்கொண்டுவந்து இந்தப் பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தியிருக்கிறான்”+ என்று கத்தினார்கள். 29  ஏனென்றால், எபேசுவைச் சேர்ந்த துரோப்பீமு+ என்பவரை பவுலோடு நகரத்தில் அவர்கள் பார்த்திருந்தார்கள். பவுல் அவரை ஆலயத்துக்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். 30  நகரம் முழுவதும் ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது. மக்கள் கூட்டமாக ஓடிவந்து பவுலைப் பிடித்து, ஆலயத்துக்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். கதவுகள் உடனடியாக மூடப்பட்டன. 31  அவர்கள் அவரை அடித்துக் கொல்ல முயற்சி செய்தபோது, எருசலேம் முழுவதும் குழப்பத்தில் இருக்கிறது என்ற செய்தி படைப்பிரிவின் தளபதிக்கு* தெரியவந்தது. 32  உடனே அவர் படைவீரர்களையும் படை அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு அவர்களிடம் இறங்கி ஓடிவந்தார். படைத் தளபதியையும் படைவீரர்களையும் பார்த்தவுடனே, பவுலை அடிப்பதை அவர்கள் நிறுத்தினார்கள். 33  அப்போது, படைத் தளபதி பவுலுக்குப் பக்கத்தில் போய் அவரைக் கைது செய்து, அவரை இரண்டு சங்கிலிகளால் கட்டும்படி கட்டளையிட்டார்.+ பின்பு, அவர் யார் என்றும், என்ன செய்தார் என்றும் விசாரித்தார். 34  ஆனால், கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகக் கத்த ஆரம்பித்தார்கள். அங்கே கூச்சலும் குழப்பமுமாக இருந்ததால் அவரால் எதையும் சரியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதனால், பவுலைப் படைவீரர்களின் குடியிருப்புக்குக் கொண்டுவரச் சொல்லிக் கட்டளையிட்டார். 35  பவுல் படிக்கட்டுகளில் ஏறியபோது கூட்டத்தார் வெறித்தனமாக நடந்துகொண்டதால் படைவீரர்கள் அவரைத் தூக்கிக்கொண்டு போக வேண்டியிருந்தது. 36  அப்போது அந்தக் கூட்டத்தார், “அவனை ஒழித்துக்கட்டுங்கள்!” என்று கத்திக்கொண்டே பின்னால் வந்தார்கள். 37  பவுல், படைவீரர்களின் குடியிருப்புக்குள் போகவிருந்த சமயத்தில் படைத் தளபதியிடம், “நான் உங்களிடம் ஒன்று சொல்லலாமா?” என்று கேட்டார். அதற்கு அவர், “கிரேக்க மொழிகூட உனக்குத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, 38  “சில காலத்துக்கு முன்பு, ஒரு கலகத்தை மூட்டி, 4,000 கொலைகாரர்களை வனாந்தரத்துக்குக் கொண்டுபோன எகிப்தியன் நீதானே?” என்று கேட்டார். 39  அப்போது பவுல், “நான் உண்மையில் ஒரு யூதன்.+ சிலிசியாவில் உள்ள தர்சு நகரத்தைச் சேர்ந்தவன்.+ புகழ்பெற்ற அந்த நகரத்தின் குடிமகன். அதனால், இந்த மக்களிடம் பேச இப்போது எனக்கு அனுமதி கொடுக்கும்படி உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்” என்றார். 40  அவர் அனுமதி கொடுத்தபோது, பவுல் படிக்கட்டில் நின்றுகொண்டு மக்களிடம் சைகை காட்டினார். மிகுந்த அமைதி உண்டானதும் எபிரெய மொழியில்+ பேச ஆரம்பித்தார்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “சித்தத்தின்படி.”
நே.மொ., “விசுவாசதுரோகியாக ஆகுமாறு.”
வே.வா., “இரத்தம் வடிக்காமல் கொல்லப்பட்டதற்கும்.”
அதாவது, “1,000 படைவீரர்களின் தளபதிக்கு.”