அப்போஸ்தலரின் செயல்கள் 25:1-27

  • பெஸ்துவுக்கு முன்னால் பவுல் விசாரிக்கப்படுகிறார் (1-12)

    • “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” (11)

  • அகிரிப்பா ராஜாவிடம் பெஸ்து ஆலோசனை கேட்கிறார் (13-22)

  • அகிரிப்பா முன்னால் பவுல் (23-27)

25  மாகாணத்துக்கு வந்து ஆளுநராகப் பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பின்பு, பெஸ்து+ செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனார்.  முதன்மை குருமார்களும் பிரபலமான யூத ஆண்களும் பவுலைப் பற்றி அவரிடம் புகார் செய்தார்கள்.+  பவுலை மறுபடியும் எருசலேமுக்கு அனுப்பி வைத்துத் தங்களுக்குத் தயவு காட்டும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். ஏனென்றால், வழியில் பதுங்கியிருந்து அவரைக் கொன்றுபோட அவர்கள் திட்டம் போட்டிருந்தார்கள்.+  ஆனால் பெஸ்து, “பவுல் செசரியாவிலேயே காவலில் இருக்க வேண்டும். நானும் சீக்கிரத்தில் அங்கே போவேன்.  அவன் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் தலைவர்கள் என்னோடு வந்து அவன்மேல் குற்றம்சாட்டட்டும்”+ என்று சொன்னார்.  பெஸ்து எட்டு அல்லது பத்து நாட்கள்வரை அவர்களோடு தங்கிவிட்டு செசரியாவுக்குப் போனார். அடுத்த நாள் நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்துகொண்டு, பவுலை அழைத்து வரும்படி கட்டளை கொடுத்தார்.  பவுல் உள்ளே வந்தபோது எருசலேமிலிருந்து வந்திருந்த யூதர்கள் அவரைச் சுற்றி நின்று, பயங்கரமான குற்றச்சாட்டுகள் பலவற்றை அவர்மேல் சுமத்தினார்கள். ஆனால், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை.+  அப்போது பவுல், “யூதர்களுடைய திருச்சட்டத்துக்கோ ஆலயத்துக்கோ ரோம அரசனுக்கோ* விரோதமாக நான் எந்தப் பாவமும் செய்யவில்லை”+ என்று சொன்னார்.  பெஸ்து யூதர்களுடைய தயவைப் பெற விரும்பியதால்,+ “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே என் முன்னால் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிக்கப்பட விரும்புகிறாயா?” என்று பவுலிடம் கேட்டார். 10  அதற்கு பவுல், “நான் ரோம அரசனுடைய* நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் நிற்கிறேன். இங்குதான் என்னை விசாரிக்க வேண்டும். யூதர்களுக்கு நான் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. இது உங்களுக்கே நன்றாகத் தெரியவந்திருக்கும். 11  நான் உண்மையிலேயே கெட்டவனாக இருந்து மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால்,+ சாவதற்குக்கூட தயங்க மாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லையென்றால், என்னை இவர்களிடம் ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”+ என்று சொன்னார். 12  அப்போது, பெஸ்து தன்னுடைய ஆலோசகர் குழுவிடம் கலந்துபேசிவிட்டு, “ரோம அரசனிடம்* நீ மேல்முறையீடு செய்திருக்கிறாய். அதனால் ரோம அரசனிடமே நீ போகலாம்” என்று சொன்னார். 13  சில நாட்களுக்குப் பின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைச் சந்தித்து வாழ்த்துச் சொல்ல செசரியாவுக்கு வந்தார்கள். 14  அவர்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்ததால், பவுலுக்கு எதிரான வழக்கைப் பற்றி ராஜாவிடம் பெஸ்து இப்படிச் சொன்னார்: “பேலிக்ஸ் கைதியாக விட்டுச்சென்ற ஒரு மனுஷன் இருக்கிறான். 15  நான் எருசலேமில் இருந்தபோது யூதர்களுடைய முதன்மை குருமார்களும் பெரியோர்களும்* அவனைப் பற்றி என்னிடம் புகார் செய்து,+ அவனுக்குத் தண்டனை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். 16  அப்போது நான், ‘குற்றம்சாட்டப்படுகிற எந்த மனுஷனுக்கும் குற்றம்சாட்டியவர்கள் முன்னால் நேருக்கு நேர் நின்று தன்னுடைய வாதத்தைச் சொல்ல வாய்ப்புக் கொடுக்க வேண்டும்; அப்படி வாய்ப்புக் கொடுப்பதற்கு முன்பு, குற்றம்சாட்டியவர்களுடைய விருப்பப்படி அவர்களிடமே அவனை ஒப்படைப்பது ரோமரின் வழக்கம் அல்ல’+ என்று சொன்னேன். 17  அதனால் அவர்கள் இங்கே வந்தபோது, நான் தாமதிக்காமல் அடுத்த நாளே நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்து அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். 18  குற்றம்சாட்டியவர்கள் எழுந்து பேசியபோது, நான் நினைத்த அளவுக்குப் பயங்கரமான குற்றச்சாட்டுகள் எதையும் அவன்மேல் அவர்கள் சுமத்தவில்லை.+ 19  தங்களுடைய தெய்வத்தை வணங்கும் முறையை* பற்றியும்,+ இயேசு என்ற மனுஷனைப் பற்றியும் மட்டுமே பவுலோடு அவர்களுக்குச் சில வாக்குவாதங்கள் இருந்தன. இறந்துபோன அந்த நபர் இன்னும் உயிரோடிருப்பதாக பவுல் சாதித்துக்கொண்டிருந்தான்.+ 20  இந்த விவாதத்தை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் நான் குழம்பிப்போனதால், ‘நீ எருசலேமுக்குப் போய் அங்கே இந்த விஷயங்களைப் பற்றி விசாரிக்கப்பட விரும்புகிறாயா?’ என்று அவனிடம் கேட்டேன்.+ 21  ஆனால், அவன் தன் வழக்கை மாண்புமிக்கவரே*+ விசாரித்துத் தீர்ப்பளிக்கும்வரை தன்னைக் காவலில் வைக்க வேண்டுமென மேல்முறையீடு செய்தான். அதனால், அவனை ரோம அரசனிடம் அனுப்பும்வரை காவலில் வைக்கும்படி கட்டளை கொடுத்தேன்” என்று சொன்னார். 22  அதற்கு அகிரிப்பா, “அவன் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன்”+ என்று பெஸ்துவிடம் சொன்னார். அதற்கு அவர், “அவன் பேசுவதை நாளைக்கு நீங்கள் கேட்கலாம்” என்று சொன்னார். 23  அடுத்த நாள் அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் ஆடம்பரமாக விசாரணை மன்றத்துக்கு வந்தார்கள். படைத் தளபதிகளும் நகரத்திலிருந்த முக்கியப் பிரமுகர்களும் அவர்களோடு வந்தார்கள். பின்பு, பெஸ்துவின் கட்டளைப்படி பவுல் அங்கே கொண்டுவரப்பட்டார். 24  அப்போது பெஸ்து, “அகிரிப்பா ராஜாவே, எங்களோடு இங்கு கூடியிருப்பவர்களே, நீங்கள் பார்க்கிற இந்த மனுஷனுக்கு எதிராக எருசலேமிலும் இங்கேயும் யூதர்கள் எல்லாரும் என்னிடம் முறையிட்டார்கள், இவனை உயிரோடு விட்டுவைக்கக் கூடாதென்று கூச்சல் போட்டார்கள்.+ 25  ஆனால், மரண தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தையும் இவன் செய்யவில்லை என்பதை நான் தெரிந்துகொண்டேன்.+ அதனால் இவன் மாண்புமிக்கவரிடம் மேல்முறையீடு செய்தபோது, அவரிடம் அனுப்பத் தீர்மானித்தேன். 26  ஆனாலும், இவனைப் பற்றி என் எஜமானுக்குத் திட்டவட்டமாக எழுத என்னிடம் எதுவும் இல்லை. அதனால், நியாயவிசாரணைக்குப் பிறகு இவனைப் பற்றி எழுத எனக்கு ஏதாவது விஷயம் கிடைக்குமென்று நினைத்து இவனை உங்கள் எல்லாருக்கும் முன்னால், குறிப்பாக அகிரிப்பா ராஜாவே உங்கள் முன்னால், கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறேன். 27  ஒரு கைதியின் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றிக் குறிப்பிடாமலேயே அவனை அனுப்புவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சீஸருக்கோ.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “சீஸருடைய.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ. “சீஸரிடம்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “மூப்பர்களும்.”
வே.வா., “தங்களுடைய மதத்தை.”
வே.வா., “அகஸ்து.” இது நான்காம் ரோம அரசனான நீரோவின் பட்டப்பெயர்; இந்தப் பட்டப்பெயரை வைத்திருந்த முதலாம் ரோம அரசன் ஆக்டேவியன்.