அப்போஸ்தலரின் செயல்கள் 26:1-32
26 அகிரிப்பா+ பவுலிடம், “இப்போது உன் தரப்பில் பேச அனுமதி தருகிறேன்” என்றார். அப்போது பவுல் தன்னுடைய கையை நீட்டி, தன் தரப்பில் பேச ஆரம்பித்தார்:
2 “அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்தும் எல்லா குற்றச்சாட்டுகளையும்+ பற்றி இன்று உங்கள் முன்னால் பேச வாய்ப்புக் கிடைத்ததற்காகச் சந்தோஷப்படுகிறேன்.
3 முக்கியமாக, யூதர்களுடைய சம்பிரதாயங்களையும் அவர்கள் மத்தியில் இருக்கிற சர்ச்சைகளையும் பற்றி நீங்கள் மிக நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதற்காகச் சந்தோஷப்படுகிறேன். அதனால், நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
4 இளமைப் பருவம்முதல் நான் எருசலேமில் என்னுடைய மக்கள் மத்தியில் எப்படி வாழ்ந்துவந்தேன் என்று ஆரம்பத்திலிருந்து என்னோடு பழகிய யூதர்கள் எல்லாருக்கும் தெரியும்.+
5 எங்கள் மதத்தின் மிகக் கண்டிப்பான பரிசேயப் பிரிவின்படி+ பரிசேயனாக வாழ்ந்தேன்;+ வேண்டுமானால் அவர்களே இதைப் பற்றிச் சாட்சி சொல்லட்டும்.
6 ஆனாலும், எங்கள் முன்னோர்களுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்ததால்தான்+ இப்போது விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருக்கிறேன்.
7 அந்த வாக்குறுதி நிறைவேறும் என்ற நம்பிக்கையில் எங்கள் 12 கோத்திரத்தாரும் ராத்திரி பகலாக முழு மூச்சோடு பரிசுத்த சேவை செய்து வருகிறார்கள். ராஜாவே, இந்த நம்பிக்கையைக் குறித்துதான் யூதர்கள் என்மேல் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.+
8 இறந்தவர்களைக் கடவுள் உயிரோடு எழுப்புவார் என்பதை ஏன் நம்ப முடியாத விஷயமென்று நினைக்கிறீர்கள்?
9 நாசரேத்தூர் இயேசுவின் பெயருக்கு விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டும் என்பதில் நானும்கூட உறுதியாக இருந்தேன்.
10 அதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். முதன்மை குருமார்களிடமிருந்து அதிகாரம் பெற்று,+ பரிசுத்தவான்கள் பலரைச் சிறையில் அடைத்தேன்.+ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கச் சம்மதம் தெரிவித்தேன்.
11 எல்லா ஜெபக்கூடங்களுக்கும் போய் அவர்களைப் பல தடவை தண்டித்தேன், விசுவாசத்தை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தினேன். அவர்கள்மேல் பயங்கர வெறியோடு இருந்ததால் வேறு நகரங்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்.
12 இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, முதன்மை குருமார்களிடமிருந்து அதிகாரமும் உத்தரவும் பெற்றுக்கொண்டு தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
13 போகும் வழியில், மத்தியான நேரத்தில், ராஜாவே, சூரிய ஒளியைவிட மிகப் பிரகாசமான ஒரு ஒளி வானத்திலிருந்து வந்து, என்னையும் என்னோடு இருந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது.+
14 நாங்கள் எல்லாரும் தரையில் விழுந்தோம். அப்போது ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தார்க்கோலை* உதைத்துக்கொண்டே இருப்பது உனக்குத்தான் கேடு’ என்று எபிரெய மொழியில் சொல்வதைக் கேட்டேன்.
15 அதற்கு நான், ‘எஜமானே, நீங்கள் யார்?’ என்று கேட்டேன். அப்போது அவர், ‘நீ துன்புறுத்துகிற இயேசு நான்தான்.
16 இப்போது எழுந்து நில். என்னுடைய ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை நியமிப்பதற்காகத்தான் உன் முன்னால் தோன்றியிருக்கிறேன். இப்போது நீ பார்த்த விஷயங்களையும், இனி நான் உனக்குக் காட்டப்போகிற விஷயங்களையும் பற்றி நீ சாட்சி கொடுக்க வேண்டும்.+
17 இந்தத் தேசத்தாரிடமும் மற்ற தேசத்து மக்களிடமும் நான் உன்னை அனுப்புவேன்,+ அவர்களால் வரும் ஆபத்துகளிலிருந்து உன்னைக் காப்பாற்றுவேன்.
18 நீ அவர்களை இருளிலிருந்து+ ஒளியிடமும்+ சாத்தானின் பிடியிலிருந்து+ கடவுளிடமும் திருப்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்க வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் என்மேல் விசுவாசம் வைத்து பாவங்களிலிருந்து மன்னிப்பையும்,+ புனிதமாக்கப்பட்டோருக்குரிய சொத்தையும் பெறுவார்கள்’ என்று சொன்னார்.
19 அதனால் அகிரிப்பா ராஜாவே, வானத்திலிருந்து தோன்றிய காட்சியைப் பார்த்தபோது எனக்குக் கிடைத்த கட்டளைக்கு நான் உடனடியாகக் கீழ்ப்படிந்தேன்.
20 அதனால், மனம் திருந்த வேண்டுமென்றும், மனம் திருந்தியதைச்+ செயலில் காட்டி கடவுள் பக்கம் வர வேண்டுமென்றும் அறிவித்தேன். முதலில் தமஸ்குவிலும்,+ பின்பு எருசலேமிலும்,+ அதன்பின் யூதேயா தேசத்தார் எல்லாருக்கும், மற்ற தேசத்தாருக்கும் அறிவித்தேன்.
21 இதனால்தான், யூதர்கள் என்னை ஆலயத்தில் பிடித்துக் கொல்லப் பார்த்தார்கள்.+
22 ஆனாலும், கடவுள் எனக்கு உதவி செய்ததால் இந்த நாள்வரை சாதாரண ஆட்களுக்கும் பெரிய ஆட்களுக்கும் சாட்சி கொடுத்து வருகிறேன். தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் மோசேயின் புத்தகங்களிலும் முன்கூட்டியே சொல்லப்பட்டதைப் பற்றித்தான் சாட்சி கொடுத்து வருகிறேனே தவிர, வேறொன்றைப் பற்றியும் அல்ல.+
23 கிறிஸ்து பாடுகள் பட வேண்டும்+ என்றும், இறந்தவர்களில் முதலாவதாக உயிர்த்தெழுப்பப்பட்டு+ இந்த மக்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் ஒளியைப் பற்றித் தெரிவிப்பார்+ என்றும் அவற்றில் சொல்லப்பட்டதைப் பற்றித்தான் அறிவித்து வருகிறேன்.”
24 பவுல் இப்படித் தன் தரப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பெஸ்து சத்தமாக, “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! அதிக படிப்பு உன்னைப் பைத்தியக்காரனாக்கிவிட்டது!” என்று சொன்னார்.
25 ஆனால் பவுல், “மாண்புமிகு பெஸ்து அவர்களே, எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை, நான் சத்திய வார்த்தைகளைத்தான் பேசுகிறேன், தெளிவாக யோசித்துதான் பேசுகிறேன்.
26 உண்மையில், இந்த விஷயங்களைப் பற்றி ராஜாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், தயக்கமில்லாமல் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த விஷயங்களில் ஒன்றுகூட அவருடைய கவனத்தில் படாமல் போயிருக்காது என்பதை உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், இதெல்லாம் ஏதோவொரு மூலையில் நடக்கவில்லை.+
27 அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்களா? நம்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னார்.
28 அப்போது அகிரிப்பா, “இப்படிப் பக்குவமாகப் பேசிப்பேசி கொஞ்ச நேரத்தில் என்னையும் கிறிஸ்தவனாக மாற்றிவிடுவாய் போலிருக்கிறதே” என்று பவுலிடம் சொன்னார்.
29 அதற்கு பவுல், “கொஞ்ச நேரத்திலோ அதிக நேரத்திலோ, நீங்கள் மட்டுமல்ல இன்று நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லாருமே இந்தக் கைவிலங்குகள் மட்டும் இல்லாமல் என்னைப் போல ஆக வேண்டும் என்றுதான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று சொன்னார்.
30 பின்பு, ராஜாவும் ஆளுநரும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
31 அங்கிருந்து வெளியே போய், “இந்த மனுஷன் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை”+ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
32 பின்பு பெஸ்துவிடம் அகிரிப்பா, “இந்த மனுஷன் ரோம அரசனிடம்* மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால் இவனை விடுதலை செய்திருக்கலாம்”+ என்று சொன்னார்.