அப்போஸ்தலரின் செயல்கள் 27:1-44

  • பவுல் ரோமுக்குக் கப்பலில் பயணம் செய்கிறார் (1-12)

  • கப்பலைப் புயல் தாக்குகிறது (13-38)

  • கப்பற்சேதம் (39-44)

27  நாங்கள் இத்தாலிக்குக் கப்பல் ஏறிப்போக வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்து,+ பவுலையும் வேறு சில கைதிகளையும் அகஸ்து படைப்பிரிவைச் சேர்ந்த யூலியு என்ற படை அதிகாரியிடம் ஒப்படைத்தார்கள்.  அதிரமித்தியம் நகரத்திலிருந்து வந்த கப்பல் ஆசிய மாகாணத்தின் கரையோரமாக இருக்கிற துறைமுகங்களுக்குப் போகவிருந்தது. அந்தக் கப்பலில் நாங்கள் ஏறினோம். தெசலோனிக்கே நகரத்தைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு+ என்ற மக்கெதோனியரும் எங்களோடு இருந்தார்.  அடுத்த நாள் சீதோனுக்குப் போய்ச் சேர்ந்தோம். பவுலை யூலியு மனிதாபிமானத்தோடு நடத்தினார். அதோடு, பவுல் தன்னுடைய நண்பர்களைப் போய்ப் பார்ப்பதற்கும் அவர்களுடைய உதவியைப் பெறுவதற்கும் அனுமதி கொடுத்தார்.  பின்பு, அங்கிருந்து கப்பலில் புறப்பட்டோம். எதிர்க்காற்று வீசியதால் சீப்புரு தீவைச் சுற்றி, காற்று அதிகம் அடிக்காத பக்கமாகப் பயணம் செய்தோம்.  அதன் பின்பு சிலிசியா, பம்பிலியா ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள கடல் வழியாகப் போய், லீசியாவில் இருக்கிற மீறா துறைமுகத்தை அடைந்தோம்.  அங்கே படை அதிகாரி, இத்தாலிக்குப் போகும் அலெக்சந்திரியா நகரத்துக் கப்பலைப் பார்த்து, அதில் எங்களை ஏற்றினார்.  பல நாட்கள் மெதுவாகவே பயணம் செய்த பின்பு, கஷ்டப்பட்டு கினீது நகரத்துக்கு வந்துசேர்ந்தோம். எதிர்க்காற்று வீசியதால் தொடர்ந்து போக முடியாமல், சல்மோனே முனையைக் கடந்து கிரேத்தா தீவைச் சுற்றி, காற்று அதிகம் அடிக்காத பக்கமாகப் பயணம் செய்தோம்.  கரையோரமாகவே கஷ்டப்பட்டுப் பயணம் செய்து, லசேயா நகரத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ‘நல்ல துறைமுகம்’ என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தோம்.  இதற்குள் பல நாட்கள் ஆகிவிட்டன; பாவப் பரிகார விரத நாளும்*+ ஏற்கெனவே கடந்துவிட்டதால் பயணம் செய்வது ஆபத்தாக இருந்தது. அதனால் அவர்களுக்கு பவுல் ஓர் ஆலோசனையைச் சொல்லி, 10  “நண்பர்களே, இந்தப் பயணத்தால் கப்பலுக்கும் அதில் இருக்கிற சரக்குகளுக்கும் பயங்கர சேதமும் இழப்பும் ஏற்படும், நம் உயிருக்கும்கூட ஆபத்து ஏற்படும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார். 11  ஆனால் படை அதிகாரி, பவுலின் பேச்சைக் கேட்காமல் கப்பல் தலைவருடைய பேச்சையும் கப்பல் உரிமையாளருடைய பேச்சையும்தான் கேட்டார். 12  குளிர் காலத்தில் தங்குவதற்கு அந்தத் துறைமுகம் வசதியாக இல்லாததால், அங்கிருந்து எப்படியாவது கிரேத்தா தீவுக்குப் பயணம் செய்து, வடகிழக்கையும் தென்கிழக்கையும் நோக்கியிருந்த பேனிக்ஸ் துறைமுகத்தில் குளிர் காலத்தைக் கழிக்கலாம் என்று பெரும்பாலோர் ஆலோசனை சொன்னார்கள். 13  தென்திசைக் காற்று மென்மையாக வீசியபோது, தங்களுடைய எண்ணம் கைகூடியதாக அவர்கள் நினைத்தார்கள். அதனால், நங்கூரத்தைத் தூக்கிவிட்டு கிரேத்தா தீவின் கரையோரமாகப் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். 14  ஆனால் கொஞ்ச நேரத்துக்குள், அந்தத் தீவில் யூரோக்கிலோ* என்ற கடும் புயல்காற்று வீசியது. 15  கப்பல் அதில் பயங்கரமாகச் சிக்கிக்கொண்டதால், காற்றை எதிர்த்து கப்பலை ஓட்ட முடியவில்லை. அதனால், காற்று வீசிய திசையிலேயே அது அடித்துச் செல்லப்படும்படி விட்டுவிட்டோம். 16  அதன் பின்பு, கிலவுதா என்ற சின்னத் தீவைச் சுற்றி, காற்று அதிகம் அடிக்காத பக்கமாகப் பயணம் செய்தோம். ஆனாலும், கப்பலின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருந்த சின்னப் படகைத் தூக்குவது எங்களுக்குப் பெரும் பாடாக இருந்தது. 17  எப்படியோ அவர்கள் அதைத் தூக்கிக் கப்பலில் வைத்தார்கள். பின்பு, கயிறு முதலியவற்றைப் பயன்படுத்தி கப்பலைக் கட்டினார்கள். அதன் பின்பு, சிர்ட்டிஸ்* மணல்திட்டில் கப்பல் சிக்கிக்கொள்ளும் என்று பயந்து, கப்பற்பாயின் கயிறுகளை அவிழ்த்து, காற்றின் போக்கிலேயே கப்பலைப் போகும்படி விட்டுவிட்டார்கள். 18  இருந்தாலும், புயல்காற்று எங்களைப் பயங்கரமாக அலைக்கழித்ததால், அடுத்த நாள் கப்பலின் எடையை அவர்கள் குறைக்க ஆரம்பித்தார்கள். 19  மூன்றாம் நாள், தங்களுடைய கையாலேயே கப்பற்பாய்ச் சாதனங்களை வீசியெறிந்தார்கள். 20  பல நாட்களுக்குச் சூரியனோ நட்சத்திரங்களோ தெரியவில்லை, பயங்கர புயல்காற்று எங்களைத் தாக்கிக்கொண்டே இருந்தது. தப்பிப்பிழைப்போம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. 21  பல நாட்களாக அவர்கள் சாப்பிடாமல் இருந்ததால், பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று, “நண்பர்களே, நீங்கள் என் ஆலோசனையைக் கேட்டு, கிரேத்தா தீவைவிட்டுப் புறப்படாமல் இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தச் சேதமும் இழப்பும் ஏற்பட்டிருக்காது.+ 22  ஆனாலும், தைரியமாக இருக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள், கப்பல் மட்டும்தான் சேதமடையும். 23  என்மேல் உரிமையுள்ளவரும் நான் பரிசுத்த சேவை செய்கிறவருமான கடவுள் தன்னுடைய தூதரை+ அனுப்பினார். அவர் நேற்று ராத்திரி என் பக்கத்தில் வந்து நின்று, 24  ‘பவுலே, பயப்படாதே. நீ ரோம அரசனுக்கு* முன்னால் நிற்க வேண்டும்.+ இதோ! உன்னோடு பயணம் செய்கிற எல்லாருடைய உயிரையும் கடவுள் காப்பாற்றுவார்’ என்று சொன்னார். 25  அதனால் நண்பர்களே, தைரியமாக இருங்கள். கடவுள்மேல் நான் நம்பிக்கையாக இருக்கிறேன், என்னிடம் சொல்லப்பட்டபடியே நடக்கும். 26  ஆனாலும், நாம் ஏதாவது ஒரு தீவில் தள்ளப்படுவோம்”+ என்று சொன்னார். 27  பதினான்காம் நாள் ராத்திரி நேரத்தில் ஆதிரியா கடலில் எங்கள் கப்பல் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டது. நடுராத்திரியில் கப்பல் ஏதோவொரு கரையை நெருங்குவதுபோல் கப்பலோட்டிகளுக்குத் தோன்றியது. 28  அப்போது, அவர்கள் கடலின் ஆழத்தை ஆழமானியால் அளந்து 20 ஆழம்* என்று தெரிந்துகொண்டார்கள். கொஞ்சத் தூரம் போனதும் மறுபடியும் ஆழமானியால் அளந்து 15 ஆழம்* என்று தெரிந்துகொண்டார்கள். 29  பாறைகளில் மோதிவிடுவோமோ என்று பயந்து கப்பலின் பின்புறத்திலிருந்து நான்கு நங்கூரங்களை இறக்கி, பொழுது விடிவதற்காக ஏக்கத்தோடு காத்திருந்தார்கள். 30  ஆனால், கப்பலோட்டிகள் கப்பலிலிருந்து தப்பித்துப்போவதற்கு வழிதேட ஆரம்பித்தார்கள். அதற்காக, கப்பலின் முன்புறத்திலிருந்து நங்கூரங்களை இறக்குவதுபோல் நடித்து அதிலிருந்த சின்னப் படகைக் கடலில் இறக்கிக்கொண்டிருந்தார்கள். 31  அப்போது பவுல், படை அதிகாரியையும் படைவீரர்களையும் பார்த்து, “இந்த ஆட்கள் கப்பலிலேயே இருந்தால்தான் உங்களால் தப்பிப்பிழைக்க முடியும்”+ என்று சொன்னார். 32  அதனால், படைவீரர்கள் அந்தச் சின்ன படகு கட்டப்பட்டிருந்த கயிறுகளை அறுத்து, அதைக் கடலில் விட்டுவிட்டார்கள். 33  பொழுது விடியப்போகும் நேரத்தில், பவுல் எல்லாரையும் பார்த்து, “இன்று 14-வது நாளாக நீங்கள் எதுவுமே சாப்பிடாமல் கவலையோடு காத்துக்கொண்டிருக்கிறீர்கள். 34  அதனால், ஏதாவது சாப்பிடும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பிழைக்க வேண்டுமென்ற அக்கறையில்தான் இதைச் சொல்கிறேன். உங்களில் யாருடைய தலையிலிருந்தும் ஒரு முடிகூட கீழே விழாது” என்று சொன்னார். 35  இப்படிச் சொல்லிவிட்டு, ரொட்டியை எடுத்து, எல்லாருக்கும் முன்னால் கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைப் பிட்டுச் சாப்பிட ஆரம்பித்தார். 36  அப்போது, அவர்கள் எல்லாரும் தைரியமடைந்து, சாப்பிட ஆரம்பித்தார்கள். 37  நாங்கள் மொத்தம் 276 பேர் கப்பலில் இருந்தோம். 38  அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்ட பின்பு, கப்பலிலிருந்த கோதுமையைக் கடலில் தூக்கியெறிந்து கப்பலின் எடையைக் குறைத்தார்கள்.+ 39  பொழுது விடிந்தபோது, எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அவர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.+ ஆனால், மணற்கரையுள்ள ஒரு விரிகுடாவைப் பார்த்தார்கள்; முடிந்தால் கப்பலை அந்தக் கரையில் சேர்க்கலாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். 40  அதனால், நங்கூரங்களை அறுத்து கடலில் விட்டார்கள்; அதேசமயம், சுக்கான் துடுப்புகளின் கட்டுகளை அவிழ்த்தார்கள்; முன்புற பாயைக் காற்றின் திசையில் உயர்த்திக் கட்டி, கப்பலை அந்தக் கரையை நோக்கி ஓட்டினார்கள். 41  ஆனால், எதிரோட்டங்களிடையே இருந்த மணல்திட்டில் அது சிக்கிக்கொண்டது. கப்பலின் முன்புறம் மண்ணுக்குள் புதைந்து அசையாமல் இருந்தது, அதன் பின்புறமோ அலைகள் வேகமாக அடித்ததால் துண்டு துண்டாக உடைய ஆரம்பித்தது.+ 42  கைதிகள் யாரும் நீந்திச்சென்று தப்பிவிடக் கூடாது என்பதற்காக அவர்களைக் கொன்றுபோட படைவீரர்கள் தீர்மானித்தார்கள். 43  ஆனால், படை அதிகாரி பவுலைக் காப்பாற்ற விரும்பியதால், அவர்களுடைய திட்டத்தை நிறைவேற்ற விடவில்லை. நீச்சல் தெரிந்தவர்கள் கடலில் குதித்து முதலில் கரை சேரும்படியும், 44  மற்றவர்கள் பலகைகளையோ கப்பலில் இருந்த பொருள்களையோ பிடித்துக்கொண்டு கரைசேரும்படியும் அவர் கட்டளையிட்டார். இப்படி, எல்லாருமே பத்திரமாகக் கரைசேர்ந்தோம்.+

அடிக்குறிப்புகள்

இது திஸ்ரி மாதத்தில், அதாவது செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில், வந்தது. மழையும் கடல் சீற்றமும் ஆரம்பிக்கிற காலமாக இருந்தது.
இது வடகிழக்குக் காற்று.
நே.மொ., “சீஸருக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
சுமார் 36 மீ. (120 அடி). இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
சுமார் 27 மீ. (90 அடி). இணைப்பு B14-ஐப் பாருங்கள்.